மேரி வர்கீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி புதிசெரில் வர்கீசு
பிறப்பு(1925-05-21)21 மே 1925
கொச்சி, கேரளா
இறப்பு17 திசம்பர் 1986(1986-12-17) (அகவை 61)
வேலூர், தமிழ்நாடு
தேசியம்India
கல்விமருத்துவர், உடலியக்க மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான கூட்டாளர்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர்
களம்உடலியக்க மருத்துவமு மறுவாழ்வுக்கான மருத்துவமும்
நிறுவனங்கள்கிருத்தவ மருத்துவக் கல்லூரி
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்மசிறீ 1972

மேரி புதிசெரில் வர்கீசு (Mary Puthisseril Verghese) (1925-1986) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். இவர் நாட்டில் உடலியக்க மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராவார். 1963ஆம் ஆண்டில், வேலூரிலுள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகளுக்கான வசதியுடன் கூடிய முதல் உடலியக்க மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு இவர் பொறுப்பேற்றார். 1966ஆம் ஆண்டில் நாட்டின் முதல் உள்நோயாளிகள் மறுவாழ்வு நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் துறையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [1] மருத்துவத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு 1972ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. [2]

இவரது நினைவாக மேரி வர்கீசு அறக்கட்டளை என்ற ஒரு விருது நிறுவப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் அமர் சேவா சங்கத்தின் நிறுவனரும் தலைவரான எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல் மருத்துவ மேரி வர்கீசு விருது வழங்கப்பட்டது. [3] [4] இன்றுவரை, மேரி வர்கீசு ஒரு மரியாதைக்குரிய மருத்துவராகவும், சிறந்த மக்களின் வாழ்க்கைக்கு பாடுபட்ட பெண்ணாகவும் பார்க்கப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

மேரி வர்கீசு இந்தியாவின் கேரளாவின் ]]கொச்சி]]யில் சேராய் என்ற கிராமத்தில் ஒரு வசதியானக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை உள்ளூர் தேவாலயம் மற்றும் சமூகத்தில் மதிப்பிற்குரிய தலைவராக இருந்தார். இவர் குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஏழாவது இடத்தில் இருந்தார். சேராயில் உள்ள ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை படித்த பிறகு, மேரி தனது கல்லூரி படிப்பிற்காக எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், 1946 மற்றும் 1952 க்கு இடையில் வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டதாரியானார். அங்கு இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஐடா இசுகட்டரை முதன்முதலில் சந்தித்தார். மருத்துவத்தில் தனது பயிற்சியை முடித்ததும், மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்பிய இவர், மகளிர் மருத்துவத் துறையில் சேர்ந்தார். [5]

முதுகெலும்பு காயமும் பிற்காலமும்[தொகு]

பட்டம் பெற்ற பிறகு, 1954 ஆம் ஆண்டில் ஒரு சாலை விபத்தில் காயமடைந்தார். இதில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு தனது இடுப்பிற்குக் கீழே செயலிழந்து விட்டார். பின்னர் மருத்துவர் பால் பிராண்ட் என்பவரின் வழ்காட்டுதலின் பேரில் பெர்த்தில் உள்ள ஆத்திரேலிய மறுவாழ்வு மையத்தில் புனர்வாழ்வு படிப்பைத் தொடர்ந்து, இந்த துறையில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஹோவர்ட் ஏ. ரஸ்கின் கீழ் நியூயார்க்கில் உள்ள உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் கூட்டாளருமானார். 1962இல் தனது கூட்டுறவு முடித்ததும், வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறையின் தலைவராக இந்தியா திரும்பினார். இவர் 1966ஆம் ஆண்டில் புனர்வாழ்வு நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் நாட்டின் முதல் முழுமையான உடல் ரீதியான மறுவாழ்வு பிரிவுக்குத் தலைமை தாங்கினார். முதன்மையாக முதுகெலும்பு காயம், தொழுநோய் மற்றும் மூளைக் காயம் உள்ளவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டார். இவர் 1976 வரை கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து பணியாற்றினார். [6]

மேரி வர்கீசு பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்

விருதுகள்[தொகு]

மருத்துவத்தில், குறிப்பாக, இந்தியாவில் உடல் மறுவாழ்வுத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, 1972இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இவருக்கு பத்மசிறீ வழங்கினார். 1985ஆம் ஆண்டில் இவருக்கு "உலக பார்வை விருது" வழங்கப்பட்டது. இந்த விருதுகள் சமூகத்திற்குள்ளேயே இவரது முன்னோடி பணியையும், இவர் செய்த நித்திய விளைவுகளையும் உள்ளடக்கியது. கூடுதலாக, மேரி வர்கீசு அறக்கட்டளை, திறனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்கான முதல் டாக்டர் மேரி வெர்கீஸ் விருதினை 2012 ஆம் ஆண்டில் இவருக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டது.

மரணமும் மரபும்[தொகு]

வர்கீசு திசம்பர் 1986 இல் வேலூரில் இறந்தார். இவரால் நிறுவப்பட்ட மறுவாழ்வு நிறுவனத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்ட மேரி வர்கீசு அறக்கட்டளை உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தொழில் பயிற்சித் திட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மேளா என்ற வருடாந்திர ஒன்றுகூடும் திட்டத்தையும் இந்த அறக்கட்டளை கூட்டாக நடத்துகிறது. [7] 2012 இல், மேரி வர்கீஸ் விருது அறக்கட்டளை நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mary Verghese
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Mary Verghese". Department of PMR, CMC, Vellore. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. Padma Shri Awardees – Padma Awards – My India, My Pride – Know India: National Portal of India
  3. "Amar Seva Sangam founder-president honored". http://www.thehindu.com/news/national/tamil-nadu/article2908011.ece. 
  4. Mishra, Anil Dutta (2009). World Crisis and the Gandhian Way. New Delhi: Concept Publishing Company. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8180696008. https://books.google.com/books?id=dh_Bb9zqpBsC&q=%22amar+seva+sangam%22+ramakrishnan&pg=PA128. 
  5. Full text of "Take My Hands The Remarkable Story Of Dr Mary Verghese"
  6. Silver Jubilee Souvenir of the Rehabilitation Institute, 1991 பரணிடப்பட்டது 11 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  7. . 20 February 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/more-rehabilitation-centres-needed-for-paraplegics/article2912060.ece. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_வர்கீசு&oldid=3126670" இலிருந்து மீள்விக்கப்பட்டது