முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தாரம்மன் கோவில்

முத்தாரம்மன் கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும்.[1] இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. [2]

மூலவர்[தொகு]

மூலவராக அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது உளி கொண்டு செதுக்காதது.[1] சிவன் சுயம்புவாக உள்ளார். மூலவர் முத்தாரம்மன், ஞானமூர்த்தி ஆவர். இக்கோயிலின் தல மரம் வேப்பிலை ஆகும். மதுரையை மீனாட்சி ஆள்வதைப்போல இங்கு அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் வடக்கு நோக்கி உள்ளனர்.[3]

முத்தாரம்மன்[தொகு]

அம்மை நோயினை முத்து போட்டதாகக் கூறுவர். முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச்செய்வர். அவ்வாறு செய்யும்போது முத்து நோய் இறங்கும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் முத்து+ஆற்று+அம்மன் முத்தா(ற்ற)ரம்மன் என்றழைக்கப்படுகிறார்.[3]

அமைப்பு[தொகு]

அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.அன்னை சிரசில் ஞானமுடி, கண்களில் கண்மலர், வீரப்பல், மூக்கில் புல்லாக்கு மற்றும் மூக்குத்தி, கழுத்தில் தாலிக்கொடி ஆகியவற்றுடன் உள்ளார். வலது காலை மடித்து சந்திரகலையுடன் உள்ளார்.அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் (கதாயுதம்), மறு கையில் விபூதி கொப்பரையுடன் உள்ளார். இடது காலை மடித்து சூரியகலையுடன் உள்ளார்.மகா மண்டபத்திற்குள் பேச்சியம்மன், கருப்ப சுவாமி, பைரவர் ஆகியோர் உள்ளனர். செப்புத்தகட்டினால் வேயப்பட்டுள்ள கொடிமரம் 32 அடி உயரம் உள்ளது.[2]

பிரார்த்தனை[தொகு]

அம்மை நோய் குணமடைய இங்கு வழிபடுகின்றனர். 41 நாள்கள் விரதமிருந்து வழிபட்டால் தொழுநோய், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமாவதாக மக்கள் கூறுகின்றனர். மாவிளக்கு பூசை, தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்துதல் ஆகியவை நேர்த்திக்கடனாக பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.[3]

தசரா விழா[தொகு]

இங்கு தசரா விழா தோன்றியதற்கான கதை உள்ளது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன், அகத்திய மாமுனிவரை அவமரியாதையும் செய்தான். கோபற்ற அவர் வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலையும்படி சாபமிட்டார். சாப விமோசனமாக இறைவியின் கையால் அவனது உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். வரமுனி, மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, பார்வதியை நோக்கி தவம் செய்தால், தீர்வு கிடைக்கும் என்று சிவன் கூறினார்.தேவர்களும் தவம் புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரணை உருவாக்கினார். வேள்வியில் பிறந்த பெண் குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாகும்.முதல் மூன்று நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் மூன்று நாட்கள் அலைமகளாகவும், இறுதியில் வரும் மூன்று நாட்கள் கலைமகளாகவும் அன்னை காட்சி அளிக்கிறாள். மகிஷாசூரனை வதைத்ததால் அன்னை மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்". 2020-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில், குலசேகரன்பட்டினம்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  4. அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா விழா[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]