உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யறம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ.உ.சி என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளை (ஆங்கிலம்: V._O._Chidambaram_Pillai) ( (பி)- செப்டம்பர் 5 1872 - (இ) நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது.

வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது. வ.உ.சி. அந்த நூலைத் தஞ்சாவூரைச் சேர்ந்த இராவ் பகதூர் திரு. சீனிவாச பிள்ளை என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் ஆவார். வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது. முதல் பதிப்பு சென்னையில் ப்ரோக்ரஸிவ் அச்சகத்தில் 1914- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு சென்னையில் கலாரத்னாகரா அச்சகத்தில் 1917- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. மூன்றாவது பதிப்பு அம்பாசமுத்திரத்தில் சண்முகவிலாஸ் அச்சகத்தில் 1930- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

தமிழக அரசு வ.உ.சி. யின் நூல்களின் உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வ.உ.சி.யின் நூல்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம். "மெய்யறம்" என்ற சொல்லில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி "மெய்". இரண்டாம் பகுதி "அறம்". "மெய்" என்றால் உண்மை என்று பொருள். "அறம்" என்பது தர்ம நெறி ஆகும். வ.உ.சி. இந்நூலில் உண்மையான அறத்தைப் பற்றி இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார். இந்நூல் மிக எளிய, சிறிய வரிகளின் தொகுப்பு ஆகும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆகும். இந்நூல் தெளிந்த சிந்தனை, வாழ்க்கையைப் பற்றிய அறிவு, ஞானம் இவற்றை அளிக்கக் கூடியது ஆகும். இந்நூலில் இருந்து ஒழுக்கம், கலாச்சாரம், வாழும் முறை இவை குறித்து நாம் அறியலாம். இளஞர்கள் நல்வாழ்க்கை வாழ நன்னடத்தையைக் கற்பிக்கிறது. இது அறிவுரைகளைக் கட்டளைகளாகக் கூறுகிறது. மெய்யறம் என்னும் இந்நூலில் 5பகுதிகளும் 125 அதிகாரங்களும் உள்ளன. ஒரு அதிகாரத்தில் பத்து வரிகள் உள்ளன. மொத்தம் 1250 வரிகள் உள்ளன. ஒவ்வொரு வரியும் ஒரு அறிவுரை கூறுகிறது.

நூற் பிரிவுகள்

[தொகு]
  1. மாணவரியல்
  2. இல்வாழ்வியல்
  3. அரசியல்
  4. மெய்யியல்
  5. அந்தணரியல்

மாணவரியல்

[தொகு]

முதல் பகுதியான "மாணவரியல்" மாணவர்களுக்கானது. அது 30 அதிகாரங்கள் கொண்டது. இந்தப் பகுதியில் வ.உ.சி. இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் என்று குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும், அறியக் கூடாதவற்றைத் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கடமை, அடக்கம், கல்வி, உடல் நலம் இவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார். அவர் நமது உடல், ஆன்மா, மனம் இவை குறித்தும் கூறியுள்ளார். நமது மனமே நமது செயல்களுக்குக் காரணமாகும். நமது உடலை, அதாவது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது நமது மனமே ஆகும். ஆன்மா நமது மனத்தை வழி நடத்துகிறது. நமது விதியைத் தீர்மானிப்பது கடவுளல்ல, நாம்தான். ஏனெனில் நமது செயல்களின் பயனே நமது விதியாகும் என்று உறுதிபடக் கூறுகிறார். நமது நன்மைக்கும் தீமைக்கும் நமது செயல்களே காரணம். அதனால் நல்விதியை விரும்பினால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் இறைச்சி, மது, திருட்டு, புறம் கூறுதல், பொய், இரத்தல், பொறாமை,போதை பொருட்கள், பயனில் சொல் போன்றவற்றை விலக்கும்படி வ.உ.சி. கூறுகிறார். மேலும் நட்பு, நன்றி மறவாமை, நடுநிலைமை, அடக்கம், ஒழுக்கம், முயற்சி, ஊக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.

