மெராக் கோயில், மத்திய ஜாவா
மெராக் கோயில் | |
---|---|
மெராக் கோயில் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | மத்திய ஜாவாவைச் சேர்ந்த கோயில் |
நகரம் | கிளாடன் ரீஜென்சி, மத்திய ஜாவா |
நாடு | இந்தோனேசியா |
ஆள்கூற்று | 7°40′11″S 110°33′05″E / 7.669735°S 110.551275°E |
மெராக் கோயில் (Merak Temple) இந்தோனேசியாவில் மத்திய ஜாவா, மெராபி மலையின் தென்கிழக்கு சரிவுகளில் கராங்நோங்கோ கிராமத்தில், கிளாடன் ரீஜென்சியில், கிளாடன் நகரத்திலிருந்து வடமேற்கில் அமைந்துள்ள 10 ஆம் நூற்றாண்டின் ஜாவானிய இந்துக் கோயில் வளாகமாம். இங்குள்ள கோயில் சிவன் கோயிலாகும். உள்நாட்டில் இதனை கேண்டி மெராக் என்று அழைக்கின்றனர்.[1] கோயில் வளாகம் ஒரு முதன்மைக் கட்டடம் மற்றும் மூன்று பெர்வாரா (துணை) கோயில்களைக் கொண்டு அமைந்துள்ளது.இது 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டை இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மாதரம் இராச்சியத்தைச் சேர்ந்ததாகும்.[2]
மெராக் கோயிலுக்கு அருகில் பல கோயில்களின் சிதைவுகள் மற்றும் தொல்பொருள் தளங்கள் உள்ளன. கண்டி மெராக் கோயிலைப் போல் அல்லாது, பெரும்பாலானவை அழிந்த நிலையிலும், முற்றுப் பெறலாத நிலையிலும் உள்ளன. அவற்றில் கரங்கோங்கோ கோயில், க்ரியான் கோயில் மற்றும் பெகேலான் கோயில் போன்றவை அடங்கும்.
வரலாறு
[தொகு]இக்கோயிலின் கட்டடக்கலை பாணியைப் பொறுத்தவரை, தெய்வங்கள், யோனி ஆகியவை முதன்மை அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில்களின் சிற்பங்களும் அங்கு உள்ளன.இந்த கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். இது 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். இந்த கோயில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1925/1926 முதல் பூர்வாங்க ஆராய்ச்சி டச்சு கிழக்கிந்திய தொல்பொருள் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புனரமைப்பு திட்டம் மிகவும் மெதுவாகவே நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டில் அப்பணி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மேலே உள்ள ரத்னா உச்சம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.[3]
கட்டிடக்கலை
[தொகு]இந்த கோயில் 1,480 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ளது. முதன்மை கோயிலின் அனைத்துப் பகுதிகளும் முற்றிலும் புனரமைக்கப்பட்டுவிட்டன. மேலும் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் பிற சிலைகள் மிகவும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முதன்மைக் கோவில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. மூன்று பெரிவார கோயில்களின் இடிபாடுகளும் முதன்மைக் கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ளன.கிழக்குப் புறத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அதன் இரு புறங்களிலும்நன்கு பாதுகாக்கப்பட்ட இரண்டு மகரங்களால் சூழப்பட்டுள்ள நிலையில் உள்ளது. மற்ற கோயில்களில் உள்ள மகரங்களைப் போலல்லாமல், மெராக் கோயிலின் மகரங்கள் தனித்தன்மையினைக் கொண்டு அமைந்துள்ளன. அதன் தும்பிக்கை போன்ற அமைப்புகள் கோப்ரா போன்ற நாகாவாக வடிவமைக்கப்பட்டு, ஒரு மகர-நாக சிமேராவை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. சிமேரா என்பது பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகையைச் சார்ந்ததாகும். அதன் படிக்கட்டுகள் வழியாகச் செல்லும்போது அதன் முக்கிய இடத்தினை பார்வையாளர்கள் சென்று அடையலாம். அதன் மேல் காலாவின் தலை அலங்கரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. முதன்மை அறைக்குள் வடக்கு பக்கத்தில் நாகாவின் தலையுடன் செதுக்கப்பட்ட ஒரு யோனி உள்ளது. இந்த யோனியின் மீது கல்லால் ஆன லிங்கமாக இருந்துள்ளது. இருப்பினும் தற்போது அதனைக் காண முடியவில்லை.
வெளிப்புற சுவர்களின் ஒவ்வொரு புறத்திலும் மூன்று மாடங்களைப் போன்ற கோஷ்ட அமைப்புகள் காணப்படுகின்றன. மேற்கு சுவரின் கோஷ்டத்தில் விநாயகர் சிலை, வடக்குப்பகுதியில் உள்ள கோஷ்டத்தில் மகிஷாசுரமர்த்தினியாக துர்க்கை சிலை (துர்கா காளை-அரக்கனைக் கொன்றது) ஆகியவை உள்ளன. தெற்கு கோஷ்டத்தில் எந்த சிலையும் இல்லை. ஆனால் பெரும்பாலும் அவ்விடத்தில் அகத்தியர் சிலை இருந்ததற்கு வாய்ப்பு உண்டு. விநாயகர் சிலை சேதமடைந்திருந்தாலும் முற்றுப் பெற்ற நிலையில் காணப்படுகிறது. துர்க்கையில் சிலை சற்று சேதமடைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அதன் தலைப் பகுதியைக் காணவில்லை. பெரும்பாலும் அப்பகுதி கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம். கோபுரம் போன்ற கூரை பிரமிடு வடிவில் மூன்று தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் ரத்னா உச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை வரிசையாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தின் மூலையிலும் தெய்வங்களின் தலையைக் கொண்ட உருவங்கள் விளிம்புகளில் காணப்படுகின்றன. அவற்றின் உருவ அமைப்பும், தெய்வங்களின் உருவ அமைப்பும் யோகியாகர்த்தாவில் காணப்படுகின்ற .கெபாங்க் கோயிலில் அமைந்துள்ளவாறு காணப்படுகின்றன.
குறிப்புகள்
[தொகு]- ↑ http://joglosemar.co/2012/10/candi-merak-di-desa-karangnongko-relief-tak-kalah-eksotis-masih-kalah-promosi/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Archived copy". Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)