உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரஞ்சனி மேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரஞ்சனி மேதி
பிறப்புஅசாம், இந்தியா
பணிகதக் நடனக் கலைஞர், நடிகை
பெற்றோர்
  • ஜாய் பிரகாஷ் மேதி (தந்தை)
  • மராமி மேதி (தாய்)
வாழ்க்கைத்
துணை
நீல் தாஸ்
விருதுகள்உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்

மேக்ரஞ்சனி மேதி (Meghranjani Medhi) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய கதக் நடனக் கலைஞரும் நடிகையுமாவார். கதக் நடனக் கலையில் தனது சிறப்பான பங்களிப்புக்காக, 2024 ஆம் ஆண்டில் இவர் சங்கீத நாடக அகாதெமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றார். இவ்விருது இளம் கலைஞர்களின் திறமையையும் சாதனைகளையும் கௌரவிக்கும் உயரிய தேசிய விருதாகும்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

மேக்ரஞ்சனி மேதி அசாம் மாநிலத்தில் பாடகர், இசையமைப்பாளர், இசை இயக்குநரான ஜாய் பிரகாஷ் மேதி மற்றும் கதக் நடனக் கலைஞரான மராமி மேதி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] மூன்று வயதிலேயே தனது தாயாரிடம் கதக் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் லக்னோ மரபைச் சேர்ந்த புகழ்பெற்ற கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ், ஜெய்ப்பூர் மரபைச் சேர்ந்த பண்டிட் ராஜேந்திர கங்கானி ஆகியோரிடம் மேம்பட்ட பயிற்சி பெற்றார்.[2] லக்னோவில் உள்ள பாட்கண்டே சங்கீத வித்யாபீடத்தில் கதக் நடனத்தில் நிருத்ய நிபுண் பட்டத்தைப் பெற்றார். அதன்பின், இந்திரா கலா சங்கீத விஸ்வவித்யாலயத்தில் கதக் நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2017 ஆம் ஆண்டில், அசாமின் சங்கீத சத்ர பரீக்ஷா பரிஷத் அமைப்பின் மூலம் சத்திரியா நடனத்தில் நிருத்ய நிபுண் பட்டத்தையும் பெற்றார். தற்போது மேக்ரஞ்சனி மேதி, கலைஞரான தனது கணவர் நீல் தாஸ் உடன் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் வசித்து வருகிறார்.

நடன வாழ்க்கை

[தொகு]

மேக்ரஞ்சனி மேதி தனது மூன்று வயதிலேயே தாயாரிடம் கதக் நடனத்தைப் பயிலத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள பாட்கண்டே சங்கீத வித்யாபீடத்தில் கதக் நடனத்தில் நிருத்ய நிபுண் பட்டத்தைப் பெற்றார்.[3] இந்திய அரசின் பண்பாட்டுத் துறையிடமிருந்தும், பண்பாட்டு வளங்கள் பயிற்சி மையம் வழங்கிய உதவித்தொகைகளையும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில் இந்தியப் பண்பாட்டு உறவுகளுக்கான மன்றம் மூலம் கதக் நடனத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தாயாருடன் இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள மேக்ரஞ்சனி, தனிநபர் கதக் நடன நிகழ்ச்சிகளையும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல புகழ்பெற்ற விழாக்களில் அரங்கேற்றியுள்ளார். அவற்றில் புதுதில்லியில் நடைபெற்ற சாதனா நடன விழா, தேசிய கதக் நடன நிறுவனம் ஏற்பாடு செய்த கதக் மகோத்சவ், பிராக்ஜ்யோதி பன்னாட்டு நடன விழா (2011, 2012, 2013, 2014), கஜுராஹோ நடன விழா (2014), கலா கோடா கலை விழா (2015), சர்ஜயா நடன இசை விழா (2013), பஞ்ச தத்துவ விழா (மும்பை) , சென்னையில் நடைபெற்ற உலக நடன நாள் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. மேலும், இந்தியப் பண்பாட்டு உறவுகளுக்கான மன்றத்தின் சார்பில் எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து கலைநிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஹார்பர்ஃபிரண்ட் மையத்தின் பிளெக் நடன அரங்கிலும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மேக்ரஞ்சனி மேதி தனது தாயாருடன் இணைந்து கவுகாத்தியில் சூர் சங்கம் என்ற நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.[4]

நடிப்பு வாழ்க்கை

[தொகு]

மேக்ரஞ்சனி மேதி தனது நடிப்பு வாழ்க்கையை லக்கிமி என்ற காணொளித் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் அபிமானி மொன், பூர்ணிமா, ஜான்மொனி (முதல், இரண்டாம் பாகங்கள்), ருமால்,கசிஜுன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரது முதல் முழுநீளத் திரைப்படமான அனுராதா 2015 ஆம் ஆண்டில் வெளியானது. இதற்கு மேலாக, துமி துசொகுட் கஜோல் லோலே என்ற தொலைக்காட்சி தொடர், பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கவுகாத்தி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் விழாவில் தங்கப் பதக்கம் வென்றார். 2010–2011 ஆம் ஆண்டில் ஜான்மொனி காணொளித் திரைப்படத்தில் நடித்ததற்காக நெப்கஸ் ஊடக விருது சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். தனது முதல் முழுநீளத் திரைப்படமான அனுராதாவில் வெளிப்படுத்திய நடிப்பிற்காக நிரோத் சௌதுரி சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், 2023 ஆம் ஆண்டுக்கான கதக் நடனப் பிரிவில் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றார்.[5][6] 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கலைத்துறைக்கான அவரது அர்ப்பணிப்பை பாராட்டி கலா சாதக் – கலைக்கு அர்ப்பணித்தவர் என்ற விருது வழங்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Meghranjani Medhi - Kathak Dancer Artistic Journey from Tradition to Global Stages - YetiNews" (in en). 9 November 2023. https://yetinews.com/lifestyle/meghranjani-medhi-kathak-dancer-artistic-journey-from-tradition-to-global-stages/.
  2. ↑ Medhi, Marami; Talukdar, Debasish (2022-09-17). Kathak Volume-1 A Theoretical & Practical Guide (in ஆங்கிலம்). anshika publication. ISBN 978-93-5780-420-2.
  3. ↑ "Meghranjani Medhi – Making Waves With Her Dance and Acting". Assam Online Portal (in ஆங்கிலம்). 22 April 2016.
  4. ↑ "Dance chose me, says Kathak exponent Meghranjani Medhi". The Tribune (in ஆங்கிலம்). Retrieved 2025-03-14.
  5. ↑ Tribune, The Assam (2024-02-28). "Meghranjani Medhi among 12 to receive Sangeet Natak Akademi Award". assamtribune.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-14.
  6. ↑ Time, Pratidin. "5 Assam Artists Among 82 Conferred with Ustad Bismillah Khan Yuva Puraskar". www.pratidintime.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-14.
  7. ↑ "Kathak dancer Meghranjani Medhi honoured with prestigious 'Kala Sadhak' award" (in en). India Today NE. 24 January 2025. https://www.indiatodayne.in/assam/story/kathak-dancer-meghranjani-medhi-honoured-with-prestigious-kala-sadhak-award-1160162-2025-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ரஞ்சனி_மேதி&oldid=4565477" இலிருந்து மீள்விக்கப்பட்டது