உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துத் தாண்டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துத் தாண்டவர் (1525-1600) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.

இசைப் பணி

[தொகு]

தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.

முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.

இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில

[தொகு]

‘பேசாதே நெஞ்சமே பேசாதே “ {(இராகம்)} சூரிய காந்தம் {(தாளம்)} {(மிகிரசம்பை)}

“காணாமல் வீணிலே காலங் கழித்தோமே” {( இராகம்)} தன்யாசி {( தாளம்)} சாபு

“தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும், திகழ் அம்பல வாணனைத் -தெரிசனம்” {(இராகம்)} வசந்தா {(தாளம் )} ஆதி

”கண்டபின் கண்குளிர்ந்தேன் - பிறவிக் கடலைக் கரைகடந்தேன் -கண்டபின்” {(இராகம்)} மலையமாருதம் {(தாளம்)} ரூபகம்

“அருமருந்தொரு தனிமருந்திது, அம்பலத்தே கண்டேன்” -அருமருந்தொரு {( இராகம்)} காம்போதி {(தாளம்)} ரூபகம்

“தெண்டனிட்டே னென்று சொல்லுவீர் - நடேசர்க்கு நான்” {( இராகம்)}யமுனாகல்யாணி {(தாளம்)} ஆதி

வரலாறு

[தொகு]

இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர்[சான்று தேவை] குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது.

ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி.

முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது.

ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.

1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.

உசாத்துணை

[தொகு]
  • லேனா தமிழ்வானன் (பதிப்பாசிரியர்), தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
  • மு.அருணாசலம், தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள் (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது).
  • மு. அருணாசலம், சித்தாந்தம் என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.

இறுதி 6 பாடல்கள் : உதவி : தமிழ்க் கீர்த்தனை ஆசிரியர் முதல் நால்வர் - ஆசிரியர் கலைமாமணி சங்கீத பூஷணம் வரகூர் ஆ.க. முத்துக்குமாரசாமி பொருளுதவி :- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். வெளியீடு: தமிழிசை நிலையம் வரகூர், ஜே.கே.பட்டினம் அஞ்சல், அண்ணாமலைநகர்வழி -608 002 முதற்பதிப்பு 1990 ( முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணபாரதியார் ஆகிய கீர்த்தனை ஆசிரியர் நால்வர் வரலாறு கூறும் இந்த நூலுக்குத் “தமிழ்க்கீர்த்தனை ஆசிரியர் நால்வர்” எனப் பெயர் அமைந்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துத்_தாண்டவர்&oldid=3380345" இலிருந்து மீள்விக்கப்பட்டது