மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜி எம் ஏ டி இங்கு வழிமாற்றுகிறது, பிற பயன்களுக்கு, காண்க ஜி எம் ஏ டி (தெளிவின்மையகற்றுதல்) .

மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு (கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் டெஸ்ட் -ஜி எம் ஏ டி, உச்சரிக்கையில் ஜி-மேட்), என்பது வணிக பட்டப்படிப்புகளில் கல்விசார் வெற்றிபெறும் திறனை சோதித்தறிய கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் கணினிவழி தரநிர்ணய சோதனையாகும். பொதுவாக, எம் பி ஏ கல்வித்திட்டத்துக்கான நுழைவுத்தேர்வு நெறிமுறைகள் பலவற்றுள் ஒன்றாக வணிகக் கல்வி நிறுவனங்கள் இத்தேர்வைப் பயன்படுத்துகின்றன. உலகம் முழுவதும் பலதரப்பட்ட இடங்களில் இது கணினி வாயிலாக நடத்தப்படுகிறது. பரவலான கணினி வலையமைப்பு நிறுவப்படாத வெளிநாடுகளில், ஜி-மேட் தற்காலிகமாக கணினியை அடிப்படையாகக் கொண்ட தேர்வுமையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையிலும், உள்ளூர் தேர்வு மையங்களில் காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நடத்தப்படும் தேர்வாகவும் திகழ்கிறது. 2009 ஆகஸ்டு நிலவரப்படி இத்தேர்வுக்கான கட்டணம் உலகமெங்கும் 250 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[0]

தேர்வு[தொகு]

தேர்வுஎழுதுவோர் காலங்காலமாக தனது கல்வியிலும் வேலையிலும் பெற்றுள்ள சொல்வள, கணித மற்றும் பகுத்துணரும் எழுத்துத்திறன் போன்றவைகளை இத்தேர்வானது அளவிடுகிறது. தேர்வில் பங்குபெறுவோர் மூன்று சோதனை பகுதிகளில் கேள்விகளுக்கு விடையளிக்கின்றனர். இவர்களுக்கு இரு விருப்ப இடைவேளைகளும் அனுமதிக்கப்படுகின்றன; [1]பொதுவாக இத்தேர்வு நிறைவடைய நான்கு மணிநேரங்கள் தேவைப்படுகிறது.

இம் மதிப்பெண்கள் (பெரும்பாலான கல்வி நிறுவனங்களில்) தேர்வுக்குட்படுவோர் தேர்வு எழுதும் நாளிலிருந்து பல்கலைக்கழக தேர்வு வரை (அதாவது, ஒப்புதல் வரை விண்ணப்ப தேதி வரை அல்ல )அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகின்றன.

இத்தேர்வில் பெறக் கூடிய அதிகபட்ச மதிப்பெண் 800 ஆகும். அக்டோபர் 2009 உடன் முடிவடைந்த மூன்று வருடங்களில் சராசரி மதிப்பெண் 538.5 ஆக உள்ளது.[1]

பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (அனாலிடிகல் ரைட்டிங் அஸ்செஸ்மன்ட், AWA) பகுதியே முதலில் விடையளிக்கக் கூடியது. அளவறி பகுதியும் சொல்வள பகுதியும் அதைத் தொடர்ந்து வருகின்றன.

பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு[தொகு]

இத்தேர்வின் பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (AWA) பகுதி இரு கட்டுரைகளைக் கொண்டது. முதல் கட்டுரையில் மாணவர்கள் ஒரு விவாதத்தை பகுத்துணரும் விதமாகவும், இரண்டாவதில் மாணவர் ஒரு பிரச்சினையை பகுத்துணரும் விதமாகவும் தேர்வு அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் முப்பது நிமிடங்களுக்குள் எழுதப்பட வேண்டியனவாகவும் 0-6 வரையிலான அளவையால் மதிப்பிடக் கூடியனவாகவும் இருக்கின்றன. இரு மதிப்பீட்டாளர்களால் திருத்தப்பட்டு 0-6 வரையிலான மதிப்பெண்கள் அளிக்கப்படும் இக்கட்டுரைகளுக்கு ஏற்ற நிலை மதிப்பெண் 0.5 புள்ளிகளாகவும், சராசரி மதிப்பெண் 4.1 புள்ளிகளாவும் உள்ளது. இருவர் அளிக்கும் மதிப்பெண்களின் வித்தியாசம் ஒரு புள்ளிக்குக் குறைவானதாக இருக்கும் பட்சத்தில், அவ்விரு மதிப்பெண்களின் சராசரி கண்டுபிடிக்கப்படுகிறது. மதிப்பெண்களுக்கிடையே ஒரு புள்ளிக்கும் அதிகமான வித்தியாசம் காணப்படின் அவ்விரு கட்டுரைகளும் மூன்றாவது மதிப்பீட்டாளர் ஒருவரால் திருத்தப்பட வேண்டும்.[2]

