முறை மாறிய திருக்குறள் உரைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முறை மாறிய திருக்குறள் உரைகள் என்னும் திருக்குறள் ஆய்வுநூலை எழுதியவர் திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு. இந்நூல் மணிவாசகர் பதிப்பகத்தால் 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது[1].

நூலின் நோக்கம்[தொகு]

இந்த நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தைப் பதிப்புரை கீழ்வருமாறு விவரிக்கிறது:

திருக்குறள் தோன்றி ஈராயிரம் ஆண்டுகள் ஆகின்றது என்பது பெரும்பாலான அறிஞர்கள் கருத்து. இந்நூல் தோன்றி ஓராயிரம் ஆண்டுகள் கழித்துத்தான், உரைநூல்கள் தோன்றியுள்ளன. முதலில் பத்து உரையாசிரியர்கள்; தற்காலத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு உரைகள் எழுதியுள்ளனர். அவர்களுடைய நோக்குகளும் போக்குகளும் வெவ்வேறானவை.

ஒருசிலர் சமயச் சார்பில் உரை கண்டனர்; ஒரு சிலர் இயக்கச் சார்பில் உரை கண்டனர்; ஒரு சிலர் பொதுமை நோக்கில் உரை கண்டனர். ஒவ்வொரு வகையிலும் திருக்குறளுக்குப் புதிய புதிய விளக்கங்கள் கிடைத்தபடி உள்ளன. புதிய புதிய விளக்கங்களைத் தர வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், பல துறை நோக்குகளிலும் திருக்குறளைக் காண வேண்டும் - காட்ட வேண்டும் என்றும் பலர் முயன்றுள்ளனர்.

அப்படிக் காண - காட்ட முயன்றவர்களுள் ஒரு சிலர், திருக்குறளின் வடிவத்தை மாற்றியமைத்து உரை காண முயன்றுள்ளனர். ஒரு சிலர் பால்களை மாற்றினர்; ஒரு சிலர் இயல்களை மாற்றினர்; ஒரு சிலர் அதிகாரங்களை மாற்றினர்; ஒரு சிலர் குறட்பாக்களின் வைப்பு முறைகளை மாற்றினர்; ஒரு சிலர் குறட்பாக்களில் சிலவற்றில் வரும் எழுத்துகளையும் சொற்களையும்கூட மாற்றியுள்ளனர். ஒரு சிலர் மேற்குறித்த மாற்றங்களுள் ஒன்றிற்கு மேற்பட்ட மாற்றங்களைச் செய்துள்ளனர். இதன் காரணமாக "முறை மாறிய உரைகள்" தோன்றியுள்ளன.

பழைய உரையாசிரியர்களுள் பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் இந்த முறை மாறிய உரைகளுக்கு ஒரு வகையில் தோற்றுவாய் செய்துள்ளனர். அண்மைக் காலங்களில் பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், சுகாத்தியர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., சிந்தனைச் செம்மல் கு. ச. ஆனந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, இராணி ஆசிரியர் அ.மா. சாமி ஆகியோர் ஆவர். மொத்தம் 18 அறிஞர்கள் இத்தகைய வகையில் உரைகள் எழுதியுள்ளனர்.

இவர்கள் என்னென்ன கோணங்களில் உரை மாற்றங்கள் செய்துள்ளார்கள்? அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகள் யாவை? அத்தகைய மாற்றப் பணிகளைத் தொடரலாமா? இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட போக்குகள் தொடராமல் இருக்க என்ன வழிகள்? போன்ற வினாக்களுக்குத் திருக்குறள் மாமுனிவர் அவர்கள் விடை காண முயன்ற முயற்சிதான் இந்த நூல்.

திருக்குறள் ஆய்வுலகில் தலைமை இடத்தில் இருந்து வரும் திருக்குறள் மாமுனிவர் அவர்கள், தம்முடைய ஆய்வுத் திறத்தால் இந்த நூலை முன்வைத்துப் பல தீர்வுகளைத் தந்துள்ளார்கள். இந்தத் தீர்வுகள் திருக்குறள் செம்பதிப்பு உருவாக்கத்திற்கான ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களாக அமைந்துள்ளதை இந்த ஆய்வு நூலைப் படிப்பார் நன்கு அறிய முடியும்... (பக்கங்கள்: 5-6).

