முன்குறித்தல் (கிறித்தவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்குறித்தல் (Predestination) என்பது கிறித்தவப் பிரிவுகளுள் ஒன்றாகிய கால்வினியம் (Calvinism) இவ்வுலகின்மீது கடவுள் எவ்வாறு ஆட்சி செலுத்துகிறார் என்பது குறித்து வழங்குகின்ற போதனையைக் குறிக்கும். "அனைத்து நிகழ்வுகளையும் கடவுள் சுதந்திரமாக, மாறாவிதத்தில் நிர்ணயித்தார்" என்று கால்வினிய போதனை கூறுகிறது.[1]

முன்குறித்தல் என்பதன் இரண்டாவது பொருள் மனிதரின் மீட்பைச் சார்ந்தது ஆகும். கால்வினியக் கொள்கைப்படி, கடவுள் தம் அருளால் மீட்படைவோர் சிலர் என்றும், எஞ்சியோர் தம் பாவங்களின் பொருட்டு (பிறப்புப் பாவம் உட்பட) முடிவில்லா தண்டனைக்கு உள்ளாவர் என்றும் முன்கூட்டியே நிர்ணயித்துள்ளார். மீட்புக்காக முன்குறிக்கப்பட்டோர் "நிபந்தனையற்ற தேர்வு" பெற்றவர்கள்; தண்டனைக்கு என்று முன்குறிக்கப்பட்டோர் கண்டனத்துக்கு உள்ளாவர். ஏற்கெனவே மீட்புக்கென முன்குறிக்கப்பட்டோர் உரிய காலத்தில் கடவுள்மீது நம்பிக்கை கொள்ள (மறுபிறப்பு அடைய) அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கால்வினியம் போதிக்கிறது.

கால்வினிய சமய அறிக்கைகள்[தொகு]

பெல்ஜிய அறிக்கை (Belgic Confession) என்னும் சமயக் கொள்கை ஏடு (1561) "முன்குறித்தல்" பற்றி இவ்வாறு கூறுகிறது:

"நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக ஆதாமின் வழிவந்தவர்கள் அழிவையும் இழப்பையும் அடைந்தனர் என்றும், கடவுள் தம் இயல்பாகிய இரக்கத்தையும் நீதியையும் வெளிப்படுத்தினார் என்றும் நம்பி ஏற்கிறோம். கடவுளின் இரக்கம் வெளிப்படுவது எவ்வாறெனில், அவர் தமது நித்திய, மாறாத திட்டத்தாலும், நன்மைத்தனத்தாலும் நம் ஆண்டவராகிய இயேசு கிறித்துவில் தாம் முன்குறித்தவர்களை, அவர்கள்தம் செயல்களைக் கருதாது, தாமாகவே அழிவிலிருந்து விடுவித்து மீட்டார். கடவுளின் நீதி வெளிப்படுவது எவ்வாறெனில், கடவுள் அழிவுக்கும் இழப்புக்கும் தம்மைக் கையளித்தவர்களை அவ்வாறே விட்டுவிடுகிறார்." (எண் 16).


வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Confession of Faith) என்னும் சமயக் கொள்கை ஏடு (1643) "முன்குறித்தல்" பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது:

"கடவுள் நித்திய காலத்திலிருந்தே தமது ஞானம் நிறைந்த புனிதமான திட்டத்திற்கு ஏற்ப அனைத்து நிகழ்வுகளையும் சுதந்திரமாக, மாறாவிதத்தில் நிர்ணயித்தார். இருப்பினும், கடவுள் பாவத்தைத் தோற்றுவிக்கிறார் என்றாகாது. படைப்புகளின் உள்ளத்தைப் பணியவைக்கும் வன்முறையும் அவரிடமிருந்து வருவதில்லை. இரண்டாம் நிலை காரணிகளின் சுதந்திரமோ சூழமைத் தன்மையோ நீக்கப்படுவதுமில்லை, மாறாக அவை நிலைநிறுத்தப்படுகின்றன."

"கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப, கடவுளின் மாட்சி வெளிப்படும் பொருட்டு, சில மனிதரும் வானதூதரும் நித்திய வாழ்வு பெற முன்குறித்து வைக்கப்படுகின்றனர். பிறரோ நித்திய சாவுக்கு முன்குறிக்கப்படுகின்றனர்."

"தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே மாட்சிமை பெற முன்குறிக்கப்படுகின்றனர். அவர்கள் கிறித்துவில் விசுவாசம் கொண்டு, தூய ஆவியின் செயல்பாட்டினால் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டு, தத்தெடுக்கப்பட்டு, தூயவராக்கப்பட்டு, அவரது வல்லமையால் பாதுகாக்கப்பட்டு, விசுவாசத்தால் மீட்புப் பெறுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் கிறித்துவால் மீட்கப்படுவதில்லை" (அதிகாரம் 3).

இரட்டை முன்குறித்தல்[தொகு]

கால்வின் போதித்த முன்குறித்தல் கொள்கை சில வேளைகளில் "இரட்டை முன்குறித்தல்" என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது.[2]

இக்கருத்துப்படி, கடவுள் ஒவ்வொரு மனிதனின் இறுதி கதியும் எவ்வாறு அமையும் என்பதை முன்கூட்டியே முன்குறித்துள்ளார். இயேசு கிறித்து வழியாக சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிலை வாழ்வை வழங்க அவர் முடிவுசெய்துள்ளார். எஞ்சியோர் புரிந்த பாவத்தின் காரணமாக அவர்கள் முடிவில்லா தண்டனைக்கு ஆளாகுமாறு கடவுள் முடிவு செய்துள்ளார்.

இக்கொள்கையை கால்வின் எழுதிய "கிறித்தவ சமயக் கொள்கைகள்" (Instutues of the Christian Religion) என்னும் நூலில் காணலாம். அந்நூலின் மூன்றாம் பிரிவின் 21ஆம் அதிகாரத்தின் தலைப்பு இவ்வாறு உள்ளது: "சிலருக்கு மீட்பு வழங்கவும் பிறரை அழிவுக்கு உள்ளாக்கவும் முன்குறித்து, கடவுள் வகுத்த திட்டம்."

ஒருங்கிணைந்த கிறித்தவம்[தொகு]

ஒருங்கிணைந்த கிறித்தவம் (Christian Universalist) என்னும் பிரிவினர் கால்வினிய முன்குறித்தல் கொள்கை விமர்சிக்கின்றனர். கடவுளின் மாட்சிமிகு மறைபொருளை முன்குறித்தல் கொள்கை இழிவுபடுத்துகிறது என்று அவர்கள் கருதுகின்றனர். அனைத்தையும் அறிகின்ற, அனைத்தையும் ஆக்க வல்ல, அனைவர் மட்டிலும் அன்புகாட்டுகின்ற படைப்புக் கடவுள், உலக மனிதர் அனைவரையும் மீட்க வல்லவர், உறுதியாக மீட்பார் என்பது அவர்கள் கொள்கை. அக்கொள்கைப்படி, கடவுள் படைப்பின் மீது எல்லையற்ற அன்புடையவர் ஆதலால் எந்த ஓர் ஆன்மாவையும் அவர் அழிய விடமாட்டார். மாறாக அனைவருக்கும் மீட்பு வழங்குவார். கடவுளின் எல்லைமிகு அன்புக்கும் இயேசு கிறித்துவின் சிலுவைப் பலிக்கும் உட்படாத நரகமோ சாத்தானோ பாவமோ இருக்கமுடியாது என்பது அவர்களது வாதம். அனைவரையும் மீட்பதுதான் கடவுளின் திட்டம் என்றால் கடவுள் அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவார்.

இதற்கு கால்வினியர் கீழ்வருமாறு பதில் அளிக்கின்றனர்: கடவுள் எல்லாம் வல்லவர், தாம் மீட்க எண்ணுகின்ற அனைவரையும் மீட்பவர், அவரது திட்டத்தின்படி அழிந்து போகக் குறித்தவர்களை அழிவுக்கு உள்ளாக்குபவர். நடைமுறையில் பார்க்கும்போது எல்லா மனிதர்களும் மீட்படைவர் என்று கூற முடியாது என்றே விவிலியம் கூறுகிறது. ஏனென்றால் கடவுள் நீதியுடையவர். கடவுள் தம் திட்டப்படி, விருப்பப்படி இரக்கத்தையும் அருளையும் வழங்குகின்றார் (உரோமையர் 8); அனைவர் மட்டிலும் நீதியோடு நடந்துகொள்கின்றார். எனவே, பாவம் செய்தவர்கள் தண்டனை பெறுவர். இவ்வாறு கால்வினியர் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கருத்துப்படி, விவிலியமே சிலர் தான் மீட்புப் பெறுவர் என்று கூறுகிறது (மத்தேயு 7:13). வாழ்க்கையில் பல வழிகள் இருந்தாலும் இயேசு ஒருவரே மீட்புக்கு வழி (யோவான் 14:6). இவ்வாறு கால்வினியர் விவிலிய போதனையை விளக்கி, முன்குறித்தல் கொள்கையை நியாயப்படுத்துகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையின் போதனை[தொகு]

கத்தோலிக்க திருச்சபை கால்வினின் "முன்குறித்தல்" கொள்கையை ஏற்பதில்லை. மாறாக, கடவுளின் திட்டம் பற்றியும் கடவுளின் பராமரிப்புப் பற்றியும் கத்தோலிக்க திருச்சபை போதிக்கிறது.