முதல் மதிப்பீட்டாளர் வேன்டேஜ் லேர்னிங் எனும் நிறுவனத்தின் தனியுரிமைக் கணினி நிகழ்ச்சியான இன்டலிமெட்ரிக் ஆகும். இது ஆக்கப்பூர்வ எழுத்துத்திறன் மற்றும் 50-க்கும் அதிகமான மொழியியல் மற்றும் அமைப்புக் கூறுகளின் சொற்றொடர் இலக்கணத்தைப் பகுத்தாய்கிறது.[3] இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பீட்டாளர்கள் மனிதர்கள் ஆவர். இவர்கள் தேர்வுக்குட்படுபவரின் சிந்தனைத் தரத்தையும், சாதகமான தருணத்தில் அவர்கள் தெரிவிக்கும் சீர்மிகு கருத்தின் வலிமையையும் மதிப்பிடுகின்றனர். எழுத்துமுறை ஆங்கில மரபின் மீதான புலமை மதிப்பிடுதலில் பெரும் பங்காற்றும் பொழுதும், ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் பெற்றிராத தேர்வுக்குட்படுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு மதிப்பீட்டாளர்கள் பயிற்றுவிக்கப்படுவதால், சிறிய பிழைகள் எதிர்பார்க்கபடும் ஒன்றாகவே இருக்கின்றன.[6]

தேர்வின் பகுத்துணர்ந்து எழுதுதல் பகுதியின் இரண்டு கட்டுரைகளும் தலா 0 (குறைந்தபட்சம்) முதல் 6(அதிகபட்சம்) வரையுள்ள அளவைகளால் மதிப்பிடப்படுகின்றன:

 • 0 சற்றும் தெளிவில்லாததாகவோ கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்றதல்லாததாகவோ காணப்படும் கட்டுரைகள்.
 • 1 அடிப்படைக் குறைபாடுடைய கட்டுரைகள்.
 • 2 குறிப்பிடத்தக்க வழுவுள்ள கட்டுரைகள்.
 • 3 எல்லா காலத்துக்கும் ஏற்றதல்லாத கட்டுரைகள்.
 • 4 ஓரளவே நிறைவான கட்டுரைகள்.
 • 5 வலிமையான கருத்துடைய கட்டுரைகள்.
 • 6 தலைசிறந்த கட்டுரைகள்.

அளவறி பகுதி[தொகு]

அளவறி பகுதியானது 75 நிமிடங்களுக்குள் விடையளிக்கப்பட வேண்டிய 37 பன்முகத் தெரிவு வினாக்களை உள்ளடக்கியது. இருவகை வினாக்கள் இதில் காணப்படுகின்றன: புதிர் விடுவித்தல் மற்றும் தரவு நிறைவு. அளவறி பகுதி 0 முதல் 60 புள்ளிகள் வரை மதிப்பிடப்படுகிறது. அக்டோபர் 2009 உடன் முடிவடைந்த மூன்று வருடங்களில் சராசரி மதிப்பெண் 35.8/60 ஆக உள்ளது; 50க்கு அதிகமாகவும் 7 க்குக் குறைவாகவும் மதிப்பெண்கள் பெறுவது அரிதானதாய் இருக்கிறது.[7] [8]

புதிருக்கு தீர்வு==

இத்தேர்வு காரணங்காணல் திறனளவை சோதித்தறிகிறது. புதிர் விடுவிப்பு அல்லது பிரச்னைக்கு தீர்வு வினாக்கள் கணிதம், அடிப்படை இயற்கணிதம் மற்றும் துவக்கநிலை வடிவவியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்முகத்தெரிவு புதிர்களை உள்ளடக்கியன. புதிர்களை விடுவித்து அளிக்கப்பட்டுள்ள ஐந்து விடைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியதே நிபந்தனையாகும். புதிர்களுள் சில சாதாரண கணித கணிப்புகளாகும்; ஏனையவை கணிதத் தீர்வுகளை நாடும் நிஜ வாழ்க்கை பேச்சுவழக்குப் புதிர்களாக அளிக்கப்படுகின்றன.

