உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன் ராகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் ராகேஷ்
படிமம்:Mohan Rakesh (1925-1972).jpg
பிறப்புமதன் மோகன் குக்லானி[1]
(1925-01-08)8 சனவரி 1925
அமிருதசரசு, பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
இறப்பு3 சனவரி 1972(1972-01-03) (அகவை 46)
தில்லி
தொழில்புதின ஆசிரியர், நாடக எழுத்தாளர்

மோகன் ராகேஷ் (Mohan Rakesh) (8 சனவரி 1925 – 3 சனவரி 1972) 1950களில் நய் கஹானி (புதிய கதை) என்ற இந்தி இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்த போட்டியில் வென்ற ஆஷாத் கா ஏக் தின் (1958) என்ற முதல் நவீன இந்தி நாடகத்தை எழுதினார். இவர் புதினம், சிறுகதை, பயணக் குறிப்பு, விமர்சனம், நினைவுக் குறிப்பு, நாடகம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [1] இவருக்கு 1968 இல் சங்கீத நாடக அகாதமி விருது [2] வழங்கப்பட்டது

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

1925 சனவரி 8ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரசில் மதன் மோகன் குக்லானியாகப் பிறந்தார். ஒரு வழக்கறிஞரான இவரது தந்தை இவரது பதினாறு வயதிலேயே இறந்தார். [1] லாகூரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்திலும், இந்தி மொழியிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். [3] [4]

தொழில்

[தொகு]

இவர் 1947 முதல் 1949 வரை தேராதூனில் ஒரு அஞ்சல்காரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு புதுதில்லிக்கு மாறினார். ஆனாலும் பஞ்சாபின் ஜலந்தரில் சிறிது காலம் கற்பித்தல் பணியைக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து, ஜலந்தர் ( குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் ) டி.ஏ.வி கல்லூரி மற்றும் சிம்லாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்தித் துறைத் தலைவராக இருந்தார். இறுதியில், முழுநேர எழுத்தாளராக இருக்க வேண்டி 1957இல் தனது அஞ்சல்துறை வேலையை விட்டு வெளியேறினார். 1962-63 வரை சரிகா என்ற இந்தி இலக்கிய இதழை சிலகாலம் நடத்தி வந்தார். [5]

ஆண்டேர் பேண்ட் கமரே, நா அனே வாலா கல் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க புதினங்களாகும். இவரது நாடகங்களான ஆஷாத் கா ஏக் தின் (1958), 1960களில் இந்தி நாடகத்தை புதுப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. [6] மேலும், ஆதே ஆதுரே (1969) ஆகியவை மிகவும் மதிக்கப்படுகின்றன. இவரது முதல் நாடகமான ஆஷாத் கா ஏக் தின் முதன்முதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த அனாமிகா என்ற இந்தி நாடகக் குழுவின் மூலம் இயக்குனர் ஷியமானந்த் ஜலான் (1960) [7] இயக்கத்தின் கீழ் நிகழ்த்தப்பட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டில் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் இப்ராஹிம் அல்காசியாலும் நிகழ்த்தப்பட்டது. இது முதல் முறையாக நவீன இந்தி நாடக ஆசிரியராக மோகன் ராகேஷை நிறுவியது. [1] இவரது நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு உலகளவில் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆஷாத் கா ஏக் தின் என்ற நாடகம் அபர்ணா தர்வாட்கர் மற்றும் வினய் தர்வாட்கரின் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாக ஒன் டே இன் தி சீசன் ஆப் த ரெயின் என்ற பெயரில், 2010இல் அமெரிக்காவின் விஸ்கான்சினிலும், கெனோஷாவில் உள்ள கார்தேஜ் கல்லூரியிலும் நிகழ்த்தப்பட்டது. மேலும், 2011இல் கென்னடி மைய அமெரிக்கக் கல்லூரி நாடக விழாவிலும் நிகழ்த்தப்பட்டது.

கௌதம புத்தர் துறவு மேற்கொள்வது குறித்த ஒரு பண்டைய பௌத்தக் கதையைப் பற்றியும், புத்தரின் நெருங்கிய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் மோகன் ராகேஷின் குறிப்பிடத்தக்க நாடகமான லஹ்ரான் கே ராஜன் தி ஸ்வான்ஸ் ஆஃப் தி வேவ்ஸ்) முதலில் ஒரு சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் வானொலி நாடகமாக மாற்றப்பட்டது. ஜலந்தர் அனைத்திந்திய வானொலியில் சுந்தரி என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும் நாடகத்தின் வெவ்வேறு பதிப்புகள் குறித்த இவரது போராட்டம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடித்தது. பிரபல இந்திய இயக்குனர்களான ஓம் சிவ்புரி, சியாமானந்த் ஜலான், அரவிந்த் கவுர், ராம் கோபால் பஜாஜ் ஆகியோர் இந்த நாடகத்தை இயக்கியுள்ளனர். [8] 2005 ஆம் ஆண்டில், இந்த நாடகம் எழுதிய விதம் குறித்தும், மோகன் ராகேஷின் நாட்குறிப்பும், எழுத்துக்களும், நாடகத்தைப் பற்றிய கடிதங்களும் தில்லி நாடகக் குழுவால் மெனுஸ்கிரிப்ட் ("கையெழுத்துப் பிரதி") என்ற நாடகத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டன.

