மைசூர் வீ. துரைசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைசூர் வீ. துரைசுவாமி
MysoreDoreswamyIyengar.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வேங்கடேச துரைசுவாமி
பிறப்புஆகத்து 11, 1920(1920-08-11)
இறப்புஅக்டோபர் 28, 1997(1997-10-28) (அகவை 77)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)வீணை வாசிப்பு
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1932 - 1997
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை

மைசூர் வி. துரைசுவாமி (Mysore V. Doreswamy) எனப் பிரபலமாக அறியப்படும் மைசூர் வேங்கடேச துரைசுவாமி (ஆகத்து 11, 1920[1] - அக்டோபர் 28, 1997) ஒரு கருநாடக இசை வீணை வித்துவான் ஆவார்.

இளமை வாழ்வு[தொகு]

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் தொட்ட‌கத்தாவல்லி கிராமத்தில் 1920ஆம் ஆண்டு ஆகத்து 11 அன்று ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார்.

இவரது தாத்தா ஜனார்த்தனர் புரந்தரதாசர் உள்ளிட்ட தாச சுவாமிகளின் தேவர்நாமாக்களைப் பாடுவார். இவரது தந்தையார் வெங்கடேசர் வீணை வாசிப்பதில் திறமை உள்ளவர். ஆனால் அவர் பல்லடம் சஞ்சீவா புல்லாங்குழல் வாசிப்பதைக் கேட்டு, அதனால் கவரப்பட்டு, தானாகவே புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொண்டு மகாராஜா நாலாவது கிருஷ்ண இராஜேந்திர உடையாரின் மைசூர் அரண்மனை இசைக் குழுவில் சேர்ந்துவிட்டார். இக்குழுவுக்கு வீணை வித்துவான் வேங்கடகிரியப்பா தலைவராக இருந்தார்.

இவர் ஆறு வயதாக இருக்கும்போது மைசூர் அரண்மனையில் அரியக்குடி இராமானுஜர் கச்சேரியை கேட்டார். இயற்கையாகவே இசைஞானம் வரப்பெற்ற துரைசுவாமி இந்தக் கச்சேரியினால் கவரப்பட்டார்.

தசரா சமயத்தில் மைசூரில் பிரபல வித்துவான்களின் கச்சேரிகள் நடக்கும். அவற்றையெல்லாம் கேட்டு தனது இசை அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார்.

சிறுவயதில் வீணை வாசிப்பதில் ஆர்வம் காட்டினார். தொடக்கத்தில் தந்தையாரிடமே பயின்ற அவரை பின்னர் தந்தையாரால் வேங்கடகிரியப்பாவிடம் மாணவனாக சேர்த்துவிட்டார். வேங்கடகிரியப்பா மைசூர் வீணை சேஷண்ணா பாரம்பரியத்தில் வந்தவர்.

வேங்கடகிரியப்பா இவருக்கு அரிதானதும் மிகவும் மதிக்கப்பட்டவையுமான 20 வர்ணங்களை கற்பித்தார். அத்துடன் சில கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகளில் சில, வீணை சேஷண்ணா வீணை வாசிப்பவர்கள் தானம் வாசிப்பதற்கென விசேடமாக இசை அமைத்த சித்த தானம் ஆகியவற்றையும் கற்பித்தார்.

சாமுண்டீஸ்வரி அம்மன் மீது முத்தையா பாகவதர் பாடிய பல கீர்த்தனைகளையும் வேங்கடகிரியப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டார்.[2]

இசை நிகழ்ச்சிகள்[தொகு]

தனது பன்னிரண்டாவது வயதில் மைசூர் டி. சௌடையா வயலின் வாசிக்க மைசூர் மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையார் முன்னிலையில் கச்சேரி செய்தார். இதனைக் கேட்டு மகிழ்ந்த மகாராஜா இவருக்கு 50 வெள்ளி காசுகளை பரிசாகக் கொடுத்தார்.[1]

இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன சமாஜத்தில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்றது.

சென்னையில் முதன்முதலாக 1944 ஆம் ஆண்டு ரசிக ரஞ்சனி சபா ஏற்பாடு செய்த இசைக்கச்சேரியில் வீணை வாசித்தார். மதராஸ் ஏ. கண்ணன் மிருதங்கம் வாசித்தார்.

பாலக்காடு மணி, சௌடையா, லால்குடி ஜெயராமன், எம். எஸ். கோபாலகிருஷ்ணன், டி. என். கிருஷ்ணன் போன்ற பிரபல இசைக்கலைஞர்கள் இவருடன் சேர்ந்து பக்கவாத்தியம் வாசித்துள்ளனர்.

உஸ்தாத் அலி அக்பர் கான், அம்ஜத் அலி கான் போன்ற பிரபல இசைக் கலைஞர்களுடன் (ஜுகல்பந்தி) இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.[2]

சில கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கல்யாண்குமார் நடித்த சுப்பா சாஸ்திரி அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று.[1]

பி. டி. நரசிம்மர் என்ற பிரபல கவிஞரின் நாட்டிய நாடகங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.[1]

சாமராஜ்பேட்டையிலுள்ள ஸ்ரீ இராமசேவா மண்டலி வருடாவருடம் நடத்தும் இராம நவமி விழாவில் 1947 ஆம் ஆண்டிலிருந்து தான் இறக்கும் வரை (1997) ஒவ்வொரு வருடமும் தவறாது பங்குபற்றினார். [3]

அகில இந்திய வானொலி நிலையத்தில் கச்சேரி செய்ய தொடங்கிய இவர் அங்கு 25 ஆண்டுகள் இசை தயாரிப்பாளராக பதவி வகித்தார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மாணாக்கர்கள்[தொகு]

பிரபல வீணை வித்துவான்கள் சி. கிருஷ்ணமூர்த்தி, டி. பாலகிருஷ்ணா ஆகியோர் இவரது மாணாக்கர்களாவர். இவர்களில் இரண்டாமவர் துரைசாமியின் மகனாவார்.[1]

மறைவு[தொகு]

சிறிது காலம் கல்லீரல் அழற்சியால் (Hepatitis) பாதிக்கப்பட்டிருந்த துரைசுவாமி பெங்களூருவில் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காலமானார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_வீ._துரைசுவாமி&oldid=2617533" இருந்து மீள்விக்கப்பட்டது