எண்கள்: பயன்படுத்தப்படும் அனைத்து எண்களும் மெய்யெண்களே.
வடிவங்கள்: வினாக்களோடு வரும் வரைபடங்களும் வடிவங்களும் விடையளிப்பதற்கு ஏதுவான பயனுள்ள தகவல்களைப் பெறுவதற்கு உதவுவன. ஒரு குறிப்பிட்ட வடிவம் அளவுகளுக்குட்படாது வரையப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டாலேயொழிய வரைபடங்களும் வடிவங்களும் இயன்றவரை சரியளவு விகிதம் உடையவைகளாகவே வரையப்படுகின்றன. குறிப்பிடப்பட்டாலேயொழிய அனைத்து வரைபடங்களும் சமதளத்தில் இருக்கும்வண்ணமே அமைக்கப்படுகின்றன.

தரவு நிறைவு[தொகு]

இப்பகுதி வழக்கத்திற்கு மாறான வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி காரணங்காணல் திறனளவை சோதிக்கிறது. விடையளிக்க உதவும் தகவல்களை அளிக்கும் தொடர்புடைய விபரங்கள் இரண்டினை உள்ளடக்கிய வினாக்கள் தேர்வுக்குட்படுவோருக்கு வழங்கப்படுகிறது. வினாவிற்கு விடையளிப்பதற்கு இரண்டில் ஒரு விவரம் மட்டுமே போதுமானதாக உள்ளதா; மாறாக இரு விபரங்களுமே இன்றியமையாதவைகளா; அல்லது வினாவிற்கு விடையளிக்கும் வகையில் இவ்விவரங்கள் தரப்படவில்லையா என்பதைத் தேர்வுக்குட்படுவோர் நிர்ணயிக்க வேண்டும்;

தரவு நிறைவு என்பது ஜி-மேட் தேர்வுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த கணித வினா வகையாகும். ஒவ்வொரு வகையும் வினாக்களின் தொடர்ச்சியாக இரு எண்களிடப்பட்ட விபரங்களை உள்ளடக்கியன.

(அ) கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க முதல் விபரம் மட்டுமே போதுமானதாகவும், இரண்டாம் விபரம் தனித்து விடைகாண உதவும் திறனற்றதாகவும் இருந்தால்.....
(ஆ) இரண்டாம் விபரம் மட்டுமே விடையளிக்கப் போதுமானதாகவும், முதல் விபரம் தனித்து விடைகாண உதவும் திறனற்றதாகவும் இருந்தால்.....
(இ)விடையளிக்க இரு விபரங்களுமே இணைந்து தேவைப்படுபனவாயும், தனித்து இரு விபரங்களும் விடைகாண உதவும் திறனற்றதாகவும் இருந்தால்......
(ஈ)இரு விபரங்களும் சுதந்தரமாகவே வினாவிற்கு விடையளிக்க போதுமானதாக இருந்தால்......
(உ) வினாவிற்கு விடையளிக்கப் போதுமான விபரங்கள் அளிக்கப்பட்டிருக்காத பட்சத்தில்.

"இருக்கிற" என்ற வார்த்தையை "இருக்கவேண்டும்" என்ற வார்த்தையால் மாற்றியமைக்க வேண்டியதே இக்கேள்விகளின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கான எளிய வழியாகும் - தரப்பட்டுள்ள விடைகள் சாத்தியமானவைகளாக இருக்கின்றனவா என்பதை இவ்வினாக்கள் வினவவில்லை. மாறாக அவை விதிப்படி சரியான விடைகளையே தேர்ந்தெடுக்கக் கூறுகின்றன.