சூலை 1971 இல், 'தி டிராமாடிக் வேர்ட்' குறித்த ஆராய்ச்சிக்காக ஜவகர்லால் நேரு அறக்கட்டளை உதவித்தொகையினைப் பெற்றார். இருப்பினும், இவர் அதை முடிக்க முடியாமல், 1972 சனவரி 3இல் இறந்தார். [9] [10]

சொந்த வாழ்க்கை

[தொகு]

மோகன் ராகேஷ் 1950இல் செய்து கொண்ட முதல் திருமணம், 1957இல் விவாகரத்தில் முடிந்தது. 1960இல் செய்து கொண்ட இரண்டாவது திருமணமும் விரைவில் முடிந்தது. இருப்பினும், 1963இல் அனிதா அவுலாக் என்பவருடனான மூன்றாவது திருமணம் வெற்றிகரமாக இருந்தது. இவரது மரணத்திற்குப் பிறகு, அனிதா தொடர்ந்து தில்லியில் வசித்து வந்தார். இப்போது தனது எழுபதுகளில், கைலாஷ் பகுதியின் கிழக்கில் வசிக்கிறார். இவரது சுயசரிதையான, சத்ரீன் அவுர் சத்ரீன் என்பது, முதலில் இந்தி இதழான சரிகாவில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. பின்னர் 2002இல் நூலாக வெளியிடப்பட்டது [11] [12]

மோகனின் இரண்டு இலக்கியப் படைப்புகளை திரைப்படத் தயாரிப்பாளர் மணி கவுல் தழுவி படமாக எடுத்தார். உஸ்கி ரோட்டி என்ற முதல் படம் அதே பெயரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 1969 இல் தயாரிக்கப்பட்டது. இந்த படத்திற்காக மோகன் ராகேஷ் வசனங்களை எழுதினார். [13] இரண்டாவது படம் மோகன் ராகேஷின் ஆஷாத் கா ஏக் தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 1971 இல் தயாரிக்கப்பட்டது . [14] இந்த இரண்டு படங்களும் இந்திய இணைத் திரைப்படங்களின் மைல்கல் படங்களாக கருதப்படுகின்றன. மிட்டி கே ரங், 1990களில் தூர்தர்ஷனில் ஒலிபரப்பப்பட்ட சிறுகதைகள் மோகன் ராகேஷின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டவை.

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 Gabrielle H. Cody; Evert Sprinchorn (2007). The Columbia encyclopedia of modern drama, Volume 2. Columbia University Press. p. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-14424-5.
 2. Drama – Playwriting Awards Sangeet Natak Akademi Official listings. பரணிடப்பட்டது 7 சூன் 2008 at the வந்தவழி இயந்திரம்
 3. Mohan Rakesh Biography and Works
 4. "Mohan Rakesh bio and books". Archived from the original on 2007-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
 5. "Mohan Rakesh: A Rudimentary Sketch". SOL, Delhi University. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
 6. "Mohan Rakesh". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
 7. Asha Kasbekar (2006). Pop culture India!: media, arts, and lifestyle. ABC-CLIO. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-636-1.
 8. More than just a manuscript! Romesh Chander, The Hindu, 18 November 2005. பரணிடப்பட்டது 24 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
 9. "Mohan Rakesh: A Rudimentary Sketch". SOL, Delhi University. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18."Mohan Rakesh: A Rudimentary Sketch". SOL, Delhi University. Retrieved 18 July 2016.
 10. "Official list of Jawaharlal Nehru Fellows (1969-present)". நேரு அருங்காட்சியகமும் கோளகமும்.
 11. "Mohan Rakesh: A Rudimentary Sketch". SOL, Delhi University. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18."Mohan Rakesh: A Rudimentary Sketch". SOL, Delhi University. Retrieved 18 July 2016.
 12. Poonam Saxena (14 March 2016). "The love story of Anita and Mohan Rakesh". Hindustan Times, Brunch. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
 13. Uski Roti (1971) பரணிடப்பட்டது 2009-09-25 at the வந்தவழி இயந்திரம் த நியூயார்க் டைம்ஸ்
 14. "Talking theatre". The Hindu. 8 February 2019.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_ராகேஷ்&oldid=3569097" இலிருந்து மீள்விக்கப்பட்டது