உள்ளடக்கத்துக்குச் செல்

யமஹா, டொரகுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொரகுசு யமஹா
பிறப்பு(1851-04-20)ஏப்ரல் 20, 1851
கீ மாகாணம், கிசு டொகுகவா (ஜப்பான் )
இறப்புஆகத்து 8, 1916(1916-08-08) (அகவை 65)
ஹமாமட்சு , ஜப்பான்
தேசியம்ஜப்பானியர்
அறியப்படுவதுயமஹா நிறுவனத்தன் நிறுவனர்

டொரகுசு யமஹா (山葉 寅楠 Yamaha Torakusu; மே 20, 1851, கீ மாகாணம், ஜப்பான் – ஆகத்து 8, 1916) அவர்கள் யமஹா நிறுவனத்தன் நிறுவனர் ஆவார்.

யமாஹா, 1887 ஆம் ஆண்டு தன் முதல் ரீட் ஆர்கன் இசைக் கருவியை உருவாக்கினார். பின் நிப்பான் கக்கி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனமே பின்னாளில் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யமாஹா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் மற்றும் இசை கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது.

பிறப்பு மற்றும் தொடக்க காலம்

[தொகு]

யமாஹா, கிசு டொகுகவா(தற்போதைய வகாயாமா) சாமுராய் குடும்பத்தில் பிறந்தார். மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எழுந்த ஆர்வத்தின் காரணமாக, தன் குடும்ப வழக்கத்திற்கு மாறாக பொறியியல் பயின்றார். வளர்ந்துவரும் கடிகாரத்தின் பிரபலத்தை அறிந்துகொண்ட யமாஹா, தனது 19 ஆம் வயதில் ஒரு கடிகார உற்பத்தி மற்றும் பழுதுநீக்கும் நிறுவனத்தை ஒசாகாவில் தொடங்கினார். அந்நிறுவனம் தோல்வியடைந்தது. பின் நாகாசாகியில் ஒரு பிரித்தானிய பொறியியலாளரிடம் பயின்று, மருத்துவ கருவிகளை பழுதுநீக்கும் பணிபுரிந்து வந்தார்.

முதல் இசைக்கருவி வடிவமைப்பு

[தொகு]

ஒரு சமயம், சிசுவகா பகுதியில் உள்ள ஹமாமட்சு நகரில் மருத்துவ கருவிகளைப் பழுதுநீக்கும் பணியில் இருந்து வந்தார். அந்நகரம் சற்று ஒதுக்குப்புறமானது. இசைக்கருவிகளை பழுதுநீக்கும் பணியாளர்கள் அங்கு இல்லை. அந்நகர பள்ளி ஒன்று, தன்னிடமிருந்த ஓர் அமெரிக்க தயாரிப்பு ரீட் ஆர்கன் இசைக் கருவியைப் பழுதுநீக்க முயலும்படி அவரை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடித்தார். ஜப்பானில் மேற்கத்திய இசைக்கருவிகளுக்கானச் சந்தையை உணர்ந்த யமாஹா, தன் முதல் ஆர்கனை 1887 ஆம் ஆண்டு வடிவமைத்தார். அக்கருவியைத் தானே தன் தோளில் ஹகோனே மலை வழியாக சுமந்து சென்று டோக்யோ இசை நிறுவனத்திடம் அளித்தார். வரலாற்று சிறப்புமிக்க அவரது இப்பயணம் ஒரு புடைப்பு சிற்பத்தின் வழியாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.

நிப்பான் கக்கி நிறுவனம்

[தொகு]

யமஹாவின் ஆர்கன் அதன் சுருதி பிழைகளுக்காகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. எனவே, இசை மற்றும் சுருதி அறிவியலை முறையாக பயின்று, நான்கு மாத கடும் உழைப்பிற்குப்பின் முழுமையான ஆர்கன் உருவம் பெற்றது. 1887 ஆம் ஆண்டு ஜப்பானின் முதல் மேற்கத்திய இசைக்கருவி தயாரிப்பு நிறுவனமான யமஹா ஃபுகின் (ஆர்கன்) தயாரிப்பு நிறுவனம் அவரால் தொடங்கப்பட்டது. இது 1889 ஆம் ஆண்டில் 100 ஊழியர்களைக் கொண்டு ஆண்டிற்கு 250 ஆர்கன்கள் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனமானது. இந்நிறுவனம் பின்னர் நிப்பான் கக்கி நிறுவனம் (ஜப்பான் இசைக்கருவி தயாரிப்பு நிறுவனம்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விரிவுபடுத்துதல்

[தொகு]

1899 ஆம் ஆண்டு ஜப்பான் கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சென்று பியனோ தொழில்நுட்பத்தை அறிந்துவந்தார். நிப்பான் கக்கி நிறுவனம் 1900இல் சிறிய வகை பியனோ உற்பத்தியைத் தொடங்கியது. 1900 இல் பெரிய மரபு வகை பியனோ உற்பத்தியானது. இவை உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1914 ஆம் ஆண்டு ஹார்மோனிகா அறிமுகம் செய்யப்பட்டது.

இறப்பு மற்றும் நினைவு

[தொகு]

யமாஹா 1916ஆம் ஆண்டு ஹமாமட்சு நகரில் காலமானார். அவரது நூற்றாண்டின் நினைவாக 1987 ஆம் ஆண்டு நிப்பான் கக்கி நிறுவனம் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமஹா,_டொரகுசு&oldid=3226129" இலிருந்து மீள்விக்கப்பட்டது