மூன்றாம் நிலை மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்றாம் நிலை மூலம் (Tertiary source) என்பது முதல் நிலை மூலங்களையும் இரண்டாம் நிலை மூலங்களையும் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் மூலமாகும். இதற்கு உதாரணங்களாக காலக்கோடுகள், வழிகாட்டி கையேடுகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

மூன்று நிலை மூலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்[தொகு]

முதல் நிலை மூலங்கள்[தொகு]

நிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், எழுத்துப்பெயர்ப்புகள் (Transliteration) இவை எல்லாம் முதல் நிலை மூலங்கள் ஆகும். இவற்றில் அந்த துறை வல்லுநரின் பார்வையோ விமர்சனமோ இல்லாமல் மூலங்கள் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கும்.

  1. மாங்குளம் கல்வெட்டுகள்
  2. புளியம்கொம்பை கல்வெட்டுகள்
  3. பாண்டியர் செப்பேடுகள்

இரண்டாம் நிலை மூலங்கள்[தொகு]

முதல் நிலை மூலங்களான நிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை அத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்து அதை நூலாகவோ அல்லது வேறு ஊடகத்திலோ தன் கருத்துக்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் அவை இரண்டாம் நிலை மூலங்கள் எனக் கொள்ளலாம். பின்வரும் கருத்துகள் இரண்டாம் நிலை மூலங்களான வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

"மாங்குளம் கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுக்களுக்கு காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும்."

- ஐராவதம் மகாதேவன் (தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிட்ட தகவல்)

"ஆந்திர மாநிலத்திலுள்ள பட்டிப்போருலு என்னும் இடத்திலுள்ள கல்வெட்டை ஆராய்ந்த இந்தியத் தொல்பொருள் துறையினர், அக்கல்வெட்டை அசோகர் காலத்திற்கு முந்திய எழுத்துக்களாக இருக்கலாம் என கணித்தனர். இவ்வெழுத்து அசோகன் காலத்துக்கு முற்பட்டதாக இருக்குமாயின், படிக்கும் மொழிநெறிப்பாங்கில், மேலும் முந்திய படிநிலை ஒன்றைக் கொண்டுள்ள தமிழ் நாட்டு மீனாட்சிபுரம் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளையும் அவ்வாறே அசோகன் காலத்திற்கு முந்தியவை என்று நாம் கருதலாம். இந்தக் கருத்தை அடியில் காட்டப்படும் விளக்கம் மேலும் உறுதி செய்யும்.

'க' என்னும் எழுத்து அசோகன் கல்வெட்டிலும் தமிழ் நாட்டிலுள்ள புகழூர்க் கல்வெட்டிலும் சிலுவைக்குறி அல்லது கூட்டல் குறி வடிவில் செதுக்கப்பட்டிருக்கும். மீனாட்சிபுரம் கல்வெட்டு இந்தப் புகழூர்க் க்ல்வெட்டைவிடக் காலத்தால் முந்தியது என்னும் உண்மை எழுத்துக்களின் வடிவம், உருப்பெருக்கம் முதலானவற்றை நோக்கி எல்லா அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லது சிலுவைக்குறி காணப்படுமேயானால், அதனைக் 'க' என்று படிக்காமல் 'க்' என்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. 'க' என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி வலப்புறமாக சிறு கோடு போட்ட அமைப்புடைய எழுத்து வேண்டும். இந்த எழுத்து வடிவம் அசோகன் கல்வெட்டிலோ, புகழூர்க் கல்வெட்டிலோ காணப்படுமேயானால் 'கா' என்று நெடிலாகப் படிக்க வேண்டும். இந்த வேறுபாடு நோக்கியும் இதை அசோகனுக்கு முந்திய கல்வெட்டு எனக் கொள்ள முடியும்"

- மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய ஆய்வு நூலில் கூறியவை.

மூன்றாம் நிலை மூலங்கள்[தொகு]

மூன்றாம் நிலை மூலம் என்பது முதனிலை மூலங்களைக் குறித்த/ஆராய்ந்த இரண்டாம் நிலை மூலங்களின் தகவல்களைத் திரட்டித் தரும் மூலங்களாகும். உதாரணத்திற்கு ஒரு முதனிலை மூலமான ஒரு கல்வெட்டைப் பற்றி இரண்டாம் நிலைமூலங்களில் பல ஆய்வாளர்கள் பல பார்வையில் எழுதியிருக்கலாம். முதல் ஆய்வாளர் அதை ஒரு மொழி எழுத்து எனக் கூற மற்ற ஆய்வாளர்கள் அதை இன்னொரு மொழி எனக் கூறி இருப்பின் அந்த இரண்டு தகவல்களையும் நடுநிலையாகத் தருவதே மூன்றாம் நிலை மூலமாகும். கீழுள்ள எடுத்துக்காட்டு தமிழ் மொழிக் கல்வெட்டுகள் குறித்து பல்வேறு அறிஞர்களின் கறுத்துக்களை திரட்டித் தரும் மூன்றாம் நிலை தரவாகும். பெரும்பாலும் கலைக்களஞ்சியங்களில் இதைப் போன்ற நடையிலேயே தகவல்கள் திரட்டப்பட்டு தரப்படுகின்றன.

"ஐராவதம் மகாதேவன் தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் மயிலை சீனி. வேங்கடசாமி, நடன காசிநாதன், கே. வி. ரமேஷ், எம். டி. சம்பத், சு. இராஜவேலு, சா. குருமூர்த்தி, இரா. மதிவாணன் ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்."

- கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள்.

இக்கட்டுரைகளையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_நிலை_மூலம்&oldid=1746664" இருந்து மீள்விக்கப்பட்டது