மேல்சாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேல்சாந்தி (Melshanthi) என்பவர் கேரளத்து சபரிமலை ஐயப்பன் கோயிலின் பூசைகளை ஏற்றுநடத்துபவராவார்.

இந்த நம்பூதிரிகள் தாழமண் என்ற குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நம்பூதிரி குடும்பத்தினர் தாழமண் மடம் என்ற இடத்தில் வசிக்கின்றனர். இந்த மடம் நடு கேரளத்தின் செங்கனூரில் உள்ளது. இக்குடும்பத்தினர் சபரிமலை தவிர ஆரியங்காவு, அச்சங்கோவில் மற்றும் குளத்துப்புழை அய்யப்பன் கோவில் ஆகிய இடங்களில் பூசைகளுக்குத் தலைமை வகிக்கின்றனர். இந்த நம்பூதிரிகள் இல்லாமல் படி பூசை, உதயஸ்தமான பூசை, கலச பூசை போன்றவற்றை செய்ய இயலாது.

தேர்வு முறை[தொகு]

மேல்சாந்தியின் பதவிக்காலம் ஓராண்டாகும். அதாவது அக்டோபர் நடுவில் துவங்கி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவரை. தேவசம் வாரியம் நான்கு வேதங்களைக் கற்றவர்களாகவும், மந்திரம், தந்திரம் ஆகியவற்றில் அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக முன்னணி செய்தித் தாள்களில் சூலை இறுதியிலோ அல்லது ஆகத்து துவக்கத்திலோ அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை மேல்சாந்தியாக சேவை செய்தவர் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பித்தவர்கள் தேவசம் வாரியத்தினரால் நேர்காணல் செய்யப்பட்டு பட்டியலிடப்படுகின்றனர். இவர்களில் இருந்து தகுதிவாய்ந்த ஏறக்குறைய 12 பேர்களின் பெயரை தெரிவு செய்து பின்னர் இவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி ஒரு கிண்ணத்தில் போடப்படும். இன்னொரு கிண்ணத்தில் 11 வெற்றுச் சீட்டுகளும் ‘மேல்சாந்தி’ என்று எழுதப்பட்ட ஒரே ஒரு சீட்டும் சேர்க்கப்படும். பந்தளம் மகாராஜாவின் வாரிசு வழிவந்த பத்து வயதுக்கும் குறைவான ஒரு சிறுவனும் சிறுமியும்தான் குலுக்கல் சீட்டுகளை தேர்வு செய்து கொடுப்பர். இதற்காக குழந்தைகள் இருவரும் குலுக்கல் நாளன்று பம்பையில் நீராடி இருமுடி சுமந்து அழைத்து வரப்படுவர்.

ஐயப்பன் சன்னதியில் குலுக்கல் நடைபெறும். பெயர் எழுதிய சீட்டுக்கள் கொண்ட கிண்ணத்தில் இருந்து ஒரு சீட்டும் இன்னொரு கிண்ணத்தில் இருந்து ஒரு சீட்டும் எடுக்கப்படும். யாருடைய பெயர் எடுக்கப் படும்போது இரண்டாவது கிண்ணத்தில் இருந்து மேல்சாந்தி என்ற சீட்டு எடுக்கப்படுகிறதோ அவர்தான் அடுத்த மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார். இதேபோல்தான் மாளிகைபுரத்துக்கும் தேர்வு நடக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குள.சண்முகசுந்தரம் (2016 அக்டோபர் 18). "சபரிமலை கோயில் மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு". செய்திக் கட்டுரை. தி இந்து. 18 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்சாந்தி&oldid=2132346" இருந்து மீள்விக்கப்பட்டது