முருகர் செல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகர் செல்லையா
பிறப்புஒக்டோபர் 07 1906
அல்வாய்
இறப்புடிசம்பர் 09 1966
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்♂முருகர், ♀குஞ்சரம்

முருகர் செல்லையா: (பிறப்பு: ஒக்டோபர் 07 1906, இறப்பு: டிசம்பர் 09 1966) ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கிய இவர் இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்கவர். எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளவர்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

வடமாகாண உடுப்பிட்டி, கரவெட்டி, பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் கிராமத்தில் முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக பிறந்த செல்லையா யாழ்ப்பாணம், தேவரையாளி சைவ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுப் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். இவரின் மனைவி நாகமுத்து. இவர் அனுசுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த எழுத்தாளராவார். இவர்களுக்கு விவேகானந்தன், சபாலிங்கம், பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறந்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.

நல்லாசான்[தொகு]

இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உருவாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியாகவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது. இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத்திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனையையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும்.

நோய்க்குறிப்பு சொல்பவர்[தொகு]

பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக்கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப்பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார்.

பொது சேவைகள்[தொகு]

அல்வாயில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலையத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார்.

தங்கத் தமிழ்க் கண்[தொகு]

1962ஆம் ஆண்டு ‘தங்கத் தமிழ்க் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.

பாசைப் பயிற்சி[தொகு]

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாசைப் பயிற்சி’ எனும் புத்தகத்தை 1963 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இறுதி நூல்[தொகு]

இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ‘மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குல சபாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.

பதிவுகள்[தொகு]

  • இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
  • கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட ‘அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  • 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவருடைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கௌரவித்தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரையை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியுள்ளார்.
  • இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர் செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது.
  • அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் ‘அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே’ எனப் பாடி வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகர்_செல்லையா&oldid=3738824" இலிருந்து மீள்விக்கப்பட்டது