மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மே. வீ. வேணுகோபாலன் (ஆகத்து 31, 1896 - பெப்ரவரி 4, 1985) பதிப்பாசிரியராகவும், படைப்பாளராகவும் விளங்கியவர். தமிழுலகால், இலக்கணத் தாத்தா எனவும், மகாவித்வான் எனவும் அழைக்கப்பெற்றவர்.[1]

பிறப்பும் இளமையும்[தொகு]

சென்னை, சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையம் எனும் சிற்றூரில் வீராசாமி-பாக்கியம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் பயின்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னை, வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற்றினார். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் கா. ர. கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். கலாநிலையம் சேசாச்சல ஐயர் நடத்திய இரவுப் பள்ளியில் ஆங்கிலம் கற்றார். அதன்பின் வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றார்.

ஆற்றிய பணிகள்[தொகு]

சென்னை, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீசியசு உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அரசாங்க இலக்கிய, இலக்கணப் பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட திருவாய்மொழி ஆண்டின் தமிழாக்கம் நூலின் பத்துத் தொகுதிக்கும் பதிப்பாசிரியராக விளங்கியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணப் பதிப்புக் குழுவில் உறுப்பினராகவும், புரசைவாக்கம், குருகுல மதக்கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வித்துவான் தேர்விற்குத் தனிவகுப்புகள் நடத்தியுள்ளார்.

பதிப்பித்த நூல்கள்[தொகு]

 • இறையனார் அகப்பொருள்
 • தொல்.சொல் (நச்சர் உரை)
 • தஞ்சைவாணன் கோவை
 • யாப்பருங்கலக் காரிகை
 • வீரசோழியம்
 • யசோதர காவியம்
 • அஷ்ட பிரபந்தம்
 • நளவெண்பா

எழுதிய நூல்கள்[தொகு]

 • அம்பலவாணன் (நாவல்)
 • அரிச்சந்திர புராணச் சுருக்கம்
 • அராபிக் கதைகள்
 • அற்புத விளக்கு
 • இளங்கோவன் (நாவல்)
 • குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
 • கொதிக்கும்மனம் (காந்தியின் மறைவு பற்றிய கவிதை நூல்) 1948 பிப்ரவரி, திராவிடர் கழகம், காஞ்சிபுரம்.
 • பத்திராயு (அ) ஆட்சிக்குரியோர்

பெற்ற விருதுகள்[தொகு]

திருப்பனந்தாள் காசிமடத்தில் 1967 அக்டோபர் 29 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவால், செந்தமிழ்க் களஞ்சியம் எனும் விருதும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 1981 இல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு, டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கியுள்ளது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும் பெற்றுள்ளார்.[2]

மறைவு[தொகு]

இவர் 1985 பெப்ரவரி 4 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. மே. வீ. வேணுகோபால்பிள்ளையின் பதிப்புத் தொழில் தமிழ்வட்டம் - முதல் ஆண்டுவிழா மலர் கட்டுரை, பக்கம்-43.
 2. அ. ம. சத்தியமூர்த்தி, "தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்" - பக்கம்-140.