நூலின் தோற்றம்[தொகு]

இந்த நூலின் ஆசிரியர் "முறை மாறிய திருக்குறள்" என்னும் நூல் எழுந்த பின்னணியை விளக்கியுள்ளார்:

33 ஆண்டுகளுக்கு மேலாகத் திருக்குறள் ஆய்வில் ஈடுபட்ட யான், பல திருக்குறள் உரைகளைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்; பல திருக்குறள் ஆய்வுகளைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவற்றையெல்லாம் திரட்டி இல்லத்தில் ஒரு நூலகத்தையும் உருவாக்கிக் கொண்டேன்; ஆயிரத்திற்கு மேற்பட்ட திருக்குறள் நூல்கள் அந்த நூலகத்தில் இடம் பெற்றன.

திருக்குறள் என்னும் வாழ்க்கைப் பெருநூலுக்குத் தமிழில் 230க்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் 275க்கு மேற்பட்ட உரைகள் எழுதியுள்ளார்கள். அவற்றில் 250க்கு மேற்பட்ட உரைகள் யான் உருவாக்கிய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை நாள்தோறும் புரட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

அந்த உரைகளை வகைதொகை செய்து ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது;...செப்டம்பர் 31, 2005இல் "முறை மாறிய திருக்குறள் உரைகள்" என்னும் இந்த நூல் உருவாக்கம் பெற்றது... (பக்கங்கள்: 5-6).

திருக்குறள் பற்றிய வினாக்கள்[தொகு]

இந்த நூலின் முதல் அதிகாரத்தில் ஆசிரியர் திருக்குறள் பற்றி இன்றும் தொடர்ந்து நிலவுகின்ற பல வினாக்களை வரிசைப்படுத்துகின்றார்.

திருக்குறள் பற்றி இன்று நிலவும் செய்திகள் இவை:

1. அன்றைய பெயர் முப்பால்; இன்றைய பெயர் திருக்குறள்.
2. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பால்களாகத் திருக்குறள் உள்ளது.
3. திருக்குறளின் முதல் பகுதியாகிய அறத்துப்பாலில் நான்கு இயல்களும், இரண்டாம் பகுதியாகிய பொருட்பாலில் ஏழு இயல்களும், மூன்றாம் பகுதியாகிய காமத்துப்பாலில் இரண்டு இயல்களும் உள்ளன.
4. திருக்குறளின் ஒவ்வோர் இயலுக்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளன.
5. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
6. திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.
7. திருக்குறளின் அதிகார வைப்பு முறையில் ஒரு தொடர்பு நிலை உள்ளது.
8. திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பத்துக் குறட்பாக்கள் உள்ளன.
9. பத்துக் குறட்பாக்களுக்குள் ஒரு வைப்புமுறைக் கட்டுப்பாடு உள்ளது.
10. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.

திருக்குறள் பற்றிப் பொதுவாக நிலவும் மேற்கூறிய செய்திகளின் பின்னணியில் கு. மோகனராசு கீழ்வரும் கேள்விகளை எழுப்புகிறார்:

இந்தப் பால் பகுப்பு, இயல் பகுப்பு, அதிகாரப் பகுப்பு, அதிகாரப் பெயர்கள், அதிகார வைப்பு முறைகள், ஓர் அதிகாரத்துள் வரும் குறட்பாக்கள், அவற்றின் வைப்பு முறைகள் ஆகிய அனைத்தும் திருவள்ளுவர் வழங்கியனவா?

இயல் பகுப்பு, அதிகார வைப்பு முறை, ஓர் அதிகாரத்துள் வரும் குறட்பாக்களின் அமைப்பு முறை ஆகிய இவை, மணக்குடவர் உள்ளிட்ட பழைய உரையாசிரியப் பெருமக்களிடையே மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவற்றுள் யாருடைய பகுப்பு சரி?

திருக்குறளில் வரும் பால், இயல், அதிகாரம், குறட்பாக்கள் ஆகியவற்றில் பரிமேலழகர் அவர்கள் கொண்டுள்ள முறை வைப்பையே இப்போது நடைமுறையில் கையாண்டு வருகின்றோம். இது சரிதானா?

