உள்ளடக்கத்துக்குச் செல்

முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள்
நூலாசிரியர்இசுடீபன் கோவே இரோசர் மெரில், இரோபக்கா மெரில்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைசுயமேம்பாடு
வகைபுதினமல்லாதது
வெளியீட்டாளர்சைமொன் மற்றும் சுச்டர், நியூயார்க்
வெளியிடப்பட்ட நாள்
1994
ஊடக வகைஅச்சு (கடின, மென்னட்டை)
ISBN0-684-80203-1

முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள், (First Things First)[1] என்பது இரோசர் மெரில், இரோபக்கா மெரில் ஆகியோருடன் இணைந்து இசுடீபன் கோவே 1994 ஆம் ஆண்டு எழுதிய சுயமுன்னேற்றப் புத்தகம் ஆகும். வாழ்வில் நேரத்தை பயனுள்ளதாகச் செலவிட்டு, முதலில் செய்வதை முதலில் செய்து ஒருவன் எப்படி மிகவும் ஆற்றல் வாய்ந்தவனாக மாறமுடியும் என்பதற்கான உத்தியை இந்நூல் கற்றுத்தருகிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்கள் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் மேம்பாடு இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

நூலின் சுருக்கம்

[தொகு]

நேரத்தை நன்கு செலவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்ட உத்திகள், மூன்று தலைமுறையைத் தாண்டி வந்துள்ளன எனவும், முதல் தலைமுறை, செயல்களின் பட்டியலைக் குறித்துப் பேசும் எனவும், இரண்டாம் தலைமுறை சுயமாக செயல்களைப் பட்டியலிட்டு காலவரையுள் செயலாற்றுவது என்றும், பிராங்கிளின் பிளானர் என்பவரின் திட்டமிடும் பட்டியலில் உள்ளடக்கிய விழுமிய தெளிவுரை மூன்றாம் தலைமுறை என்றும் ஆசிரியர் கூறுகிறார். கடிகாரத்தையும், திசைகாட்டியையும் உவமையாக எடுத்துக்கொண்டு தமது கடமைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அதற்கு “சரியாக வடக்கு நோக்கி” என்று பெயரும் சூட்டுகிறார். நமது செயல்களுக்கெல்லாம் நமது நன்னெறியின் அடிப்படையில் அமைந்த கொள்கைகளே வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யும் செயல்பாடுகள் சரியான திசையிலும் அமையவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார். மக்கள் தம் வாழ்க்கையை நன்கு வாழ வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

"ஜசன்கோவரின் நேர மேலாண்மை உத்தியை"[2] விளக்கும் 4 சதுரப்பெட்டி.

தமது செயல்களை எதை முதலில் செய்வது எதைப்பின்பு செய்வது என்பதற்கு ஆசிரியர் ஒரு உத்தியை முன்வைக்கின்றார். வழக்கமாக, முக்கியமில்லாத வாலாயமான பணிகள், தமது வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கிச்செல்லாதவை தான் முன்னுரிமை பெற்று நம்மால் செய்யப்படுகின்றன என்று கூறும் ஆசிரியர் ஜசன்கோவர் அவர்களின் நேரத்தைப் பயன்படுத்தும் உத்தியை மேற்கோள்காட்டி நமது செயல்பாடுகளை நான்குவகையாகப் பிரிக்கலாம் என்று கூறுகிறார். முக்கியமான அலுவல்கள் அவசரமானவை அவசரமில்லாதவை என்று இரு வகையாகப் பிரிக்கப்படுகிறது எனவும் அது போலவே முக்கியமில்லாதவையும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது என்று கூறுகிறார். இதில் அவசரமில்லாத முக்கியமான பணிகள் தாமதப்படும் எனவும் முக்கியமில்லாத அவசர பணிகள் முன்னுரிமை பெறும் எனவும் இவ்வாறு பல செயல்களுக்கு நாம் தவறாக முன்னுரிமை அளிக்க வேண்டி வருவதால் நமது ஆற்றல் வீணடிக்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.[3][4] இதற்காக நான்கு சதுரப்பெட்டிகளுடன் இக்கோட்பாட்டை விளக்குகிறார்.

தமது குறிக்கோளை அடைய முக்கியமான பணிகளை இனம் கண்டு செயல்படுத்த வேண்டுமென்றும் இது நபருக்கு நபர் வேறுபடும் என்றும், சிறிய சிறிய எல்லைகளை வகுத்துக்கொண்டு செயல்பட்டால் ஒரு ஒருங்கிணைந்த சமச்சீரான வாழ்க்கை வாழமுடியும் என்றும் கூறுகிறார்.

நாம் அடைய வேண்டிய இலக்குகளைப் பட்டியலிட்டு, அவைகளை ஏழு அட்டவணையில் அடக்கி, முன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டியவனவற்றைத் திட்டமிட வேண்டுமென்றும், ஒவ்வொரு வாரமும் தாம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்து முன்னுரிமை இல்லாத பணிகள் முக்கியமான பணிகளைப் புறந்தள்ளிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் ஆசிரியர் கூறுகிறார்.

பணியைப் பகிர்ந்தளித்தல் முக்கியமான உத்தியாக முன்வைக்கப்படுகிறது. தாம் செய்ய வேண்டிய பணி எது, மற்றவர்களுக்கு எதனைப் பகிர்ந்தளிக்கலாம் என்று எண்ணி செயல்படுவது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார் ஆசிரியர். முக்கியமில்லாத பணிகளை தாம் எடுத்துக்கொண்டு செய்தால் முக்கியமான பணிகளை செய்ய முடியாமல் போகும் எனவும் குறிக்கோளை அடைவது தான் முக்கியம் என்று வலியுறுத்துகின்றார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. இசுடீபன் கோவே, A. Roger Merrill, and Rebecca R. Merrill, First Things First: To Live, to Love, to Learn, to Leave a Legacy. New York: Simon and Schuster, 1994. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-80203-1)
  2. McKay; Brett; Kate (October 23, 2013). "The Eisenhower Decision Matrix: How to Distinguish Between Urgent and Important Tasks and Make Real Progress in Your Life". A Man's Life, Personal Development. http://www.artofmanliness.com/2013/10/23/eisenhower-decision-matrix/. 
  3. Drake Baer, "Dwight Eisenhower Nailed A Major Insight About Productivity", Business Insider, Apr. 10, 2014 (accessed 31 March 2015)
  4. Fowler, Nina (September 5, 2012). "App of the week: Eisenhower, the to-do list to keep you on task". Venture Village.