சொல்வள பகுதி[தொகு]

சொல்வள பகுதியானது 75 நிமிட காலநேரத்துக்குள் விடையளிக்கப்பட வேண்டிய 41 பன்முகத் தெரிவு வினாக்களை உள்ளடக்கியது. இதில் மூன்று வித வினாக்கள் காணப்படுகின்றன: வாக்கியத்தை திருத்துதல், குறைகாண் காரணங்காணல் மற்றும் படித்துப் புரிதல். சொல்வள பகுதி 0 முதல் 60 புள்ளிகள் வரை மதிப்பிடப்படுகிறது. அக்டோபர் 2009 உடன் முடிவடையும் கடந்த 3 வருடங்களில் பெறப்பட்ட சராசரி மதிப்பெண் 28.0/60 ஆக இருக்கிறது; 44 க்கு மேலும் 9 க்குக் கீழும் மதிப்பெண்கள் பெறுவது அரிதானதாய் இருக்கிறது.[1][4]

வாக்கியம் திருத்துதல்[தொகு]

வாக்கியம் திருத்துதல் பகுதி அமெரிக்க ஆங்கில இலக்கணம், பயன்பாடு மற்றும் நடையைப் பற்றிய தேர்வுக்குட்படுவோரின் ஞானத்தை சோதிக்கிறது.

பகுதி அல்லது முழுவதும் அடிக்கோடிடப்பட்ட வாக்கியத்தின் கீழே பட்டியலிட்டுக் கொடுக்கப்படும் ஐந்து தொடர்புள்ள விடை தெரிவுகளை உள்ளடக்கியது இவ்வாக்கியம் திருத்துதலெனும் பகுதி. முதல் விடைத் தெரிவு வாக்கியத்தின் அடிக்கோடிடப்பட்ட பகுதியை அப்படியே ஒத்திருக்கிறது. மீதமுள்ள நான்கு விடைத் தெரிவுகள் அடிக்கோடிடப்பட்ட வாக்கியப் பகுதியை உணர்த்தும் பலவித சொற்றொடர்களை உள்ளடக்கியது. வாக்கியத்தின் சொற்றொடர் அமைத்தலில் வலு இல்லாதிருப்பின் முதல் விடைத் தெரிவையே தேர்ந்தெடுக்கும்படி தேர்வுக்குட்படுவோர் அறிவுறுத்தப்படுகின்றனர். மாறாக வாக்கியத்தின் அசல் சொற்றொடர் வழுவோடு அமைந்திருப்பின், மீதமுள்ள நான்கு தெரிவுகளில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும்படி தேர்வுக்குட்படுவோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.[5]

வாக்கியத் திருத்த வினாக்கள் மூன்று துறைகளில் தேர்வுக்குட்படுவோரின் தேர்ச்சியை நிர்ணயிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது: சரியான நடை, பயனுள்ள நடை, மற்றும் சிறந்த சொல்தேர்வு.[5]சரியான நடை என்பது வாக்கியத்தின் இலக்கண நயத்தையும் சொல்லமைப்பையும் குறிக்கிறது. பயனுள்ள நடை என்பது தெளிவும் கருத்துச்செறிவும் நிறைந்த எண்ணங்களின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. சிறந்த சொல்தேர்வு என்பது அகராதி அர்த்தம் மற்றும் சொல் பிரயோகத்தின் தருணத்தோடு ஒப்பிடும்பொழுது உணரப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் பொருத்தத்தையும், துல்லியத்தையும் குறிக்கிறது.[13]

குறைக்காண காரணங்காணல்[தொகு]

இப்பகுதி தர்க்கரீதியான சிந்தனையை சோதிக்கும் வண்ணம் அமைக்கப்பெற்றுள்ளது. குறைகாண் ஆய்வு வினாக்கள், பகுப்பாய்வு செய்யப்படவேண்டிய வாதம் ஒன்றை தேர்வுக்குட்படுவோருக்கு அளிக்கின்றன. தேர்வுக்குட்படுவோர் முடிவை நிர்ணயிக்கவும், அனுமானங்களை அடையாளங்காணவும், வாதத்தின் பலம் மற்றும் பலவீனங்களை உணரும் விதத்தில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. சுருக்கமான அறிக்கைகளையோ வாதங்களையோ அளித்து அவ்வறிக்கை அல்லது வாதத்தின் அமைப்பையோ சாராம்சத்தையோ மதிப்பிடக் கோரும் வண்ணம் இப்பகுதி அமைந்துள்ளது. இவ்வகை வினாக்கள் சிறு பத்திகள் அல்லது வாசகங்கள் மூலம் காரணங்காணலை பகுப்பாய்ந்து மதிப்பிடுமாறு தேர்வுக்குட்படுவோரை பணிக்கின்றன. சில வினாக்களுக்கு அனைத்து விடைத் தெரிவுகளுமே கேட்கப்பட்ட வினாவின் விடையாய் இருக்கத்தக்கவை. தேர்வுக்குட்படுவோர் வினாவுக்கான சிறந்த விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்விடை சாத்தியமில்லாததாகவோ, தேவையை மிஞ்சியதாகவோ, பொருத்தமற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருந்து இயல்பறிவு மதிப்பீடுகளை அவமதிக்கும்படியான அனுமானங்களுக்கு வழிவகுக்காத ஒன்றாக இருத்தல் அவசியம்.

