முரோ ஜம்பி கோயில் வளாகம், சுமத்ரா

ஆள்கூறுகள்: 1°28′38.54″S 103°40′5.34″E / 1.4773722°S 103.6681500°E / -1.4773722; 103.6681500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரோ ஜம்பியில் உள்ள கம்புங் கோயில்என்ற புத்தக் கோவில்.

முரோ ஜம்பி கோயில் வளாகம் (Muaro Jambi Temple Compounds) ( இந்தோனேசிய மொழி: Candi Muaro Jambi) இந்தோனேசியாவின் சுமத்ராவின் ஜம்பி மாகாணத்தின் முரோ ஜாம்பி ரீஜென்சியில் உள்ள ஒரு புத்த கோயில் வளாகமாகும். இது ஜம்பி[1] நகரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகம் மேலாயு இராச்சியத்தால் கட்டப்பட்டது. அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற தொல்பொருள் எச்சங்கள் பொ.ச. 7 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.

இந்தத் தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட எட்டு கோயில்கள் உள்ளன. அவை சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. படாங் ஹரி ஆற்றின் [2] குறுக்கே 7.5 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 80 கோயில் இடிபாடுகள் இன்னும் மீட்டெக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. [3] [4] இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட பண்டைய கோயில் வளாகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ஸ்ரீவிஜய இராச்சியத் தோற்றத்தின் ஆரம்ப இடமாக முரோ ஜாம்பி கோயில் வளாகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு முக்கியமாக காரணம், முரோ ஜம்பியில்தான் அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் காணப்படுகின்றன. மாறாக தெற்கு சுமத்ராவில் உள்ள மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொல்லியல் தளங்களே உள்ளன. [5]

வரலாறு[தொகு]

இந்தியாவின் சோழ இராச்சியம் ஸ்ரீவிஜயாவின் சுமத்திரா கடல் சாம்ராஜ்யத்தின் தலைநகரைத் தாக்கி அழித்தபோது மெலாயு இராச்சியத்தின் எழுச்சி ஆரம்பமானது எனலாம். அந்த எழுச்சி ஆரம்பமான காலம் 1025 ஆம் ஆண்டு ஆகும். இது பல சிறிய சுமத்திரன் அரசியல் கூறுகளை தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த அனுமதித்தது. பன்னிரண்டாம் மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், படாங் ஹரி நதி மற்றும் அதன் கழிமுகங்களுடன் மெலாயு சுமத்ராவில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார சக்தியாக மாற ஆரம்பித்தது. முரோ ஜம்பியில் உள்ள கணிசமான தொல்பொருள் எச்சங்களைக் கொண்டு இது மெலாயு தலைநகரின் தளமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1278 ஆம் ஆண்டில் ஜாவாவின் சிங்காசரி இராச்சியம் நகரத்தைத் தாக்கியபோது, நகரத்தின் பெருமை முடிவிற்கு வந்தது. அரச குடும்ப உறுப்பினர்கள் பிடிக்கப்பட்டனர்.இந்த தளம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் டச்சு ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது ஒரு தேசிய நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வடிவமைப்பு[தொகு]

முரோ ஜம்பி கோயில் வளாகத்திற்குள் உள்ள கோயில்களில் ஒன்றான டிங்கி கோயில்

முரோ ஜம்பியின் கோயில் வளாகம் படாங் ஹரி ஆற்றின் கரையில் ஒரு பெரிய பகுதியில் பரவியுள்ளது. அகழ்வாராய்ச்சியின்போது எட்டு கோயில் வளாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்னும் பல மேடுகளையும் தளங்களையும் கொண்டு அமைந்துள்ளன. அவை பாதுகாப்பு பகுதிக்குள் அமைந்துள்ள நிலையில் இன்னும் அகழ்வாராய்ச்சி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் அடர்ந்த காடுகளால் மூடப்பட்டுள்ளன. மூன்று மிக முக்கியமான கோயில்களான டிங்கி கோயில், கெடடன் கோயில் மற்றும் கம்பங் கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. கோயில்கள் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. ஜாவாவின் கோயில்களைப் போலல்லாமல், மிகக் குறைவான அலங்காரங்கள், செதுக்குதல் அல்லது சிலைகள் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன. சிற்பத்தின் சில துண்டுகள் ஒரு சிறிய, தள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நகரத்தின் மக்கள் வசித்ததாக நம்பப்படும் மர வீடுகள் அனைத்தும் எவ்விதத் தடயமும் இன்றி மறைந்துவிட்டன. தற்போது ஏழு கோயில்கள் மட்டுமே மீட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கோயில்களும், மற்ற நான்கு கோயில்களாக டிங்கி I கோயில், கெம்பர்பாட்டு கோயில், கெடோங் I கோயில் மற்றும் கெடாங் II.கோயில் ஆகியவையும் அமையும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Jambi (city)", Wikipedia (ஆங்கிலம்), 2019-08-05, 2019-12-06 அன்று பார்க்கப்பட்டது
  2. "Batang Hari River", Wikipedia (ஆங்கிலம்), 2019-01-19, 2019-12-06 அன்று பார்க்கப்பட்டது
  3. "Muaro Jambi Temple: The Legacy of Ancient Jambi". 25 September 2011. 30 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 டிசம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. Syofiardi Bachyul Jb (November 25, 2014). "Muarajambi Temple: Jambi's monumental mystery".
  5. "Ada Kemungkinan Kerajaan Sriwijaya Berasal dari Jambi Bukan Palembang". Tribun News (Indonesian). 4 October 2016.CS1 maint: Unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]