மோதூர் விசிறிக்கல் சிற்பம்
மோதூர் விசிறிக்கல் சிற்பம் என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மோதூர் கிராமத்தில் [1]மனிதவடிவில் (Anthropomorphic sculpture) அமைந்துள்ள கற்சிற்பத்தைக் குறிக்கும். இந்தச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. பறவைக்கல் என்றும், விசிறிக்கல் என்றும் இதனை மக்கள் அழைக்கிறார்கள்.[2]
அமைவிடம்
[தொகு]மோதூர் விசிறிக்கல் சிற்பம், தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர், காரிமங்கலத்திலிருந்து 6.0 கி.மீ. தொலைவிலும் தர்மபுரியிலிருந்து 12.5 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 41.0 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 635205 ஆகும். [1]
மோதூர் தொல்லியல் களம்
[தொகு]கல்வெட்டுகள் இவ்வூரை புறமலை நாடு என்று பதிவு செய்துள்ளன. மோதூர் தொல்லியல் களத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர், 2004-2005 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அகழாய்வில் புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் ஆகிய மூன்று காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய பகுதி மோதூர், என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதிய கற்காலக் கருவிகளும் மட்கலன்களும் அதிக அளவில் இங்கு கண்டறியப்பட்டன. பெருங்கற்கால வாழ்விட மேடுகளிலிருந்தும் ஈமச்சின்னங்களிலிருந்தும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கு முன்பே இப்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வசித்து வந்த செய்தி சான்றுகள் வாயிலாக உறுதியாகிறது. [3]
மோதூர் விசிறிக்கல் சிற்பம்
[தொகு]மோதூர் விசிறிக்கல் சிற்பம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும். இது பெருங்கற்காலத்துத் தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சமாகக் கருதப்படுகிறது. பறவை போன்ற அமைப்புக் கொண்ட இச்சிற்பம் ஒரு கல்வட்டத்தின் மையத்தில் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட விசிறிக்கல் சிற்பங்களிலேயே மோதூர் சிற்பம் அளவில் பெரியதாகும். [2] இந்தியாவின் பல பகுதிகளில் இது போன்ற மனித வடிவிலான (Anthropomorphic sculpture) சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. [4] தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கனல் வட்டம், உடையாநத்தம் கிராமத்தில் இது போன்ற உடையாநத்தம் விசிறிப்பாறை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Modur Onefivenine
- ↑ 2.0 2.1 மோதூர் - விசிறிக்கல் (தாய்த்தெய்வம்) தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை
- ↑ வரலாற்றுக்காலம் - 10 மாங்குடி, மாங்குளம் மோதூர் ச.செல்வராஜ். தினமணி, தொல்லியல்மணி 29 ஏப்ரல் 2016
- ↑ Megalithic Anthropomorphic Statues: Meaning and Significance k P. Rao Indo-Pacific Prehistory Association Bulletin 19, 2000 (Melaka Papers Volume 3)
- ↑ உடையாநத்தம் தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை