உள்ளடக்கத்துக்குச் செல்

மும்தாசு ரசிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேகம் மும்தாசு ரசிதி (Begum Mumtaz Rashidi, சிந்தி: بيگم ممتاز راشدي) (மார்ச் 1934 - 1 நவம்பர் 2004) பாக்கித்தானிய சமூகவியலாளர், எழுத்தாளர். 1954ஆம் ஆண்டு பாக்கித்தானின் முதல் பெண் தூதரக செய்தியாளராக பிலிப்பீன்சு, சீனா , ஆங்காங் நாடுகளில் பணியாற்றினார். புகழ்பெற்ற சிந்து மாகாண அறிஞரும் அரசியல்வாதியுமான அலி முகமது ரசிதியின் மனைவியும் ஆவார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

மும்தாசு ரசிதி இந்தியாவின் கொல்கத்தாவில் மார்ச்சு 8, 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். சேர்- இ-பெங்கால் ஏ.கே. ஃபசுலுல் அக்அவர்களின் பேத்தி.[1] டார்ஜீலிங்கிலுள்ள தாவ் ஹில் பள்ளியில் துவக்கக் கல்வி பெற்றார். தாக்காவிலுள்ள ஈடன் பெண்கள் கல்லூரியில் நுண்கலையில் இளங்கலைப் பட்டமும் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்து ஆங்கில இளங்கலைப் பட்டமும் பெற்றார். அதே பல்கலைப்பழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றார். 1955-56 ஆண்டுகளில் அமெரிக்காவின் நோட்ரெ டேம் இந்தியானா பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்டயப் படிப்பை முடித்தார்.[2] ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், உருது, சிந்தி மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார்.

பணி வாழ்வு

[தொகு]

1954இல் பாக்கித்தானின் முதல் பெண் தூதரக செய்தியாளராக பாரிசில் பொறுப்பேற்றார்.[1] இங்கு பணி புரியும் போது பாக்கித்தானின் நடுவண் தகவல் அமைச்சர் பிர் அலி முகமது ரசிதியைச் சந்தித்தார். அவரை 1955இல் திருமணம் செய்தார்.[3] பிலிப்பீன்சு, சீனா, ஆங்காங் நாடுகளில் பல்வேறு தூதரகப் பணிகளில் இருந்தார். 1965இல் தமது கணவருடன் பாக்கித்தானிற்கு திரும்பினார். ரசிதி சிந்தி மாகாண மக்களுக்கான பல சமூக நலத் திட்டங்களில் ஈடுபடலானார். குறிப்பாக சிந்து மேல் மாகாணப் பகுதிகளிலும் மஞ்சார் ஏரிப் பகுதியிலும் கவனம் செலுத்தினார். பன்னாட்டு பொதுநல அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து சேவையாற்றினார். குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான வளர்ச்சியை இலக்காக கொண்ட சமூகநல அமைப்பை நிறுவினார். 1983 முதல் 1986 வரை பாக்கித்தானிய அரசின் பெண் நிலைக் குறித்த தேசிய வாரியத்தில் உறுப்பினராக பணியாற்றினார். தவிரவும் தேசிய பாக்கித்தானிய பெண்கள் சங்கத்தின் அறிவுரையாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கினார். பல பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் பயிலரங்குகளிலும் பிற மன்றங்களிலும் பாக்கித்தான் சார்பாக கலந்து கொண்டுள்ளார்.

பாக்கித்தானின் கலைக்கான தேசிய மன்றமான குவாய்து-இ-ஆசம் அகாதமியில் ஆளுநர் குழு உறுப்பினராக உனெசுக்கோவுடன் ஒருங்கிணைந்து சேவையாற்றினார். சிந்து வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1975இல் கராச்சியில் நடந்த நூற்றாண்டுகளாக சிந்து மாநாட்டில் முக்கியப் பங்காற்றினார்.

எழுத்தாளராக

[தொகு]

ரசிதி பல்வேறு செய்தித்தாள்களில், டான் நாளிதழ், மார்னிங் நியூஸ், தி சன் போன்ற நாளிதழ்கள் உள்ளிட்டு, தவறாது எழுதி வந்தார். சிந்து மாகாண சமூக விடயங்களைக் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். அவருடைய சில நூல்கள்:

  • சிந்த் அவுர் நிகா-இ-கதர்சனாசு[4]
  • இசுலாமிக் ஆர்ட் அன்டு கல்ட்சர் ஆப் சிந்த்

இறப்பு

[தொகு]

1 நவம்பர் 2004 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்; கராச்சியின் மேவா ஷா இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு இரு மக்கள் உள்ளனர்: மகன் அடில் ரசிதி, மகள் அனடில் ரசிதி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Mumtaz Rashidi passes away". DAWN.COM (in ஆங்கிலம்). 2004-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
  2. "بيگم ممتاز راشدي : (Sindhianaسنڌيانا)". www.encyclopediasindhiana.org (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
  3. "علی محمد راشدی", وکیپیڈیا, 2019-10-17, பார்க்கப்பட்ட நாள் 2020-03-07
  4. Rashidi, Mumtaz (2003). Sindh Aur Nigah Qadar Shanas. Sang-e-Meel, Karachi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9693514391.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாசு_ரசிதி&oldid=3290016" இலிருந்து மீள்விக்கப்பட்டது