மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

மெண்டுத்துக் கோயில் (Mendut) என்பது ஒன்பதாம் நூற்றாண்டு புத்த கோவிலாகும், இது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் முங்க்கிட் துணை மாவட்டம், மாகெலாங் ரீஜென்சி, மெண்டுத்து கிராமத்தில் அமைந்துள்ளது. போரோபுதூரிலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. மெண்டட், போரோபுதூர் மற்றும் பாவோன் ஆகிய மூன்று புத்தர் கோயில்களும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மூன்று கோயில்களுக்கு இடையே பரஸ்பர மத உறவு உள்ளது. இருப்பினும் அக்கோயில்களில் காணப்பட்ட சரியான சடங்கு செயல்முறைபாடுகளைப் பற்றி அறியமுடியவில்லை.
வரலாறு[தொகு]

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட மெண்டுத்து, பாவோன் மற்றும் போரோபுதூர் உள்ளிட்ட மூன்று கோயில்களில் இது பழமையானது ஆகும். கரங்க்டெங்கா கல்வெட்டு, சைலேந்திர வம்சத்தின் மன்னர் இந்திரனின் ஆட்சிக் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. கி.பி 824 தேதியிட்ட கல்வெட்டில் சைலேந்திர மன்னர் இந்திரன் வேணுவனா என்ற புனித கட்டிடத்தை கட்டியதாகக் குறிப்பிடப்ட்டுள்ளது. அதாவது "மூங்கில் காடு" என்று பொருள். கரங்டெங்கா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலை மெண்டுத்து கோயிலுடன் டச்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜே.ஜி டி காஸ்பரிஸ் இணைத்து அதனைப் பற்றி விவாதித்துள்ளார். [1]
1836 ஆம் ஆண்டில் இது புதர்களால் மூடப்பட்ட இடிபாடுகளாக இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோயிலின் மறுசீரமைப்பு 1897 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1925 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்த கோயிலைப் பற்றி ஆய்வு செய்த சில தொல்பொருள் ஆய்வாளர்கள் ஜே.ஜி.டி. காஸ்பரிஸ், தியோடூர் வான் எர்ப் மற்றும் அரிசத்ய யோகஸ்வரா ஆகியோர் ஆவர்.
கட்டிடக்கலை[தொகு]

கோயிலின் தளத்தின் திட்டம் சதுர வடிவில் ஒவ்வொரு பக்கத்திலும் 13.7 மீட்டர் அளவில் அமைந்துள்ளது. அடிப்படைத் தளம் தரையிலிருந்து 3.7 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2] 26.4 மீட்டர் உயரமுள்ள கோயில் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது. வடமேற்கு பக்க சதுர உயரமான தளத்திலிருந்து திட்டமிடப்பட்ட படிக்கட்டுகள் ஒவ்வொரு பக்கத்திலும் மகர சிலையைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன, படிக்கட்டுகளின் பக்கங்களில் புத்தரின் போதனைகளின் விலங்கு கதையை விவரிக்கும் ஜாதகக்கதைகளின் அடிப்படை புடைப்புச் சிற்பங்களுடன் காணப்படுகின்றன. கோயிலின் உடலைச் சுற்றியுள்ள சதுர மொட்டை மாடி என்பது பிரதட்சணம் அல்லது சுற்றிவருதல் சடங்கு என்பதாகும். கோயிலின் திருச்சுற்றில் சுற்றி கடிகார திசையில் நடப்பதையே அவ்வாறு கூறுவர். வெளி சுவர்களில் பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் போதிசத்துவர்கள் போன்ற (புத்த தெய்வாம்சங்களைக் கொண்ட) அவலோகிதர், மைத்ரேயர், சுண்டா [3], இக்சிதிகர்பர், சமபந்தபத்திரர், மகரகருணிகா, வச்ரபானி, மஞ்சுஸ்ரீ, ஆகாயகர்பர், மற்றும் போதிசத்துவதேவி, பிரக்ஞாபாரமிதா[4] உள்ளிட்ட பௌத்தம் தொடர்பான பல சிற்பங்கள் காணப்படுகின்றன. முதலில் கோயிலில் இரண்டு அறைகள், முன்புறத்தில் ஒரு சிறிய அறை, மற்றும் மையத்தில் பெரிய பிரதான அறை ஆகியவை என்ற வகையில் இருந்திருக்க வேண்டும். முன் அறை சுவர்களின் கூரை மற்றும் சில பகுதிகள் காணவில்லை. கூரையின் மேல்பகுதி காணவில்லை. இதன் அமைப்பு சோஜிவான் கோயிலில் உள்ளதைப் போலவே அளவு மற்றும் பாணியுடன் ஒரு ஸ்தூப உச்சத்தில் கொண்டு அமைந்திருக்க வேண்டும். முன் அறையின் உள் சுவற்றின் அடித்தளத்தோற்றம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றன. அங்கு குழந்தைகளுடன் ஹாரிதி, மற்றொரு புறத்தில் ஆதவகா ஆகிய சிற்பங்கள் உள்ளன. மேலும் அங்கு கற்பகவிருட்சம், மேலும் சொர்க்கத்தில் பறந்து செல்கின்ற தேவதைகள் [5] ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