படித்துப் புரிதல்[தொகு]

இப்பகுதி குறைகாண் அணுகுதல் திறமையை சோதிக்கிறது. படித்துப் புரிதல் பகுதி தேர்வுக்குட்படுவோருக்கு வாசிப்பதற்காக கொடுக்கப்பட்ட பத்தியைக் குறிக்கிறது. இப்பத்தி எதைப்பற்றி வேண்டுமானாலும் இருப்பதோடு அதன் வினாக்கள் தேர்வுக்குட்படுவோர் எவ்வளவு நன்றாக அப்பத்தியையும், அது கொடுக்கும் தகவலையும் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சோதிக்கிறது. பெயருக்கேற்றவகையில், அது எழுதுமொழி பகுதியொன்றின் பொருள் மற்றும் தர்க்கரீதியான சொல்லமைப்பின் மீதான தேர்வுக்குட்படுவோரின் புரிதலை நிர்ணயிக்கிறது. ஜி மேட் சமூகவியல்கள், உயிரியல், இயற்பியல் மற்றும் வர்த்தகம் ஆகிய தலைப்புகளைச் சார்ந்த 200 முதல் 300 வார்த்தைகளைக் கொண்ட வாசிப்புப் பத்திகளைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு தலைப்பும் அதன் சாராம்சத்தைப் பொறுத்தவாறு இரண்டு அல்லது மூன்று வினாக்களை உள்ளடக்கியுள்ளது. வினாக்கள் பத்தியின் முக்கிய கருத்தைப் பற்றியும், அதை எழுதியவரின் எண்ண ஓட்டம், பத்தி தெரிவிக்கும் தர்க்கரீதியான கருத்து மற்றும் எழுத்தாளரின் கருத்து அல்லது தொனியைப் பொறுத்தும் எழுப்பப்படுகின்றன.

மொத்த மதிப்பெண்[தொகு]

பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (ஏ டபிள்யு ஏ) நீங்கலாக அளவறி பகுதியையும் சொல்வள பகுதியையும் உள்ளடக்கிய "மொத்த மதிப்பெண்" 200 முதல் 800 வரை மாறுபடுகிறது. தேர்வுக்குட்படுவோரில் மூன்றில் இரு பங்கினர் 400 முதல் 600 வரையுள்ள மதிப்பெண்களைப் பெறுகின்றனர். மதிப்பெண் பரவல் மணி வளைகோடு-ஐ ஒத்திருக்கிறது. இதன் திட்ட விலக்கம் தோராயமாக 100 புள்ளிகளில் அமைந்திருக்கிறது. அதாவது 68% தேர்வு எழுதுபவர்கள் 400 முதல் 600 மதிப்பெண்கள் பெறும்படிக்கும், இடைநிலை மதிப்பெண் 500க்கு அருகில் அமையும் வண்ணமும் ஆரம்பத்தில் இத்தேர்வு வடிவமைக்கப்பட்டது. 2005/2006 வருடத்தின் சராசரி மதிப்பெண் 533 ஆகும்.[6]

அளவறி மற்றும் சொல்வள பகுதிகள் கணினி வழி சோதனையை உள்ளடக்கியது. முதல் கேள்வி கடினமான ஒன்றாக இருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் அடுத்துவரும் சில வினாக்கள் 500-ன் மட்டத்தில் அமைந்திருக்கின்றன. தேர்வுஎழுதுவோர் சரியாக விடையளிக்கும் பட்சத்தில் அடுத்து வரும் கேள்விகள் கடினமானதாக அமையும். தேர்வுஎழுதுவோர் தவறாக விடையளிக்கும் பட்சத்தில் அடுத்து வரும் கேள்விகள் இலகுவாக அமையும். வினாக்கள் மாணவரின் மதிப்பெண்ணைப் பொறுத்து மிகப்பெரிய வினா வங்கி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் வினாக்களைப் விதிகளுக்கப்பாற்பட்டு பதிவு செய்வதை தடுக்க இவ்வினாக்கள் முறையாக நிகழ்நிலைப் படுத்தப்படுகின்றன.