இல்வாழ்வியல்

[தொகு]

இரண்டாவது பகுதி "இல்வாழ்வியல்" ஆகும். இதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இதில் வ.உ.சி. இல்லறம் குறித்து விளக்குகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளக்குகிறார். பின்னர் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திச் செல்வதற்கும் அறிவுரைகள் கூறுகிறார். மறதி, காலம் தாழ்த்துதல், மடி, பேதைமை, வெண்மை போன்றவற்றை நீக்க வேண்டும் என்றும் அதிக துயில், அச்சம், அதிக ஆசை, செருக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் வ.உ.சி. கூறுகிறார். பெற்றோர், குழந்தைகள், விருந்தினர், முன்னோர் ஆகியோரைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்று அறிவுறுத்துகிறார்.சமுதாய வாழ்க்கை, அன்பு, பொறுமை, ஈகை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்.

அரசியல்

[தொகு]

மூன்றாவது பகுதி "அரசியல்" ஆகும். இதில் 50 அதிகாரங்கள் உள்ளன. இதில் ஒரு மன்னர் எப்படி அரசாள வேண்டும் என்று விளக்குகிறார். நல்ல அரசாங்கத்தின் முக்கியத்துவம், அதற்கு இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிக் கூறுகிறார். ஓர் அரசன் பரிவுடன் இருக்கவேண்டும், எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒற்றர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் முக்கியத்துவம், ஒரு நாட்டின் சிறப்புகள் எவை, நாட்டிற்குப் பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும், தொழில்களின் சிறப்பு, படை எவ்வளவு அவசியம், ஓர் அரசன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவை என்று இந்தப் பகுதியில் தெளிவாகக் கூறுகிறார்.

அந்தணரியல்

[தொகு]

10 அதிகாரங்கள் கொண்ட நான்காவது பகுதி "அந்தணரியல்" ஆகும். இது துறவறம் பற்றிக் கூறும் பகுதி ஆகும். இதில் துறவிகளின் இயல்பு, அவர்களுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம், அவர்களுக்கு இருக்கக் கூடாத குணங்கள்(வெஃகாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை போன்றவை), அவர்கள் செய்ய வேண்டியவை(தவம், துறவு) ஆகியவற்றை விளக்குகிறார்.

மெய்யியல்

[தொகு]

கடைசிப் பகுதி "மெய்யியல்" ஆகும். இதில் 5 அதிகாரங்கள் உள்ளன. இது மிகவும் நுட்பமானது. ஏனெனில் இது கடவுளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் அத்தியாயம் ஆகும். இதில் உண்மை நிலை(கடவுளை)யை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். கடவுள் தான் உண்மை, மற்றவை எல்லாம் உண்மை அல்ல என்பதால் வ.உ.சி. கடவுளை "மெய்" என்றே அழைக்கிறார். கடவுள் என்பது என்ன, கடவுளைப் புரிந்து கொள்வது எப்படி, உணர்வது எப்படி, அந்த நிலைமையை அடைவது எப்படி என்று படிப்படியாக விளக்குகிறார். இந்தப் பகுதி ஆழ்ந்து படிக்க வேண்டிய பகுதி ஆகும்.

உள்ளடக்கம்

[தொகு]

ஒவ்வொரு அதிகாரமும் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்குடன் உள்ளது. ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் வரியில் அதன் தலைப்பை விளக்குகிறார். அடுத்து வரும் வரிகளில் அதன் நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்கிறார். கடைசி வரியில் அதைப் பின்பற்ற வேண்டுமா தவிர்க்க வேண்டுமா என்று ஆலோசனை கூறுகிறார். எடுத்துக்காட்டாக 29- ஆவது அதிகாரமான "ஊக்கமுடைமை" என்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.முதல் வரியில் ஊக்கம் என்பது என்னவென்று கூறுகிறார்: உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மன உறுதியே ஊக்கம் ஆகும். இரண்டாவது வரி ஊக்கமுடைமையின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் கூறுகிறது. மூன்றாவது வரி ஊக்கமில்லாதவர்களின் நிலையை விளக்குகிறது. நான்காவது, ஐந்தாவது வரிகள் ஊக்கமுடையவர்கள், ஊக்கமில்லாதவர்கள் இவர்களிடையே உள்ள வேற்றுமையை எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து வரும் வரிகளில் ஊக்கமுடைமையை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரமும் முழுமையாகவும் ஓர் ஒழுங்குடனும் உள்ளது.