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல், எண் 600 கீழ்வருமாறு கூறுகிறது:

காலத்தின் எல்லா நொடிகளும் கடவுளுக்கு நேர் அறிவாக உள்ளன. எனவே, கடவுள் நித்தியத்திலிருந்தே தமது "முன்குறித்தல்" திட்டத்தை உருவாக்கும்போது, அத்திட்டத்தில் கடவுள் ஒவ்வொரு மனிதரும் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்தி கடவுளின் அருளுக்குப் பதில்மொழி வழங்கும் வகையையும் உள்ளடக்குகின்றார்: 'இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்' (திருத்தூதர் பணிகள் 4:27-28; ஒப்பிடுக திருப்பாடல்கள் 2:1-2). தமது மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, கடவுள் அவர்களுடைய குருட்டுத்தன்மையிலிருந்து எழுந்த செயல்களை அனுமதித்தார். (ஒப்பிடுக மத்தேயு 26:54; யோவான் 18:36; 19:11; திருத்தூதர் பணிகள் 3:17-18)

மேலும், கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல், எண் 1037 கீழ்வருமாறு கூறுகிறது:

யாரையும் நரகத்துக்குப் போவதற்காகக் கடவுள் முன்குறித்து வைப்பதில்லை; இதற்கு, சாவான பாவத்தின் வழி கடவுளிடமிருந்து வேண்டுமென்றே அகன்று செல்லுகை நிகழ்ந்திருக்க வேண்டும், இறுதிவரை அவ்வாறே தொடர்ந்திருக்க வேண்டும். நற்கருணைக் கொண்டாட்டத்தின் போதும், இறைநம்பிக்கையுடையோர் அன்றாடம் நிகழ்த்தும் இறைவேண்டல்களிலும் திருச்சபை கடவுளின் இரக்கத்தை இறைஞ்சி வேண்டுகிறது; அக்கடவுளோ, 'யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்' (1 பேதுரு 3:9)

கால்வினின் முன்குறிப்பு கொள்கைக்கு மறுப்பு[தொகு]

கால்வினின் முன்குறிப்புக் கொள்கையை ஏற்காதவர்கள் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்கள்:

  • கடவுளை மனிதர்கள் சுதந்திரமாக வழிபட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். அப்படியானால், கடவுளே மனிதரின் கதியை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டார் என்றால் மனிதருக்கு சுதந்திர உள்ளமே இருக்காது என்றாகுமே. அதனால் கால்வினின் முன்குறிப்புக் கொள்கையை ஏற்க இயலாது.
  • ஒருவர் சுதந்திரமாகக் கடவுளை ஏற்று வழிபட்டு, நன்னடத்தையைக் கடைப்பிடித்து வாழ்ந்தாலும் அது கடவுளின் முன் ஒன்றுக்குமே பயன்படாததாகப் போகும் என்றால், இறுதிக் கதியை எந்த விதத்திலும் நிர்ணயிக்காது என்றால், பாவத்தை விட்டு விலகி, மனம் திரும்பி, கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப வாழ்வது பொருளற்றது என்றாகுமே. தன் மனம் போன போக்கில் வாழ்ந்தாலும் நன்னெறியைக் கடைப்பிடித்தாலும் இறுதி முடிவு ஒன்றுதான் என்றால் அது முரண்பாடாகுமே. - இதுவும் கால்வினிய முன்குறிப்புக் கொள்கைக்கு எதிராக எழுப்பப்படும் வாதம்.

இதற்கு கால்வினியர் கீழ்வருமாறு பதில் இறுக்கின்றனர்: கால்வினின் முன்குறிப்புக் கொள்கையில் மனித சுதந்திரமும் பொறுப்புணர்வும் மறுக்கப்படுவதில்லை. இருந்தாலும், மனிதனின் உள்ளம் பாவத்தின் தளையில் கட்டுண்டு இருப்பதால் அது தன்னுடைய உண்மையான சுதந்திரத்தைச் செயல்படுத்த இயலா நிலையில் உள்ளது. பாவத்தளைக்கு உட்பட்டிருப்பதால் மனிதர் தாமாகவே முடிவுசெய்து கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்க இயலாது. ஏனென்றால் பாவம் கடவுளுக்கு நேர் முரணானது. தாமாகவே முடிவுசெய்து கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பது என்பது "மனித செயல்"; மனித செயலால் கடவுளின் மீட்பைப் பெற இயலாது. கடவுளின் அருளால் மட்டுமே மீட்பை அடைய முடியும். ஆக, கடவுள் முதலில் மனிதரை அவர்களுடைய பாவத்தளையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்; அதன் பின் புதுப்பிறப்பு அடைந்து, மனித இதயமானது நன்மையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு மனிதர் கடவுளோ 'ஒத்துழைக்கின்றனர்' என்று கூறுவதைவிட, கடவுளால் விடுவிக்கப்பட்டு, கடவுளின் அருளால் ஈர்க்கப்பட்டு நன்மையான செயல்களைச் செய்கிறார் என்பதே சரி. - இவ்வாறு கால்வினியர்கள் பதிலளிக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதரவு[தொகு]

எதிர்ப்பு[தொகு]