முதன்மை அறையில் மூன்று செதுக்கப்பட்ட பெரிய கல் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று 3 மீட்டர் உயரமான தியான புத்தர் சிலை ஆகும். வைரோசன புத்தர் எனப்படுகின்ற அந்த புத்தர் உடல் கர்மாவிலிருந்து பக்தர்களை விடுவிப்பவர் ஆவார். அச்சிலையின் இடது புறத்தில் போதிசத்துவர் அவலோகிதர் சிலை உள்ளது. அவர் பேச்சு கர்மாவிலிருந்து பக்தர்களை விடுவிப்பவர் ஆவார். இடது புறத்தில் வச்ரபானி சிலை உள்ளது. அவர் சிந்தனை கர்மாவிலிருந்து பக்தர்களை விடுவிப்பவர் ஆவார். [6]
சடங்குகள்[தொகு]

மே அல்லது ஜூன் மாதங்களில் நிகழ்கின்ற பௌர்ணமியின்போது , இந்தோனேசியாவில் உள்ள பௌத்தர்கள் வருடாந்திர வைசாகம் சடங்கைக் கடைபிடிக்கின்றனர். அப்போது அவர்கள் பாவோன் வழியாக மெண்டுத்து முதல் போரோபுதூர் வரை நடந்து செல்கின்றனர்.[7] இந்த சடங்கு ஒரு பெரிய புத்த பிரார்த்தனையாக அமைந்துள்ளது. அப்போது அவர்கள் கோயிலைச் சுற்றி (பிரபிரதட்சணம்) வருகின்றனர்.
பாரம்பரிய கெஜாவன் (ஜாவானிய மாயவாதம்) எனப்படுகின்ற சாவகத் தொன்னெறியினையோ அல்லது பௌத்தத்தையோ பின்பற்றுபவர்களுக்கு, மெண்டுத்துக் கோயிலில் பிரார்த்தனை செய்தால் நோயிலிருந்து விடுபடலாம் என்றும் அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் என்றும் நம்புகின்றார்கள். [2] எடுத்துக்காட்டாக, குழந்தை இல்லாத தம்பதிகள் ஒரு குழந்தைக்காக ஹரிதியின் புடைப்புச்சிற்பத்தின் முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள், ஏனெனில் பாரம்பரிய ஜாவானிய நம்பிக்கைகளில் கருவுறுதல், தாய்மையின் ஆதரவாளர் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பவர் என்ற நிலையில் ஹரிதியை அவர்கள் ஒரு அடையாளமாகக் கொண்டுள்ளனர்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Hindu-Buddhist architecture in Southeast Asia. 1996. பக். 125. https://books.google.com/books?id=wiUTOanLClcC&pg=PA125&lpg=PA125&dq=Venuvana+Mendut&source=bl&ots=e5zvmUZvT6&sig=_TY4-3uwD-djUcXsEHIvFc9qj0c&hl=id&ei=UX3bToH1IsLsrAeJhKjZDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBwQ6AEwAA#v=onepage&q=Venuvana%20Mendut&f=false. பார்த்த நாள்: 2011-12-04.
- ↑ 2.0 2.1 "Candi Mendut" (in Indonesian). Magelang Regency Government. http://www.magelangkab.go.id/index.php?option=com_content&view=article&id=165:candimendut&catid=80:beritapariwisata.
- ↑ "Cunda Kammāraputta", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-01, retrieved 2019-12-06
- ↑ "Prajnaparamita", Wikipedia (in ஆங்கிலம்), 2019-12-03, retrieved 2019-12-06
- ↑ "Devata", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-12, retrieved 2019-12-06
- ↑ The information board at the Mendut Temple vicinity
- ↑ "The Meaning of Procession". Walubi (Buddhist Council of Indonesia) இம் மூலத்தில் இருந்து 2009-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090211113440/http://www.walubi.or.id/waisak/waisak_emakna_prosesi.shtml.
வெளி இணைப்புகள்[தொகு]
- விக்கிமபியாவிலிருந்து மெண்டுத்துக் கோவிலின் வரைபடம்