மொன்சுவிக்குக் கோட்டை
மொன்சுவிக்குக் கோட்டை (Montjuïc Castle, மொஞ்சுவிக் கோட்டை, எசுப்பானியம்: Castillo de Montjuïc) எசுப்பானியாவின் காத்தலோனியாவிலுள்ள பார்செலோனா நகரத்தில் மொன்சுவிக்கு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தொன்மையான படைத்துறை கோட்டையாகும். 1640இல் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் தற்போது பார்செலோனா நகராட்சி அலுவலகமாக செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]இந்தக் கோட்டைக்கான அடிக்கல் 1640இல் நாட்டப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் சனவரி 1641இல் இக்கோட்டை முதல் சண்டையை எதிர்கொண்டது. காத்தலோனியா குறுமன்னர் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புரட்சி மேற்கொண்டனர். எசுப்பானிய அரசரின் ஆணைப்படி, 26,000 பேர் கொண்ட படைகளுடன் பெத்ரோ பயர்தோ இந்தப் புரட்சியை ஒடுக்க படையெடுத்தார். பல நகரங்களை மீளவும் கையகப்படுத்திய எசுப்பானியப் படை மொஞ்சுவிக் சண்டையில் தோல்வி கண்டனர்.
ஐம்பதாண்டுகள் கழித்து 1694 இல் புதிய அரண்களும் கொத்தளங்களும் கட்டப்பட்டு கோட்டை கோட்டையகமாக மாறியது.
1751 இல் பழைய கோட்டை இடிக்கப்பட்டு தற்போதிருக்கும் கோட்டை எழுப்பப்பட்டது. இதன் இறுதி வடிவம் 1779இலிருந்து 1799க்குள் முடிவுற்றது. இக்காலத்தில் 120 பீரங்கிகள் கோட்டையில் இருத்தப்பட்டன.
நெப்போலியப் போர்களின் போது, பார்செலோனாவை கையகப்படுத்திய பிரெஞ்சுப் படைகள் நெப்போலியனின் ஆணைப்படி இந்தக் கோட்டையை சண்டையின்றி கைப்பற்றினர்.
20வது நூற்றாண்டில் இந்தக் கோட்டை ஓர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. சூன் 1963இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவால் இங்கு படைத்துறை கவச அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
தற்போதைய நிலை
[தொகு]ஏப்ரல் 2007இல் அரசு இக்கோட்டையை பார்செலோனா நகர மன்றத்திடம் ஒப்படைத்தது. இதனையடுத்து இது நகராட்சியின் அலுவலகமாக மாறியது. 2010 இல் இங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது.
இங்கு விண்வெளி நினைவகம் (L’Espai de la Memòria), மொஞ்சுவிக் மலை விளக்க மையம் (El Centre d’Interpretació de la Muntanya de Montjuïc) அமைக்கவும் பண்பாட்டு செயல்பாடுகளை நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தக் கோட்டையை மொஞ்சுவிக் கம்பிவட தொங்கூர்தி, கண்டோலா தூக்கூர்தி மூலம் அடையலாம். இவற்றிற்கு பார்செலோனா மெட்ரோவிலிருந்து அணுக்கம் உள்ளது.