இறுதி மதிப்பெண் தேர்வுக்குட்படுவோரால் விடையளிக்கப்பட்ட இறுதி வினாவைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை-(அதாவது, கணினிவழி கேள்விகள் எட்டுகின்ற கடினத்தைப் பொறுத்தவரை). மதிப்பெண் கணித்தலுக்குப் பயன்படுத்தப்படும் நெறிமுறை அதைவிட சிக்கலானதாக இருக்கிறது. தேர்வுஎழுதுவோர் சிறுபிள்ளைத்தனமான பிழை ஒன்றினை செய்துவிடும் பட்சத்தில் கணினியானது அதனை ஒரு நெறி பிறழ்வாக உணர்கிறது. தேர்வுக்குட்படுவோர் முதல் வினாவை விட்டுவிட்டாரென்றாலும் அவரது மதிப்பெண் வீச்சு அடிமட்டபாதிக்குக் கீழே விழவேண்டுமென்பது அவசியமற்றது.

மேலும் காலியாக விடப்பட்ட வினாக்கள் (அதாவது எழுதப்படாது விடப்பட்டவை) தவறாக விடையளிக்கப்பட்டவைகளை விட தேர்வுக்குட்படுவோரை அதிகம் பாதிக்கும். இது தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண்ணளிக்கும் எஸ் ஏ ட்டி தேர்விலிருந்து முரண்பட்டதாகும். ஒவ்வொரு சோதனைப் பகுதியும் தேர்வுக்குட்படுவோரை மதிப்பிடுவதற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இவற்றின் பிரயோகம் பொருத்தமாக இருக்குமா என்பதை அனுமானிப்பதற்கு ஏதுவாகவும் பல சோதனை வினாக்களைக் கொண்டுள்ளது.

சொல்வள மற்றும் அளவறி பகுதி மதிப்பெண்கள் 0 முதல் 60 வரை மாறுபடுகின்றன. பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு மதிப்பெண்கள் 0 முதல் 6 வரை வேறுபட்டு இரு ஜி மேட் கட்டுரைகளின் சராசரி மதிப்பெண்களை காட்டுகின்றன. சொல்வளம் மற்றும் அளவறி பகுதிகளிலிருந்து வேறுபடும் விதமாக கட்டுரைகள் மதிப்பிடப்படுவதோடு, அவற்றின் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படுவதில்லை.

கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து மதிப்பெண்கள் மற்றும் புறக்கணிப்புகள் தேர்வுக்குட்படுவோரின் மதிப்பெண் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றன. இது முந்தைய கொள்கையான கடந்த மூன்றாண்டுகால மதிப்பெண்கள் மற்றும் புறக்கணிப்புகளை மதிப்பெண் அறிக்கையில் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டுள்ளது.[மேற்கோள் தேவை]

தேவைப்படும் மதிப்பெண்கள்[தொகு]

பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஏற்கத்தக்க மதிப்பெண் விபரத்தையோ அல்லது விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களைப் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களையோ வெளியிடுவதில்லை. இருப்பினும் சில கல்வி நிறுவனங்கள் தங்களது கடந்த மாணவர் சேர்க்கையின் சராசரி மற்றும் இடைநிலை மதிப்பெண்களை மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழும் வகையில் வெளியிடுவதுண்டு.

சிறப்பு வாய்ந்த வணிகக் கல்வி நிறுவனங்கள் அனைத்தின் சராசரி மதிப்பெண்ணும், பிரபல சஞ்சிகைகளிலும், தரவரிசை சேவைகளிலும் பட்டியலிடப்படுவது போல 600 களின் அதிக மதிப்புகளாகவோ 700 களின் குறைந்த மதிப்புகளாகவோ காணப்படுகின்றது.

குறைந்த தேர்வு மதிப்பெண்ணை சரிகட்டுவதற்கு உத்வேகமளிக்கும் நிஜ வாழ்க்கை சாதனைகள், தலைசிறந்த மேற்கோள்கள் அல்லது தொடர்புகள், குறிப்பிடத்தக்க வலிமையான கருத்தை உடைய கட்டுரைகள், அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்திருத்தல் ஆகியன உதவுகின்றன.

மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வின் வரலாறு[தொகு]

வணிகக் கல்வி நிறுவனங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க வசதியாக ஒரு தரநிர்ணயம் செய்யப்பட்ட தேர்வை உருவாக்கும் குறிக்கோளோடு ஒன்பது வணிகக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட குழுமமாக 1953-ல் அவதரித்தது, இன்று மேலாண்மைப் பட்ட நுழைவு மன்றம் என்றழைக்கப்படும் கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் கவுன்சில்(ஜிஎம்ஏசி). ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில், இம்மதிப்பீட்டுத் தேர்வு (தற்பொழுது மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு என்றழைக்கப்படுவது), 2000-த்துக்கும் சற்று அதிகமானவர்களாலேயே பங்கேற்கப்பட்டது; தற்பொழுதோ வருடந்தோறும் 2000,000 க்கும் அதிகமானவர்களால் எழுதப்படுகிறது. ஆரம்பத்தில் 54 பள்ளிகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்ட இத்தேர்வு தற்பொழுது 1,500 கல்வி நிறுவனங்களாலும் உலகமெங்கும் 1,800 நிகழ்ச்சிகளாலும் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

2005-க்குப் பின் , ஜிஎம்ஏசி இத்தேர்வை நிர்வகித்து வருகிறது. 2006 ஜனவரி 1 ல், இத்தேர்வின் வினாக்கள் தயாரிப்பு மற்றும் கேட் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றை ஏ சி டி இன்க் என்ற நிறுவனத்துக்கும், உலகமெங்கும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணியை பியர்ஸன் வியு என்ற நிறுவனத்துக்கும் அளித்து வியாபார நிலையை மாற்றியிருக்கிறது ஜிஎம்ஏசி.

ஸ்கோர்டாப்.காம் என்ற இணையதளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து எதிர்காலத்தில் எம் பி ஏ மாணவராகும் வாய்ப்புள்ள சுமார் 6000 பேரை உள்ளடக்கிய ஒரு மோசடி சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக 2008 ஜூன் 23-ல், ஜி எம் ஏ சி-யால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜி-மேட் நடப்பு தேர்வு வினாக்களின் நேரடி ஒளிபரப்பை பார்த்துவிட்டதாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. அவ்வுறுப்பினர்களின் மதிப்பெண்களை செல்லாததாக்குதல், அவர்களது மதிப்பெண்களை ஏற்றுக்கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துதல் மற்றும் வருங்கால தேர்வுகளில் அவர்கள் பங்கேற்பதைத் தடுத்தல் என பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை ஜி எம் ஏ சி அவர்கள் மீது திணித்துள்ளது. ஸ்கோர்டாப் இணையதளத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு ஏமாற்றியவர்கள் மட்டுமே பாதிப்பிற்காளாவர், என்று ஜூன் 27 -ல் ஜி எம் ஏ சி விண்ணப்பதாரர்களுக்கு தைரியமூட்டியது.[7] மோசடியை முன்னிட்டு தேர்வு எழுதியவர்கள் 84 பேரின் மதிப்பெண்கள் செல்லாதவையாக்கப்பட்டதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை பின்னர் அறிவித்தது.[8]

மேலும் தேர்வு எழுதுவோர் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தைக் கொடுத்து தங்களுக்குப் பதிலாக வேறு நபரை தேர்வு எழுதச் சொல்லும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஜி எம் ஏ சி இவ்வருடத்திலிருந்து ஃபியுஜிட்சு பாம் செக்யூர் (கை நாள அலகீடு நுட்பம்) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உள்ளங்கைஅகல அலகீடு உபகரணங்களை முதலில் கொரியா மற்றும் இந்தியாவில் உள்ள தேர்வுமையங்களும், அதைத் தொடர்ந்து 2008-ன் இலையுதிர் காலத்திலிருந்து அமெரிக்காவும் பெற இருக்கின்றன. 2009 மே மாதத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களிலும் அவற்றை ஒருங்கிணைப்பு செய்ய ஜி எம் ஏ சி திட்டமிட்டுள்ளது.[9]

2013 ல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அடுத்த தலைமுறை ஜி மேட்டுக்கான திட்டங்களை ஜி எம் ஏ சி அறிவித்துள்ளது. பன்னாட்டளவில் காணப்படும் வேற்றுமைகள் உறுதியாகக் கருத்தில் கொள்ளப்படும்.[10]

பதிவுசெய்தலும் தயாரிப்பும்[தொகு]

தேர்வு எழுதுவோர் உடன்நிகழ் செயலாக்கம் வாயிலாகவோ அல்லது தேர்வு மையங்களுள் ஒன்றை அணுகியோ ஜி-மேட் தேர்வுக்குப் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வினை திட்டமிட ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையத்தில் முன்பதிவு செய்திருத்தல் அவசியம்.

