மோகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகானி
Mohani
Girls paya.jpg
மோகானி பண்டிகையின் போது தீயசக்தியை அழிப்பதைக் குறிக்கும் அடையாளமாக சாம்பல் பூசனியை பெண்கள் வெட்டுகிறார்கள்.
கடைபிடிப்போர்நேபாள இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள்
அனுசரிப்புகள்பாதுகாக்கும் தெய்வத்தை வழிபாடு செயதல், வர்த்தகக் கருவிகளை வணங்குதல், மதவழிபாடு செய்தல்,ஆயுதங்கள் ஊர்வலம், புனித முகமுடி நடனங்கள்,விலங்கு பலியிடல், விருந்துகள்
தொடக்கம்சந்திர மாதத்தின் முதல் நாள்
முடிவுசந்திர மாதத்தின் 11வது நாள்

மோகானி (Mohani) (தேவநாகரி: मोहनि) என்பது நேவார்கள் என்று அழைக்கப்படும் நேபாள மக்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான பண்டிகையாகும். இப்பண்டிகை நாளில் பல்வேறு மதச் செயல்பாடுகள், ஆன்மீகப் பயணங்கள், குடும்பத்தினர் கூடுதல் மற்றும் வெளிப்புற கொண்டாட்டங்கள் என நிகழ்வுகள் பல நாட்களுக்கு நீடிக்கும். நாக்டையா என்ற சிறப்பு இரவு உணவிற்காக உறவினர்கள் சில வாரங்களுக்குப் பின்னரும் அழைக்கப்படுவர். நேபாள நாட்டின் மிகப்பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் தாசைன் பண்டிகைக்கு நிகராக மோகானியும் கொண்டாடப்படுகிறது. இவ்விரு பண்டிகைகளுக்கும் இடையே ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இந்துக்களின் தெய்வமான அன்னை துர்காதேவி, சாமுண்டீசுவரி தேவி தீயசக்தியான அரக்கன் மகிசாசூரனை வதம் செய்ததைக் கொண்டாடுவதே மோகானி பண்டிகை என விவரிக்கப்படுகிறது. இந்தியப் பேரரசர் அசோகர் கலிங்கப் போருக்குப் பின் ஆயுதங்களைத் துறந்து பௌத்தமதத்தைத் தழுவியதைக் கொண்டாடும் நிகழ்வாகவும் மோகானி கருதப்படுகிறது. சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் மோகானிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் இப்பண்டிகை கொண்டாடப்படும் நாளில் மாற்றம் ஏற்படுகிறது.[1][2] பிரதான கொண்டாட்டங்கள் நேபாள சகாப்தத்தின் 12 ஆவது மாதமான கௌலா மாதத்தின் 8 ஆவது நாள் தொடங்கி 11 ஆம் நாள் வரை நடைபெறுகின்றன.

குடும்ப நிகழ்வுகள்[தொகு]

மோ கானியின் பதினைந்து நாட்களின் முதல்நாள் பார்லி விதைகள் நடவுடன் தொடங்குகிறது. மட்கலன்கள் மற்றும் சிறிய கிண்ணங்களில் மணல் நிரப்பி அதில் பார்லி விதைகளை நடவு செய்யப்படுகின்றன. இந்நடவு ஒவ்வொருவரின் வீட்டுப் பூசை அறை மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் தெய்வம் வைக்கப்பட்டுள்ள அறையில் செய்யப்படுகிறது.

ஒரு வாரம் கழித்து பதினைந்து நாட்களின் எட்டாவது நாளில் குச்சிபோய் என்று அழைக்கப்படும் ஒரு குடும்ப விருந்து நடைபெறுகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒரே வரிசையில் உட்கார்ந்து விருந்து சாப்பிடுகின்றனர். மூத்தவருக்கு முதலிடமும் இளையவருக்கு கடைசி இட மரியாதையும் விருந்தில் வழங்கப்படுகிறது.

