மைய வணிகப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூயார்க் மாநகரின் மைய வணிகப் பகுதி
கனரி கப்பல்துறைப் பகுதி எனப்படும், இலண்டனின் மைய வணிகப் பகுதிகளுள் ஒன்று

மைய வணிகப் பகுதி (Central Business District, CBD) என்பது, ஒரு மாநகரத்தின் வணிக மையமாகவும், பெரும்பாலும் அதன் புவியியல் மையமாகவும் விளங்கும் ஒரு பகுதி ஆகும். இதை மாநகர மையம் என்றும் அழைப்பதுண்டு. இதன் கட்டிடங்கள், அதன் நகர கட்டிட வரலாற்றுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும். இவ்விடத்தில் வாழும் மக்களின் அடர்வும் குறைவாகவே இருக்கும். வட அமெரிக்காவில் இருக்கும் நகர நடுவத்திலிருந்து, இம்மைய வணிகப் பகுதியானது கோட்பாடு அடிப்படையில் வேறுபாடு உடையதாகும்..[1]

மேலோட்டம்[தொகு]

மாநகரங்களின் மையமான "மைய வணிகப் பகுதி"யில் சில்லறை வணிகக் கட்டிடங்களும், அலுவலகக் கட்டிடங்களும் செறிவாக அமைந்து காணப்படும்.[2] மைய வணிகப் பகுதி, வழமையான நகர்ப்புற அடர்த்தியிலும் கூடிய அடர்த்தியைக் கொண்டிருக்கும். அத்துடன், நகரின் மிகவும் உயர்ந்த கட்டிடங்களும் இப்பகுதியிலேயே காணப்படுவது வழக்கம். இலண்டன் நகரம் மூன்று மாநகர மையங்களைக் கொண்டிருக்கிறது. இலண்டன் மாநகரம், நடுக்காலத்தைச் சார்ந்த வெஸ்ட்மின்ஸ்டர் மாநகரம், மாற்றியமைக்கப்பட்ட இறங்குதுறைப் பகுதி என்பனவே அவை. இது போலவே மெக்சிக்கோ நகரம், தாய்ப்பே நகரம் என்பனவும் வேறும் பல நகரங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மையப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

மைய வணிகப் பகுதியின் வடிவமும், வகையும் பெரும்பாலும் அம்மாநகரின் வரலாற்றைக் காட்டுவனவாக இருக்கின்றன. இவ்வாறு பழமையான மாநகர மையப் பகுதிகளின் வரலாற்றுச் சிறப்புக் காரணமாக அப்பகுதிகளில் உயரமான புதிய கட்டிடங்களைக் கட்ட அநுமதிப்பதில்லை. இதனால், உயரமான கட்டிடங்களுடன் கூடிய நிதிப் பகுதியும், நிர்வாகப் பகுதிகளுக்கான மையம், பழைய நகரத்திலிருந்து, சற்று விலகி மாநகரத்தின் வேறு பகுதியில் அமைவது உண்டு. விரைவாக வளர்ச்சியடைந்த மாநகரங்களும், அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்று வளர்ந்த மாநகரங்களும் உயர்ந்த கட்டிடங்களுடன் கூடிய ஒரே மைய வணிகப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. வட அமெரிக்காவின் மேற்கு அரைப் பகுதியைச் சேர்ந்த நகரங்கள் பல இவ்வாறானவை.

மைய வணிகப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை வழமையாக மிகக் குறைவாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 1700 ஆம் ஆண்டில் 200,000 ஆக இருந்த இலண்டன் மாநகரத்தின் மக்கள் தொகை இன்று மைய வணிகப் பகுதியாக இருக்கும் அதே பகுதியில் 10,000 ஆகக் குறைந்து விட்டது. எனினும் சில வேளைகளில், குறிப்பாக ஆசுத்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள சில பெரிய நகரங்களின் மைய வணிகப் பகுதிகளில் மக்கள் தொகை கூடி வருகிறது. இளம் உயர்தொழில் துறையினரும், வணிகத் துறைகளில் தொழில் புரிவோரும் மைய வணிகப் பகுதிகளில் உள்ள மாடிக் குடியிருப்புக்களுக்கு இடம்பெயர்வதே இதற்கான காரணம்.

மை.வ.பகுதியில் நிலங்களின் மதிப்பு வேறுபாடுகள்[தொகு]

மைய வணிகப் பகுதி நிலங்களைப் பயன்படுத்தும் சில்லறை வணிகம், அலுவலகம், குடியிருப்பு போன்ற பல்வேறு துறையினரும், அங்குள்ள அணுகுவதற்கு வசதியான நிலங்களைப் பெறுவதற்குப் போட்டியிடுகின்றனர். அந் நிலத்துக்காக அவர்கள் தர விரும்பும் விலை கேள்வி வாடகை எனப்படும். நகரம் ஒன்றில் இவ்வாறான நிலங்களின் அமைவிடத்துக்கும், அவற்றின் கேள்வி வாடகைக்கும் இடையிலான தொடர்பை "கேள்வி வாடகை வரைபு" மூலம் காட்டலாம். இவ்வரைபின் மூலம், வசதியாக அணுகத்தக்க இடங்கள் மையப் பகுதியிலேயே அமைந்திருப்பதையும், அவ்விடங்களில் உள்ள நிலங்கள் பெறுமதி கூடியவையாகவும் இருப்பதை அறிந்துகொள்ள முடியும். இது கேள்வி வாடகைக் கோட்பாடு எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைய_வணிகப்_பகுதி&oldid=3578444" இலிருந்து மீள்விக்கப்பட்டது