உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்று பெற்றோர் குழவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்று பெற்றோர் குழவி (three parent baby) மரபணுத் திருத்த முறையில் மூன்று வேறுபட்ட பெற்றோரின் மரபுப் பொருளைப் பயன்படுத்திக் குழந்தையை வெளிச் சோதனை முறை கருக்கட்டல் வழி செயற்கையாக உருவாக்கும் குழந்தையைக் குறிக்கும். இம்முறைவழி உருவாகும் குழந்தையின் இழைமணிகளின் டி.என்.ஏ மூன்றாம் நபரிடம் இருந்து கலக்கருமரபணு சாராத உயிர்க்கல ஊன்மத்தில் (Cytoplasm) இருந்து பெறப்படுகிறது.[1][2][3] ஊன்குருத்துக் கொடை ஒரு சோதனைக்குழல் கருவுறுதல் முறையின் சிறப்பு வடிவங்களில் ஒன்றாகும். இதில் பிறக்கப்போகும் குழந்தையின் [[ஊன்குருத்து மரபணு (டி.என்.ஏ) மூன்றாம் தரப்பில் இருந்து (தாயல்லாத மற்றொரு பெண்ணிடம் இருந்து பெறப்படுகிறது. இக்கொடை இயலும் பல நுட்பங்களில் இரண்டுமுறைகள் கல ஊன்ம (cytoplasmic) மாற்றமும் கதிர் (spindle) மாற்றமும் ஆகும். இவ்வகையில் பிறக்கும் குழந்தை மூன்று மரபுப் பெற்றோர்களைக் கொண்டமைவதால் மூன்று பெற்றோர்க் குழவி எனப்படுகிறது.[1][2][4] இது நீரிழிவு நோய், செவிடு, சில இதய, கணைய நிலைமைகள் போன்ற ஊன்குருத்து நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.[5] இது கனிசமான உயிர் அறிவியல் சிக்கல்களைக் கொண்டுள்ளதால் இதுவரை பிரித்தனிய பேரரசை தவிர வேறு எந்த நாடும் ஒப்புதல் அளிக்கவில்லை. பெரும் பிரித்தானியா 2015இல் இம்முறையைச் சட்டப்படி ஏற்று ஒப்புதல் அளித்தது .[6][7]

இந்த முறையைப் புரிந்துகொள்ள முதலில் நாம் தாயின் அண்டவணுவின் சிறுகூறான ஊன்குருத்து அல்லது குறுணைத் திரியைப் (Mitochondrion, Mito-திரி, Chondrion-குறுணை) பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இது நுண்ணுயிரி போன்ற உயிர்க் கல (Cell) மாகும். இந்த ஊன்குருத்துகள் பல நூறு கோடி ஆண்டுகளாகப் பூஞ்சை, நிலைதிணை, விலங்கு உயிரின உயிர்க்கலங்களில் ஒட்டுண்ணிகளாக உடனுறைந்து வருகின்றன. இவைதாம் உடலியக்கத்துக்கு வேண்டிய ஆற்றலை உணவில் இருந்து ஆக்குகின்றன. இவை குருதியில் உள்ள உயிரகத்தால் (Oxygen) உணவு மூலக்கூறுகளை எரித்து ஆற்றலைப் பன்னிரண்டு மடங்காகப் பெருக்குவனவாகும். மேலும், இவை ஓம்புயிரிகளின் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் சமிக்கைகளை (Signals) உருவாக்குகின்றன. இதனால் இவை உயிர்க்கலத்தின் ஆற்றல் நிலையங்களாகக் கருதப்படுகின்றன.

உயிரியல் அறவாதிகளும் ஊடக வல்லுநர்களும் இந்தப் புதிய கருவுருவாக்கல் முறையின் பாதுகாப்பு சார்ந்த ஐயத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் இது ஆய்வகச் சாதனையே தவிர நடைமுறைக்கு வரும்போது, வடிவமைப்புக் குழந்தைகளுக்கு வழிவகுப்பதோடு, முழுமை மரபணுவியல் (Eugenics) முயற்சிகளுக்கு ஆர்வமூட்டி புதிய அரசியல் சிக்கல்களைத் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஊன்குருத்துப் பதிலீட்டுமுறையில் பெறப்படும் குழந்தை தமது முதன்மைப் பெற்றோரின் இயற்பண்புகளில் இருந்து சற்றும் மாறுபடுவதில்லை என்பது அப்பெற்றோருக்கு மிகவும் ஆர்வமூட்டும் தகவலாகும். குழந்தைக்குக் கையளிக்கப்படும் பால்மரபணுவின் ஒருபாதி தந்தையிடமிருந்தும் மறுபாதி தாயிடமிருந்தும் பெறப்படுகிறது. இயல்பான கருமரபணுவைத் தவிர ஊன்குருத்து மரபணுவும் ஒவ்வொருவரிடமும் உள்ளது. குழந்தை இனப்பெருக்கத்தின்போது தாயிடமிருந்து கடத்தப்படும் ஊன்குருத்துநோயைத் தவிர்க்க, வேறொரு பெண்ணிடமிருந்து பெறும் ஊன்குருத்து பதிலீடு செய்யப்படுகிறது. இது ஒவ்வோர் உயிர்க்கலத்திலும் உள்ள ஆற்றல் நிலையமாகும். உண்ட உணவை இதுதான் உடலால் பயன்படுத்தமுடிந்த ஆற்றலாக மாற்றுகிறது. இதற்கு இதில் 37 மரபணுக்கள் உள்ளன. ஊன்குருத்து மரபணு தொகை கரு மரபனு தொகையை போல மரபுவழியாக குழந்தையின் தோற்றத்தையோ உடற்பான்மைகளையோ மாற்றாது. மேலும் இதைப் பெண்ணிடமிருந்து மட்டுமே பெறமுடியுமே தவிர வேறுவழியில் இயலாது.

தனியொருவரின் ஊன்குருத்தில் உடனடிமாற்றங்கள் மிகும்போது பலவகைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நெஞ்சுநோய்கள், தசைப்பெருக்கம், கைகால் வலிப்புகள் ஏற்படலாம். சிலவேளைகளில் இந்த மாற்றங்கள் இறப்பிற்கும்கூட வழிவகுக்கலாம். எனவே தாயின் நோய்வாய்ப்பட்ட ஊன்குருத்து மற்றொரு பெண்ணின் நலமான ஊன்குருத்தால் பதிலீடு செய்யப்படுகிறது. இதற்கு அறிவியலார் பெண்கொடையாளியிடம் இருந்து முட்டையைப் பெற்று அதில் உள்ள கருமரபணுத் தொகுதியை நீக்கிவிட்டு அவரது ஊன்குருத்து மரபணுத் தொகுதியை மட்டும் பதிலீட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனுடன் முதன்மைப் பெற்றோரிடமிருந்துப் பெறப்படும் கருமரபணுத் தொகுதிகள் இணைக்கப்படுகின்றன. எனவே புதிதாக உருவாகும் கருக் குழவி மூன்று பெற்றோரின் விளைபொருளாகும். மேலும் அது தன் முதன்மைத் தாயின் நோயேதும் இல்லாமல் பிறக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_பெற்றோர்_குழவி&oldid=3702117" இலிருந்து மீள்விக்கப்பட்டது