ஜி-மேட்டின் மூன்றாம் நபர் தேர்வு தயாரிப்பு உபகரணங்களாக ஜி-மேட் நூல்கள் வாயிலாக சுயமாகக் கற்றல், ஜி-மேட் தயாரிப்புப் பயிற்சி வகுப்புகள் (நேரடி அல்லது உடன் நிகழ்), மற்றும் தனிமுறை பயிற்சி உள்ளிட்டவைகள் நடைமுறையில் உள்ளன.

மற்ற குறிப்புகள்[தொகு]

 • கணிப்பான்கள் ஜி-மேட் தேர்வில் அனுமதிக்கப்படுவதில்லை. விரல்களைக் கொண்டே கணக்கீடுகள் நிகழ்த்தப்பட வேண்டும்.
 • தேர்வு எழுதுவோரால் அணியப்படும் இலக்கமுறைக் கைக்கடிகாரங்கள் தேர்வு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும்.
 • ஜி-மேட் பயிற்சி தேர்வுகள் பரவலாக நடைமுறையில் உள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

 • வணிகக் கல்வி
 • வணிகப் பள்ளி
 • ஜி ஆர் ஈ]] (ஆவண பட்டத்திற்கான தேர்வு அல்லது கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷன்)
 • எல் எஸ் ஏ டி (லா ஸ்கூல் அட்மிஷன் டெஸ்ட்)
 • மேலாண்மைப் பட்டத்திற்கான சேர்க்கை மன்றம்(கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் கவுன்சில்)
 • வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு (மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)
 • நுழைவுத் தேர்வுகளின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "What Your Percentile Ranking Means". பார்த்த நாள் 2009-11-09.
 2. ஜி எம் ஏ சி. காம். பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு மதிப்பெண்களைப் புரிந்து பிரயோகித்தல் இணையதளம். அணுகப்பட்டது ஜூலை 12, 2007.
 3. ஜி எம் ஏ சி.காம் ஜி எம் ஏ டி, ஏ டபிள்யு ஏ தூண்டிகளின் பதிலைப் பிரயோகித்தமைக்கப்பட்ட இன்டலிமெட்ரிக் கட்டுரை மதிப்பீட்டு முறைமை. அணுகப்பட்டது ஜூலை 12 2007.
 4. http://www.mba.com/mba/takethegmat/theessentials/gmatscoresandreports/understandingyourgmatscores.htm
 5. 5.0 5.1 மேலாண்மைப் பட்டத்திற்கான சேர்க்கை மன்றம்(கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் கவுன்சில்),(2005). "தி அஃபீசியல் கைடு ஃபார் ஜி எம் ஏ டி, மதிப்புரை 11 ம் பதிப்பு", பக்கம் 637. பிளாக்வெல் பப்ளிஷிங் லிட்.
 6. ஜிஎம்ஏசி. (2006) மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு தேர்வர்கள் பற்றிய நேர்முக விவரம்: ஐந்து வருட சுருக்கம். அணுகப்பட்டது ஜூலை 10, 2007.
 7. ஜி எம் ஏ டி மோசடி: ஜி எம் ஏ சி யின் பதில் ஜூன் 30, 2008-ன் பிசினஸ் வீக்.
 8. கல்வி நிறுவனங்கள் ஜி எம் ஏ டி மதிப்பெண்களை ரத்து செய்கின்றன.
 9. "Business Schools Try Palm Scans to Finger Cheats". The Wall Street Journal. http://online.wsj.com/public/article/SB121669545112672811-Uj7ZUSmBKMwf7b0mj08V2tVyITM_20080821.html?mod=tff_main_tff_top. பார்த்த நாள்: 2008-07-25. 
 10. http://www.gmac.com/gmac/TheGMAT/The+Next+Generation+GMAT/

வெளி இணைப்புகள்[தொகு]

 • எம் பி ஏ.காம் - உடன் நிகழ் ஜி-மேட் பதிவும் பிற தகவல்களும்.
 • மேலாண்மைப் பட்டத்திற்கான சேர்க்கை மன்றம்(கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் கவுன்சில்)- ஜி-மேட் தேர்வை நிர்வாகிக்கிறது.