உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்நிலைப் பள்ளி (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கும், இளநிலைப் பட்டப்படிப்புடன் கல்வியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கும், முதுநிலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதினொன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடப்பிரிவுகளில் அவர்களது பாடப்பிரிவுகளுக்கேற்பவும் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 1978ம் ஆண்டில் புதிய கல்வித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்புக்கு மேல் பொதுவான பாடத்திட்டத்தை கொண்ட 10+2 அதாவது, பத்தாம் வகுப்புக்கு மேல் இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயிலும் மேல்நிலைப் பள்ளிக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

பாடத்திட்டம்

[தொகு]

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பாடத்திட்டமானது, பொது பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவு என இரண்டு தலையாய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பாடப்பிரிவுகளும், 1978 முதல் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு, தற்போது சில வரையறுக்கப்பட்ட பாடப்பிரிவுகளுடன் நடைமுறையில் உள்ளது. கடைசியாக 2004-2005ம் கல்வியாண்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு, கீழ்க்காணும் பொது மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மட்டும் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ளது.[2]

மேல்நிலைப் பாடப்பிரிவுகளும்-பாடங்களும் [3]

பிரிவுகள் தலையாய பாடங்கள்
பிரிவு 1 கணிதவியல், இயற்பியல், வேதியியல், ஒரு விருப்பப்பாடம் (உயிரியல் / கணினியியல் அறிவியல் / புள்ளியியல் / உயிரி வேதியியல் / ஆங்கிலம் தொடர்பியல் (English for Communication))
பிரிவு 2 இயற்பியல் / வேதியியல் / உயிரியல் / ஒரு விருப்பப்பாடம் (நுண் உயிரியல் / உயிரி வேதியியல் / செவிலியர் பயிற்சி / சத்துணவு மற்றும் சரிவிகித உணவியல் / கணினியியல் அறிவியல் / ஆங்கிலத்தொடர்பியல் (English for Communication)
பிரிவு 2ஏ இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்
பிரிவு 3 கணக்குப் பதிவியியல் / வணிகவியல் / பொருளியியல் / ஒரு விருப்பப்பாடம் (வணிகக் கணிதம் / கணினியியல் / புள்ளியியல் / ஆங்கிலத்தொடர்பியல் (English for Communication)
பிரிவு 4 வரலாறு / பொருளியியல் / புவியியல் / ஒரு விருப்பப்பாடம் (அரசியல் அறிவியல் / கணினியியல் / புள்ளியியல் / ஆங்கிலத்தொடர்பியல் (English for Communication)

2004-2005ம் கல்வி ஆண்டு முதல் 5 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12 பாடங்கள் நீக்கப்பட்டது. (அடிப்படை அறிவியல் மற்றும் மனையியல் ஆகிய இரண்டு பாடங்கள் முதலில் நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டது)

புதிதாக சேர்க்கப்பட்ட பாடங்கள்
உயிரி வேதியியல்
நுண் உயிரியல்
சத்துணவு மற்றும் சரிவிகித உணவியல்
செவியியர் பயிற்சி
ஆங்கிலம் தொடர்பியல் (English for Communication)
நீக்கப்பட்ட பாடங்கள்
சிறப்பு மொழிப் பாடங்கள் (சிறப்புத் தமிழ் நீங்கலாக)
ஆயுர்வேதம்
வரைகலை மற்றும் ஓவியம்
சூழ்நிலையியல் கல்வி
இந்திய காலாச்சரம் மற்றும் தத்துவம்
இந்திய இசை
தருக்கவியல்
தத்துவவியல்
மனோதத்துவவியல்
சமூகவியல்
சித்த மருத்துவம்
மேற்கத்திய இசை

ஆசிரியர்கள்

[தொகு]

மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். பொதுப்பாடப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், பொருளியல், வணிகவியல், கணிதவியல் பாடங்களில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் இளங்கலை பட்டமும் பெற்றவர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். தொழிற்கல்விப் பிரிவில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் அல்லது மேல்நிலை தொழிற்கல்வி பயிற்றுனர் என அழைக்கப்படுகின்றனர். பல்வேறு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கேற்ற பாடங்களில் பட்டப்படிப்பு பயின்றவர்கள் தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுகின்றனர். பொறியியல் சார்ந்த சில தொழிற்கல்விப் பாடங்களுக்கு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் பட்டயக்கல்வி முடித்தவர்களும் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள்

[தொகு]

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை நடத்திவருகின்றது. மேல்நிலைத் தேர்வுகள் ஒரு கல்வி ஆண்டில், மார்ச், ஜூன் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று கால இடைவெளியில் நடத்தப்படுகின்றது. இதில் மார்ச் மாதம் முதன்மைத் தேர்வாகவும், ஜூன் மாதத் தேர்வு 'உடனடித் தேர்வாகவும், அக்டோபர் மாதத் தேர்வு துணைத் தேர்வாகவும் நடத்தப்படுகின்றது.
தேர்வுத் திட்டம்

தேர்வுகள் கால அளவு பாடங்கள் மதிப்பெண்கள்
பகுதி 1 (மொழிப் பாடங்கள்) 180 நிமிடங்கள் (3 மணி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, அரபி, பிரன்ச், ஜெர்மன், குஜராத்தி, சமஸ்கிருதம்,பாரசீகம் மற்றும் இலத்தின் 100
பகுதி 2 180 நிமிடங்கள் (3 மணி) ஆங்கிலம் 100
பகுதி 3 180 நிமிடங்கள் (3 மணி) முதன்மைப் பாடங்கள் 100

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tn.gov.in/schooleducation/statistics/table2-event.htm
  2. http://www.tn.gov.in/schooleducation/newgroups.htm
  3. http://www.tn.gov.in/schooleducation/newgroups.htm