அடுத்தநாள், சந்திர நாட்காட்டியின் பதினைந்து நாட்களின் ஒன்பதாவது நாள் சியாக்வா தியாக்வா என்ப்படும் நவமி நாளில் அவர்களுடைய பாதுகாவல் தெய்வத்திற்கு பூசை அறையில் புனித சடங்குகள் செய்யப்படுகின்றன.வர்த்தகக் கருவிகளை வணங்குதல், வாகனங்களை வணங்குதல் தறி மற்றும் தொழில் செய்ய உதவும் கருவிகள் வழிபாடு போன்ற மரியாதைகளையும் மக்கள் அன்றைய தினத்தில் கடைபிடிக்கிறார்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் உள்ள தேல்சு கோயில் இந்நாளில் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து தங்களது வழிபாட்டை செய்கிறார்கள். நேபாளத்தின் பழைய அரசன் மல்லாவுக்கும் இத்தெயவம் பாதுகாப்புத் தெயவமாகும். மற்றொரு சிறப்பான விருந்துடன் அன்றைய தினம் இனிதே முடிகிறது.[3]

அடுத்தநாள் தசமி எனப்படும் பத்தாவது நாளாகும். பதினைந்து நாட்களின் பத்தாவது நாளில் குடும்ப உறுப்பினர்கள் புனித அறைக்குச் சென்று பாதுகாக்கும் தெய்வத்தினை வணங்குகிறார்கள். முதல்நாள் நடவு செய்த பார்லி விதைகள் தளிகளாக முளைத்திருப்பதை பரிசாகப் பெறுகிறார்கள், சிவந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு தெய்வத்திடம் ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.

சாம்பல் பூசனியை அரக்கன் போல வண்ணம் தீட்டி தீமையை அழிப்பது போல வெட்டிக் கொண்டாடுவதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். சில பகுதிகளில் ஆய்தங்களை ஏந்தி ஊர்வலம் போகின்ற பாயா நிகழ்வும் நடைபெறுகின்றன. அன்றைய தினமும் ஒரு சிறப்பான விருந்தோடு முடிவடைகிறது.[4]

சமுதாய நிகழ்வுகள்[தொகு]

நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பச்சாலி பைரவ் தெய்வத்தின் சன்னதிக்கு பச்சாலி பைரவ் யாத்திரை காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இவ்வூர்வலம் பதினைந்தாவது நாளிம் ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது[5] மோகானி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிகாலி யாத்திரையும் நடைபெறுகிறது. இந்த யாத்திரையில் புனித முகமுடி அணிந்த நடன ஊர்வலம் நடைபெறுகிறது. ஏழாவது நாளில் காதமாண்டு நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கோகனா கிராமத்தில் நடக்கிறது.இவ்விழாவில் நடன நிகழ்ச்சிகள் , மத வழிபாடுகளூடன் ஐந்து நாட்களுக்குத் தொடர்கிறது[6]

பக்தபூரில் நவ துர்கையின் புனித முகமுடி நடனம் நடைபெறுகிறது. நவதுர்கை என்பது நகரைப் புற சக்திகளிடம் இருந்து நகரைக் காப்பதாக நம்பப்படும் ஒன்பது தேவதைகள் என்று பொருளாகும். நகரத்தைச் சுற்றளவு முழுவதும் இத்தெய்வங்களால் காக்கப்படுகிறது என்பது நம்பிக்கையாகும்[7] .

மேற்கோள்கள்[தொகு]

  1. Anderson, Mary M. (2005). The Festivals of Nepal. Rupa & Company. பக். 142-155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788129106858. 
  2. Mitra, Kalyan (11 October 2013). "Mohani Nakha". Sandhya Times: p. 3. 
  3. Hoek, Bert van den; Shrestha, Balgopal (July 1992). "Guardians of the Royal Goddess: Daitya and Kumar as the Protectors of Taleju Bhavani of Kathmandu". CNAS Journal: p. 191. http://www.thlib.org/static/reprints/contributions/CNAS_19_02_03.pdf. பார்த்த நாள்: 4 October 2013. 
  4. Pradhan, Ishwar Man (2001). "Mohani" (in Newar). Jheegu Tajilajii Nakhah Wa Jatra [Festivals and Processions in Our Culture] (1st ). Kathmandu: Nepal Bhasa Academy. பக். 40-52. 
  5. Anderson, Mary M. (2005). The Festivals of Nepal. Rupa & Company. பக். 156-163. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788129106858. 
  6. "Sikali Jatra lights up Khokana". The Kathmandu Post. 11 October 2013. Archived from the original on 31 அக்டோபர் 2013. https://web.archive.org/web/20131031074154/http://www.ekantipur.com/the-kathmandu-post/2013/10/10/nation/sikali-jatra-lights-up-khokana/254618.html. பார்த்த நாள்: 11 October 2013. 
  7. Teilhet, Jehanne H.. "The Tradition of the Nava Durga in Bhaktapur, Nepal". Kailash: pp. 82-98. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/kailash/pdf/kailash_06_02_01.pdf. பார்த்த நாள்: 5 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகானி&oldid=3226038" இருந்து மீள்விக்கப்பட்டது