முத்துராசாவால ஈரநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துராசாவால ஈரநிலம் (Muthurajawela) என்பது இலங்கையில் உள்ள ஒரு சதுப்பு நிலமாகும். அதிகளவிலான உயிர்பல்வகைமையினை கொண்டுள்ளதால் இலங்கையில் உள்ள ஈரநிலங்களில் முக்கியத்துவம் பெற்ற ஈரநிலமாக முத்துராசாவால ஈரநிலம் கருதப்படுகிறது. கொழும்புக்கு வடக்கே கம்பகா மாவட்டத்தில்[1] 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள நீர்கொழும்பு குளத்தின் தெற்குப் பகுதியில் இச்சதுப்புநிலம் உள்ளது. 3,068 எக்டேர் (7,580 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட இது நாட்டின் மிகப்பெரிய உப்புக் கரையோரக் கரி சதுப்பு நிலமாகும்.[2] தனித்துவமானதாகவும் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்காகவும் முக்கியத்துவம் பெறும் இது இலங்கையின் 12 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. முத்துராசாவால என்பது அரச புதையல் களம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

முத்துராசாவால சதுப்பு நிலம் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில், முத்துராசாவால சதுப்பு நிலத்தின் வடக்குப் பகுதியில் 1,777 எக்டேர் (4,390 ஏக்கர்) பரப்பளவு நிலம், அதன் பரந்த உயிரியல் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஈரநில சரணாலயமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.[3] இந்த ஈரநிலப்பகுதியில் 192 தனித்துவம் மிக்க தாவரங்களும், 40 வகையிலான மீனினங்கள், 14 வகையான ஊர்வன இனங்கள், 102 வகையிலான பறவைகள், 22 வகையிலான பாலூட்டிகள், 48 வகையிலான வண்ணாத்துப்பூச்சிகள் என 209 வகையான விலங்குகளும் காணப்படுகின்றன. அடையாளம் காணப்பட்ட சில இனங்கள் சதுப்பு நிலத்திற்கே உரிய பூர்வீகமானவைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

முத்துராசாவால சதுப்பு நிலம் ஒரு முக்கிய உள்ளூர் சுற்றுலாத்தலமாகும். சுற்றிப் பார்ப்பதற்கும் படகு சவாரி செய்வதற்கும் இங்கு வசதி உள்ளது. உள்ளூர் விவசாயம் மற்றும் வனத்துறைக்கும் இது ஆதரவளிக்கிறது. இப்பகுதிக்கு வருபவர்கள் சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக இம் மையத்தின் பணியாளர்களால் வழிநடத்தப்படுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் ஈரநிலங்களின் முக்கியத்துவம்". பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  2. Pinto, Leonard (17 May 2015). "Cruising down the ecology of the Negombo lagoon". Sunday Times. http://www.sundaytimes.lk/150517/plus/cruising-down-the-ecology-of-the-negombo-lagoon-148770.html. பார்த்த நாள்: 11 May 2017. 
  3. Lucy Emerton, தொகுப்பாசிரியர் (2005). Values and Rewards: Counting and Capturing Ecosystem Water Services for Sustainable Development. IUCN. பக். 83–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9558177431. 

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராசாவால_ஈரநிலம்&oldid=3666197" இலிருந்து மீள்விக்கப்பட்டது