முத்து. எத்திராசன்
முத்து. எத்திராசன் என்பவர் தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், தொல்பொருள் கல்வெட்டு ஆய்வாளர் ஆவார். இவர் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் பலவும் எழுதியுள்ளார்[1].
பிறப்பும் கல்வியும்
[தொகு]இவர் செஞ்சிக்கு அருகிலுள்ள அவியூர் எனும் சிற்றூரில் 25-9-1934 ஆம் ஆண்டு முத்துசாமி - முத்தம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். தமது ஊரிலேயே தொடக்கக் கல்வியைப் பயின்றார். சென்னை மாநகராட்சிப் பள்ளியிலும், சூளைப் பகுதியிலுள்ள திருவொற்றீசுவரன் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். விழுப்புரம் அரசு பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பெற்றார். இவருக்கு ஓவியத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் மூன்றாண்டுகள் ஓவியப் பயிற்சியும் பெற்றார். தமிழின் மீது உள்ள பற்றினால் தமிழ் பயின்று வித்துவான் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார்.
பணிகள்
[தொகு]தமிழ்க் கவிஞர் மன்றத்தில் ஈடுபாடு கொண்டு அதன் கிளை அமைப்பான திறனாய்வு மன்றத்திலும், இலக்கண, இலக்கிய வகுப்புகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அமைப்புகளிலும் தலைவராகவும், செயலராகவும் பணிபுரிந்துள்ளார். சென்னை வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியுள்ளார். தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையுடன் இணைந்து பல கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்து, ஆராய்ந்து தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்று சிறப்புகளை வெளிக் கொணர்ந்து வர பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
[தொகு]முத்து. எத்திராசன் எழுதிய சில நூல்களின் பட்டியல்:[1]
- தமிழின் தொன்மையும் கல்வெட்டுகளும்
- கம்பர்காட்டும் கார்காலம்
- நெருப்பு நினைவுகள்
- கம்பர் தரும் பழமொழிகள்
- சங்க இலக்கியச் சமுதாயம்
- சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள்
- கவிதைகள் சொல்லும் கதைகள்
- இலக்கியத்தின் வரலாறும் பண்பாடும்
- பூனையை வென்ற புலி
- காக்கையைப் பற்றிய கற்பனைக் கதைகள்
- கம்பர் காட்டும் பாலை நிலம்.
- சின்ன மீனும் பெரிய மீனும்
பெற்ற பரிசுகள்
[தொகு]இவர், எழுதிய குந்தவையின் கலைக்கோயில் எனும் நூல்,1992 ஆம் ஆண்டு தமிழ்வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான முதல் பரிசு பெற்ற நூலாகும்.
உசாத்துணை
[தொகு]- முகம் மாமணி, " 100 சாதனையாளர்கள்" மணிவாசகர் பதிப்பகம், 1994.