இவை போன்ற பல வினாக்கள் ஆய்வுலகில் எழுந்தவாறு உள்ளன. வினாக்கள் பல இன்னும் வினாக்களாகவே இருந்து வருகின்றன. போதிய முயற்சிகளும் இல்லை; முயற்சித்தாலும் முடிவு செய்யப் போதிய சான்றுகளும் இல்லை. என்றாலும், ஆய்வுலகில் ஒரு சிலர் தளரவில்லை; அந்த ஒரு சிலரின் ஆய்வுப் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன; ஒரு சில விடைகள் கிடைத்தும் வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வேறான பார்வை ஒன்று வளர்ந்து கொண்டு வருகின்றது. திருவள்ளுவர் எந்தப் பகுப்பையும் செய்யவில்லை; எல்லாம், உரையாசிரியர்களின் கைவண்ணங்களே. ஆகவே, திருக்குறளை எப்படி வேண்டுமானாலும் கூறுபடுத்திப் பார்க்கலாம் - வகைதொகை செய்து பார்க்கலாம்; எப்படி வேண்டுமானாலும் திருத்தியும் பார்க்கலாம்; அப்படிப் பார்ப்பது தவறும் இல்லை: இது அந்தப் பார்வையின் அடிப்படை.

இந்தப் பார்வையாளர்களுள் ஒரு சிலர், அவரவர் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்பத் திருக்குறளை மாற்றவும் திருத்தவும் முற்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வெவ்வாறெல்லாம் மாற்றவும் திருத்தவும் முற்பட்டுள்ளனர்? அந்த முயற்சிகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை? அந்த முயற்சிகள் சரியா? தவறா? அவை மேலும் தொடரலாமா? இந்த முயற்சிகளையெல்லாம் செம்மைப்படுத்தித் திருக்குறளுக்கு ஒரு செம்பதிப்பு காண வாய்ப்புண்டா? என்பன போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.

அந்த வினாக்களுக்கு முடிந்தவரை விடை தர முயல்வதுதான் இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம் (பக்கங்கள்: 9-10).

நூலின் உள்ளடக்கம்[தொகு]

"முறை மாறிய திருக்குறள் உரைகள்" என்னும் இந்த ஆய்வுநூலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை எவ்வாறு வெவ்வேறு உரையாசிரியர்கள் திருக்குறளைப் பால், இயல், அதிகாரம், குறள் வைப்பு முறை, சொல் மாற்றம் போன்ற வகைகளில் மாற்றியுள்ளார்கள் என்பதை நூலாசிரியர் விளக்குகிறார். இவ்வாறு மாற்றம் செய்து உரை எழுதியோரில் குறிப்பிடத்தக்கோர் 18 பேர்.

10-13 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மணக்குடவர், பரிமேலழகர் போன்ற பழைய உரையாசிரியர்கள் திருக்குறள் பகுப்பு முறையில் செய்த மாற்றங்களையும் அதன் பின், 19-21 நூற்றாண்டுக் காலத்தில் சுகாத்தியர் தொடங்கி அ.மா. சாமி வரை உரையாசிரியர்கள் செய்த மாற்றங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. இறுதியில், ஆசிரியர் தம் ஆய்வு முடிவுகளைத் தொகுத்து அளிப்பதோடு சில பரிந்துரைகளையும் முன்வைக்கின்றார்.

இவ்வாறு, இந்நூலின் "பொருளடக்கம்" கீழ்வரும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது:

1. ஆய்வுலக வினாக்கள்
2. பழைய உரையாசிரியர்கள்
3. சுகாத்தியர்
4. வ.உ. சிதம்பரனார்
5. திரு.வி. கலியாணசுந்தரனார்
6. மு. வரதராசனார்
7. புலவர் குழந்தை
8. ரா.ந. கல்யாணசுந்தரம்
9. டாக்டர் தே. ஆண்டியப்பன்
10. சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தன்
11. டாக்டர் ஜனகாசுந்தரம்
12. கவிரத்தின நலங்கிள்ளி
13. முனைவர் சாலமன் பாப்பையா
14. கலைவித்தகர் ஆரூர் தாஸ்
15. இராஜகாந்தீபன்
16. புலவர் குடந்தையான்
17. முனைவர் அ.மா. சாமி
18. நிறைவுரை

திருக்குறள் அமைப்பை மாற்றி உரை எழுதியோர் பட்டியல்[தொகு]

நூலாசிரியர் கு. மோகனராசு தம் நூலில், திருக்குறள் அமைப்பை வெவ்வேறு வகைகளிலும் ஆழங்களிலும் விரிவுகளிலும் மாற்றியமைத்து உரை எழுதியோரின் பெயர்களையும் அவ்வுரைகள் எழுந்த காலங்களையும் குறித்துள்ளார்.


மேலும் காண்க[தொகு]

திருக்குறள் பகுப்புக்கள்
திருக்குறள் வைப்புமுறை
திருக்குறள் பழைய உரைகள்

குறிப்பு[தொகு]

  1. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005, பக்கங்கள்: 112.