ஒவ்வொரு வரியும் எளிமையாகவும் உறுதியான கருத்துடனும் உள்ளது.அது தெளிவாகவும் அழுத்தமாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக நாம் 12- ஆவது வரியை எடுத்துக் கொள்வோம். ஒரு வரியில் நான்கு சொற்கள் உள்ளன. "விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே". இவ்வரியின் பொருள் செயல்களைச் செய்பவனே அவனது விதியைத் தீர்மானிக்கிறான் என்பது ஆகும். இச்சொற்கள் எளிமையாகவும் படித்தவுடன் பொருள் புரிந்து கொள்ளும்படியும் உள்ளன. வ.உ.சி. செயல்களைச் செய்பவனால் மட்டுமே அவனது விதியைத் தீர்மானிக்க முடியும் என்றும் வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

வ.உ.சி. இந்நூலில் புரட்சிகரமான கருத்துக்களையும் முன் வைக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்வி கற்பதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. ஆனால் வ.உ.சி. பெண்களும் ஆண்களைப் போலவே கல்வி கற்பதற்கு சம உரிமை உள்ளவர்கள் என்று வலியுறுத்துகிறார். இந்நூலில் இரண்டாவது வரி அவரது இக்கருத்தை விளக்குகிறது. "ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்". ஏழாவது அதிகாரத்தில் ஆசிரியர்களின் நற்குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த அதிகாரத்தில் இரண்டாவது வரியில் ஆண், பெண் இருவருமே ஆசிரியராகத் தகுதி உடையவர்கள் என்று கூறுகிறார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கல்வி கற்பதே சாத்தியக் குறைவான விஷயம். ஆனால் வ.உ.சி. பெண்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் ஆசிரியர்களாகவும் ஆகலாம் என்று சிந்திக்கிறார்.

முப்பத்து மூன்றாவது அதிகாரத்தில் அவர் மறுமணம் குறித்துப் பேசுகிறார். அது உண்மையில் மிகவும் புரட்சிகரமான கருத்துதான். ஒரு விதவைப் பெண் எவ்வளவு இளம் வயதினளாக இருந்த போதும் தனிமையில்தான் வாழ வேண்டும் என்று சமூகம் எண்ணியிருந்த காலகட்டத்தில் துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று எழுதியுள்ளார். முப்பத்து நான்காவது அதிகாரத்தில் முதல் வரி: "இருவரு ளறிவிற் பெரியவ ராள்க". இரண்டாவது வரி: "ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க". வ.உ.சி. அவர் கருத்துகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஆண்களைப் போலவே பெண்களும் அறிவுடையவர்களாக இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார். அதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் கலந்தாலோசித்து எல்லா விஷயங்களையும் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வது விரும்பத் தகுந்தது என்று கூறுகிறார்.

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு செல்வம் மட்டும் போதுமானதல்ல, மன நிம்மதியும் அவசியம் என்று வ.உ.சி. எண்ணுகிறார்.அதை அவர் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். செல்வத்தால் கட்டிலை வாங்க இயலும். ஆனால் மன நிம்மதியே நல்ல உறக்கத்தைத் தரும் என்று புரிய வைக்கிறார். நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். நம் உடல் நலத்தை நாம் பேண வேண்டும். ஏனெனில் உடல் நாம் நினைத்ததைச் செய்யும் ஓர் ஒப்பற்ற கருவி ஆகும். நாம் நம் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் நம் மனம் ஆக்க, காக்க, அழிக்க வல்லது ஆகும். நம் பெற்றோரையும் குழந்தைச் செல்வங்களையும் பேணிக் காக்க வேண்டும். இவ்வாறு நமக்கு அவர் வாழும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறார். நாம் அவற்றைப் பின்பற்றினால் மன நிம்மதியுடன் வாழ இயலும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யறம்_(நூல்)&oldid=3568468" இலிருந்து மீள்விக்கப்பட்டது