மோனிகர் சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோனிகர் சத்திரம் (Monegar Choultry) என்பது தமிழகத்தின் சென்னையில் இருந்த ஒரு சத்திரம் ஆகும். இது சென்னை நகரில் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டு கட்டமைப்பு ஆகும்.[1]

வரலாறு[தொகு]

18 ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர் மற்றும் மைசூர் நவாப்பான ஐதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோருக்கு இடையே ஓயாத போர்கள் நடந்தன. இந்தப் போர்களின் விளைவாக பலர் சொத்துக்களையும், உயிர்களையும் இழந்தனர். இதன் விளைவாக இறுதியில் சென்னையில் ஒரு பஞ்சமும் தோன்றியது. 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமத்தின் தலைவர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி ஊற்றுவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்துள்ளார். போர் முடிவடைந்த பின்னர் இந்த சத்திரமானது நோயாளிகளும், ஏழைகளும், அனாதைகளும் தங்கும் உறைவிடம் ஆயிற்று.  1782 ஆம் ஆண்டு மைசூர் போர் நடந்த சமயத்தில் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட கருப்பர் நகரத்தின் அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கிழக்கிந்திய நிர்வாகம் இடித்துத் தள்ளியது. ஆனால், அந்தச் சமயத்தில் இந்தக் கட்டிடத்துக்கு மட்டும் அரசாங்கம் விதிவிலக்கு அளித்தது. 1807 ஆம் ஆண்டில், அதிகமான மக்கள் இந்த சத்திரத்துக்கு வந்தபோது அரசாங்கம் கணிசமான நன்கொடை அளித்தது. ஆற்காடு நவாப்பும் இதற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தார்.

1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் இந்தச் சத்திரத்துக்குள் கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1801 ஆம் ஆண்டில், மருத்துவமனையானது 'நேட்டிவ் ஹாஸ்பிடல் அண்ட் புவர் ஃபண்ட்' சத்திரத்துடன் இணைக்கப்பட்டது. புனித மேரி தேவாலயத்தின் 'நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு' தொண்டு செய்த பஞ்ச நிவாரணக் குழுவால் இந்த கட்டிடம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1808 ஆம் ஆண்டு இந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 ஆம் ஆண்டு சத்திரத்தின் நிலமும், அந்த மருத்துவமனையும் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பிறகு மருத்தவமனையின் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது. பின்னர் இந்த சத்திரம் 1910 ஆண்டிலேயே அருகில் இருந்த வெங்கடகிரி ராஜாவினுடைய சத்திரத்துக்கு இடம் மாற்றப்பட்டு கூடுதல் அறைகள் கட்டப்பட்டன.

1933 இல் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். 1933 இல் ராயபுரம் மருத்துவமனையில் முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு (டிப்ளமா இன் மெடிக்கல் & சர்ஜரி) அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனையாக 1936 சூலை 2 ஆம் தேதி மாற்றப்பட்டது. பின்னர் அதுவே இசுடான்லி மருத்துவக் கல்லூரியாக ஆனது.[2]

சொற்பிறப்பு[தொகு]

துவக்கத்தில், இந்த சத்திரத்துக்கு தனியாக பெயரொன்றும் கொண்டிருக்கவில்லை. சத்திரத்தைத் துவக்கிய மணியக்காரர் (கிராமத் தலைவர்) என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது.

சத்திரம் இன்று[தொகு]

இன்றும் இந்த சத்திரம் இயங்கி ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது.[3] இந்தச் சத்திரத்தின் நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பு இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் உள்ளது. இங்கு பெரிய பாளையத்து அம்மனுக்கு கட்டப்பட்ட ஒரு பழமையான கோயிலானது ஓரு பழமையான மரத்தின் அடியில் உள்ளது.

இந்தச் சத்திரத்தில் இருப்பவர்கள் இறந்தபின், அவர்களின் உடல் அவர்களின் உறவினர்வசம் ஒப்படைக்கப்படாது. அந்த உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் உடலமைப்பியல் துறைவசம் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Parthasarathy, Anusha (18 September 2012). "A roof for the roofless". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/arts/history-and-culture/a-roof-for-the-roofless/article3910812.ece?service=mobile. பார்த்த நாள்: 11 Nov 2012. 
  2. முகமது ஹுசைன் (14 ஏப்ரல் 2018). "அன்று அன்னச் சத்திரம் இன்று மருத்துவமனை". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/society/real-estate/article23535556.ece. பார்த்த நாள்: 16 ஏப்ரல் 2018. 
  3. Peter, Petlee (12 May 2012). "Old Jail Road, a link with the past". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/old-jail-road-a-link-with-the-past/article3404347.ece. பார்த்த நாள்: 23 Mar 2014. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகர்_சத்திரம்&oldid=3578130" இருந்து மீள்விக்கப்பட்டது