மேமன்கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேமன்கவி
பிறப்புஅப்துல் கரீம் அப்துல் ரசாக்
ஏப்ரல் 29, 1957 (1957-04-29) (அகவை 66)
இருப்பிடம்கொழும்பு
தேசியம்இலங்கையர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர்

மேமன்கவி (Memon Kavi, அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்.[1]

எழுத்துலகில்[தொகு]

இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் தமிழே என் மூச்சு எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது நாளைய நோக்கிய இன்றில் கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார்.

பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், உருசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை ஓன்று தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

இவரது நூல்கள்[தொகு]

  • யுகராகங்கள் (1976, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்)
  • ஹிரோசிமாவின் ஹீரோக்கள் (1982, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
  • இயந்திர சூரியன் (1984, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
  • நாளையை நோக்கிய இன்றில் (1990, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
  • மீண்டும் வசிப்பதற்காக (1999, மல்லிகைப் பந்தல்)
  • உனக்கு எதிரான வன்முறை (2005, துரைவி வெளியீடு)
  • ஒரு வாசகனின் பிரதிகள் -கட்டுரைத் தொகுப்பு (2010, கொடகே வெளியீடு)
  • மொழி வேலி கடந்து.. -கட்டுரைத் தொகுப்பு (2013, கொடகே வெளியீடு)
  • ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து....கவிதைத் தொகுப்பு (2017, கொடகே வெளியீடு)
  • பிரதிகள் பற்றிய பிரதிகள் (2019, கொடகே வெளியீடு
  • பின்காலனியம்- கலை இலக்கியமும், கோட்பாடும் (அச்சில்)
  • டொமினிக் ஜீவாவும் நானும் (அச்சில்)

விருதுகள்[தொகு]

  • 1990 - நாளைய நோக்கிய இன்றில், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு.
  • 2005 - உனக்கு எதிரான வன்முறை, யாழ். இலக்கிய வட்டத்தின் இணைப்புச் சங்கமான இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேமன்கவி&oldid=3312681" இலிருந்து மீள்விக்கப்பட்டது