மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி
MediumCombatAircraft1.JPG
நடுத்தர போர்வானூர்தி
வகை இரகசிய தாக்குதல் வானூர்தி, பல்வகை தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
வடிவமைப்பாளர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
முதல் பயணம் 2012
தற்போதைய நிலை வடிவமைப்பில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் இந்திய வான்படை
முன்னோடி எச்ஏஎல் தேஜாஸ்

மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி (Advanced Medium Combat Aircraft) முன்பு நடுத்தர போர் வானூர்தி (Medium Combat Aircraft) என்று அழைக்கப்பட்டது.[1]. இது இந்தியாவால் வடிவமைக்கப்படும் இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட ஐந்தாவது தலைமுறையை சார்ந்த, இரகசிய தாக்குதல், பல்வகை தாக்குதல் வானூர்தி ஆகும். இவ்வானூர்தி ஜாகுவார், மிராஜ் 2000 போன்றவற்றிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படுகிறது. இவ்வானூர்தி எச்ஏஎல் தேஜாஸ், சுகோய் சு 30 எம்கேஐ ஆகிய வானூர்திகளுடன் பயன்படுத்தப்படும். இவ்வானூர்தியை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது.[2] ஐக்கிய அமெரிக்காவின் எப்\ஏ 22 ராப்டர் என்பது மட்டுமே தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாவது தலைமுறை வானூத்தியாகும்.[3].

திட்ட வளர்ச்சி[தொகு]

1983 ஆம் ஆண்டு இந்தியா இலகுரக போர்வானூர்தி (Light Combat Aircraft) திட்டத்தை துவங்கியது. இடையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் இத்திட்டம் பலவாறு தடைபட்ட போதிலும், இத்திட்டத்தின் இரண்டாம் பகுதியான நடுத்தர போர்வானூர்தி துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இலகுரக போர்வானூர்தி திட்டம் வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ளது, இதற்கு எச்ஏஎல் தேஜாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இலகுரக போர்வானூர்தி 4.5 தலைமுறையை சார்ந்தது.

ஆகஸ்டு 2006 இல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்தியா இலகுரக போர்வானூர்தி வடிவமைப்பில் பெற்ற அனுபவம் நடுத்தர போர்வானூர்தி வடிவமைப்பில் பெரும் உதவியாக இருப்பதாக கூறினார்.[4] முழுமையாக இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாகும் இவ்வானூர்தி, இந்தியாவின் மற்றொரு திட்டமான இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஐந்தாவது தலைமுறை போர்வானூர்தியுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.[5] இத்திட்ட இயக்குனர் பி. எஸ். சுப்பிரமணியம், பெப்ரவரி 2009 இல் இவ்வானூர்தியில் இந்திய தயாரிப்பில் உருவான காவேரி இயந்திரம் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.[6]

வடிவமைப்பு[தொகு]

இவ்வானூர்தியின் வடிவமைப்பு எச்ஏஎல் தேஜாஸ் வானூர்தியின் வடிவத்தில் இருந்து மாறுபட்டது. இரகசிய நடவடிக்கைகளுக்குத் தகுந்த முறையில் கதிரலைக் கும்பாவில் இதன் வான்சட்டத்தின் குறுக்குவெட்டு தோற்றம் மிகச் சிறியதாக தோற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எச்ஏஎல் தேஜாஸ் வானூர்தியில் இல்லாத கிடை நிலைப்பி (horizontal stabilizers) இவ்வானூர்தியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் விசையை இந்தியத் தயாரிப்பில் உருவான மாறுபடுத்தப்பட்ட காவேரி இயந்திரம் அளிக்கிறது. இவ்வியந்திரம் அளிக்கும் உந்துவிசை-எடை விகிதம் சுமார் 7.8:1 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[7] இவ்வானூர்தியின் எடை சுமார் 19-20 டன் இருக்கும். இவ்வானூர்தி தன் ஆயுதங்களை வானூர்தியின் உள்பகுதியில் மறைத்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் இரகசிய திறன் மேலும் மேம்படுத்தப்படுகிறது.[8]

சிறப்பம்சங்கள்[தொகு]

குறைந்த அளவிலே ரேடியோ அலைகளால் கண்டறியப்படும் வடிவத்தில் இவ்வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி தன் ஆயுதங்களை வானூர்தியின் உள்பகுதியில் மறைத்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் மறைந்து செல்லும் திறன் மேலும் மேம்படுத்தப்படுவதுடன், பெரும் வேகத்தில் செல்லும் திறன் அதிகரிக்கப்படுகிறது. இவைதவிர பல்வேறு கருவிகள் இதன் மறைந்து செல்லும் திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் இவ்வானூர்தி நவீன ஒருங்கிணைக்கப்பட்ட பறப்பு மின்னணுவியல் ஒருங்கியம், தகவல் ஒருங்கிணைப்பு கணினி வசதி ஆகிய பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கும். இதன் பறப்பு மின்னணுவியல் வசதிகள் வானோடிக்கு மிக துல்லியமாக எதிரி குறிகளை தாக்க வல்ல திறனை அளிக்கும். வானில் இருந்து வான் தாக்கும் அஸ்திரா ஏவுகணையும், வானில் இருந்து தரை தாக்கும் பல்வகை ஏவுகணைகளும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]