மைமன்சிங் கோட்டம்
மைமன்சிங் கோட்டம்
ময়মনসিংহ বিভাগ | |
---|---|
கோட்டம் | |
வங்காளதேசத்தில் மைமன்சிங் கோட்டத்தின் அமைவிடம் | |
நாடு | வங்காளதேசம் |
தொகுதி | மைமன்சிங் |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | BD-C |
மைமன்சிங் கோட்டம் (Mymensingh Division) (வங்காள மொழி: ময়মনসিংহ বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மைமன்சிங் நகரம், மைமன்சிங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி, மைமன்சிங் கோட்டம் 10,584.06 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 1,13,70,000 மக்கள் தொகையும் கொண்டது. இக்கோட்டம் வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
டாக்கா கோட்டத்தின் வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களைக் கொண்டு செப்டம்பர் 2015-ஆம் ஆண்டில் மைமன்சிங் கோட்டம், வங்காளதேசத்தின் எட்டாவது கோட்டமாக துவக்கப்பட்டது. [1]
கோட்ட எல்லைகள்
[தொகு]மைமன்சிங் கோட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலமும், வடகிழக்கிலும், கிழக்கிலும் சில்ஹெட் கோட்டமும், தென்கிழக்கில் கொமில்லா கோட்டமும், தெற்கிலும், தென்மேற்கிலும் டாக்கா கோட்டமும், மேற்கில் ரங்க்பூர் கோட்டமும் மற்றும் வடமேற்கில் ராஜசாகி கோட்டமும் எல்லைகளாக உள்ளது.
கோட்ட நிர்வாகம்
[தொகு]மைமன்சிங் கோட்டத்தின் நிர்வாக வசதிக்காக மைமன்சிங் மாவட்டம், செர்பூர் மாவட்டம், நேத்ரோகோனா மாவட்டம் மற்றும் ஜமால்பூர் மாவட்டம் என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]மைமன்சிங் கோட்டம் பல ஆறுகளும், ஏரிகளும், காடுகளும் கொண்டது. பிரம்மபுத்திரா ஆறு, சதியா ஆறு, பகாரியா ஆறு, நாகேஷ்வரா ஆறு, நிதாய் ஆறு, கன்சா ஆறு போன்ற ஆறுகள் பல இக்கோட்டத்தில் பாய்கிறது. இக்கோட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. [2]இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி, மைமன்சிங் கோட்டம் 10,584.06 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 1,13,70,000 மக்கள் தொகையும் கொண்டது. எழுத்தறிவு 39.10% ஆக உள்ளது. இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியுடன், மலைவாழ் பழங்குடி இன மொழிகளையும் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]ஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி
[தொகு]வங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]7. Mymensingh Division 24 பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம்