மைக்கல் ஜாக்சன்
Michael Jackson மைக்கல் ஜாக்சன் | |
---|---|
![]() 1988இல் மைக்கல் ஜாக்சன் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் |
பிறப்பு | ஆகத்து 29, 1958
கேரி, இந்தியானா, அமெரிக்கா |
இறப்பு | சூன் 25, 2009 லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா | (அகவை 50)
இசை வடிவங்கள் | ஆர்&பி, சோல், பாப் இசை, டிஸ்கோ, ராக் |
தொழில்(கள்) | பாடகர், இசை எழுத்தாளர், இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடனக்காரர், நடனமைப்பாளர், நடிகர், வணிகர் |
இசைக்கருவி(கள்) | பாடல், மேளம், பல இசைக்கருவிகள் |
இசைத்துறையில் | 1967–இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | மோட்டவுன், எபிக், சோனி |
இணைந்த செயற்பாடுகள் | ஜாக்சன் 5 |
இணையதளம் | MichaelJackson.com |
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்தார்.
1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
பொருளடக்கம்
பிறப்பு[தொகு]
மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.இவர் Illimination group என்னும் குடும்பத்திலிருந்து பிறந்தவர்.இந்த குடும்பம் 1567லில் இருந்தே மிகவும் வசதியான குடும்பம்
திருமணம்[தொகு]
1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.
பாடல் தொகுப்புகள்[தொகு]
ஆண்டு | பெயர் |
---|---|
1972 | காட் டு பி தேர் |
1979 | ஆப் தி வால், |
1982 | திரில்லர், |
1987 | பேட், |
1991 | டேஞ்சரஸ் மற்றும் |
1995 | ஹிஸ்டரி |
சாதனை[தொகு]
"திரில்லர்" என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.
நேவர்லேன்ட்[தொகு]
நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு அளித்ததில்லை.
ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்[தொகு]
1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது.
இறப்பு[தொகு]
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1],[2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.cnn.com/2009/SHOWBIZ/Music/06/25/michael.jackson/index.html
- ↑ http://web.archive.org/web/20090628125050/news.yahoo.com/s/ap/us_obit_michael_jackson
- ↑ http://www.msnbc.msn.com/id/31552029?gt1=43001
வெளியிணைப்புகள்[தொகு]
மைக்கல் ஜாக்சன் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள். | |
![]() |
படிமம் பொதுவகத்திலிருந்து |
![]() |
செய்திகள் விக்கிசெய்தியிலிருந்து |
![]() |
மேற்கோள்கள் விக்கிமேற்கோளிலிருந்து |