உள்ளடக்கத்துக்குச் செல்

மு. மோகன்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். மோகன்ராஜ்
பிறப்புகொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
அறியப்படுவதுஇசையமைப்பாளர், இசைக்கலைஞர்
பெற்றோர்ஆர். முத்துசாமி, நீலியா பெரேரா
வாழ்க்கைத்
துணை
சசிகலா
பிள்ளைகள்வித்யாஷனி, மதுர்ஷன்

எம். மோகன்ராஜ் இலங்கையின் பிரபலமான ஒரு இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி மன்றும் மேடை இசை நிகழ்ச்சிகளில் இவர் இசையமைத்து வருகிறார். அப்சராஸ் இசைக்குழுவை இவர் நடத்தி வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர் ஆர். முத்துசாமிக்கும், கண்டியைச் சேர்ந்த நீலியா பெரேரா என்பவருக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர் மோகன்ராஜ். இவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். கொழும்பு புதுக்கடையில் புனித செபஸ்தியன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் ஆரம்பப் பாடசாலையிலும், புனித பெனடிக்ட் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.[1]

இசைத் துறையில்

[தொகு]

பாடசாலைக் காலத்தில் கலை விழாக்களில் பாடி விருதுகளைப் பெற்றார். இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பின்னர் செல்லத்துரை, ரங்கன் ஆகியோருடன் இணைந்து திருமண வைபவங்களில் பாடியும், கீபோர்ட் வாசித்தும் வந்தார். இதன் மூலம் மோகன் - ரங்கனின் சித்ராலயா இசைக் குழு இலங்கையில் பிரபலமாகியது.[1]

இலங்கை வானொலியில் இசைக் கலைஞர்களாக இவரும் ரங்கனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி. எச். அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கி பிரபலமான பாட்டுக்கு பாட்டு வானொலி நிகழ்ச்சிகளுக்கு இசை வழங்கி வந்தனர். பின்னர் தமது இசைக்குழுவிற்கு ‘அப்சராஸ்’ எனப் பெயரிட்டு 1975 ஆம் ஆண்டில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் இன்னிசை நிகழ்ச்சியொன்றை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பிரபலமான பாடகர்களுக்கு இவரது இசைக்குழு இசை வழங்கியுள்ளது. 1989ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான இசைப் பயணமொன்றை மேற்கொண்டார். தொடர்ந்து மேற்குலக நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பிரபல சிங்களப் பாடகர்களின் மேடைகளிலும் இசை வழங்கி வருகின்றார். விசாரத நந்தா மாலினி பாடிய பன்னிரெண்டு பாடல்களுக்கு இவர் இசையமைத்திருந்தார்.[1]

திரைப்படங்களில்

[தொகு]

கதிர்காமத்தம்பி என்பவர் தயாரித்த ‘புழுகர்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு இசை வழங்கினார்கள். ஈழத்து இரத்தினம் பாடகளை எழுதியிருந்தார். ஆனாலும் இப்படம் இடைவெளியில் கைவிடப்பட்டது. பின்னர் ‘வீரஉதார’ என்ற சிங்களப் படத்திற்கு முதன் முதலாக இசையமைத்தார். தொடர்ந்து காத்திருப்பேன் உனக்காக, பாதை மாறிய பருவங்கள்[2] ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1]

குடும்பம்

[தொகு]

யேண்சகிகலா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு வித்யாஷனி, மதுர்ஷன் என இரு பிள்ளைகள். மதுர்ஷன் தனது சொந்த இசைக் குழுவை வைத்திருக்கின்றார்.[1]

விருதுகள்

[தொகு]
  • 1978 - அமைச்சர் செ. இராசதுரை மெல்லிசை மன்னன், லயஞான வாருதி பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார்.
  • 1991 - பிரான்ஸ் தமிழ் கலாசார மையம் ‘இசை ஞான இளைவரசன்’ எனும் பட்டம் வழங்கியது.
  • 1991 - இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா ‘இசை இளவரசன்’ எனும் பட்டத்தை வழங்கினார்.
  • 1993 - அகில இலங்கை சபரிமலை சாஸ்தா பீடத்தின் சார்பில் நடிகர் மேஜர் சுந்தரராஜன் ‘இசை மாமணி’ பட்டம் வழங்கினார்.
  • 1993 - இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் ‘கலாஜோதி’ பட்டம் வழங்கினார்.
  • 1999 - தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சர் பி. சந்திரசேகரன் ‘இசை ஞானி’ பட்டம் வழங்கினார்.
  • 2005 - சப்பான் நாட்டின் ‘புங்கா’ விருது
  • 2011 - முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான எம். எச். மொஹமட் “ஆசிய இசை தளபதி” என்ற பட்டம் வழங்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "அப்சராஸ் இசைக் குழு மோகன்ராஜின் நினைவலைகள்". தினகரன். 3 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "இலங்கை சினிமா வரலாற்றில் சாதனை படைத்த இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி". தினகரன். 27 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மோகன்ராஜ்&oldid=3225004" இலிருந்து மீள்விக்கப்பட்டது