உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் குலோத்துங்க சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதலாம் குலோத்துங்கச் சோழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதலாம் குலோத்துங்க சோழன்

kulothunga_territories_cl.png
குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1120
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1070–1120
பட்டம் கோப்பரகேசரி வர்மன்
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி மதுராந்தகி இராசேந்திரன்
பிள்ளைகள் விக்கிரம சோழன்
முன்னவன் அதிராஜேந்திர சோழன்
பின்னவன் விக்கிரம சோழன்
தந்தை இராஜராஜ நரேந்திரச் சாளுக்கியன்
பிறப்பு ராஜமுந்திரி ஆந்திர பிரதேசம்
இறப்பு கங்கை கொண்ட சோழபுரம்


முதலாம் குலோத்துங்க சோழன் (பொ.ஊ. 1070–1122)[1][2] வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் மகனாக பிறந்தான்[3][4][5][6] இவர் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் பிறந்தார். இவரை இராசேந்திர சோழர் மனைவி வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார் என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது.

வீரராசேந்திரன் தனது ஐந்தாவது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழரை இளவரசராக முடிசூட்டினார். இதை "இசையுடன்எ டுத்தகொடி அபயன் அவ னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே" என கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகிறது. இருப்பினும் மரபுக்கு மாறாக வீரராசேந்திரன் மகன் அதிராசேந்திரற் வீரராசேந்திரருக்கு பின் அரசனாக பதவியேற்றார். பொ.ஊ. 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், குலோத்துங்க சோழன் அரசனாக பதவியேற்றார். அதிராசேந்திரனை குலோத்துங்கன் கொலை செய்தார் என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது ஆனால் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் குலோத்துங்க சோழருக்கு பின் வந்த சோழர்களை "சாளுக்கிய சோழர்" என தவறுதலாக குறிப்பிடுகின்றனர். குலோத்துங்கன் தன்னை சாளுக்கியர் என கூறியதற்கான எந்த கல்வெட்டு சான்றும் கிடைக்கவில்லை.இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.

இவர் திறமையான அரசனாக இருந்தாலும், இவர் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.

பொ.ஊ. 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில் பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.

இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர் காலத்தில் இயற்றிய தமிழ் இலக்கியம் செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி ஆகும்.

குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை

ராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.

ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதித்தனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பங்கள்:

சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கலகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப்பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

சாளுக்கியப் போர்

அரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தாக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.

படைத் தளபதிகள்:

சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.

1) இளவரசன் ராஜேந்திர சோழன்

குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.

2) அரையன் காளிங்கராயர்:

குலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த சேனாதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூத்தன்.

3) சேனாதிபதி இருங்கோவேள்

4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப்படுகின்றது.

பாண்டிய சேர யுத்தங்கள்:

குலோத்துங்கனின் ஆரம்ப காலங்கள் போர்க் களத்தில்தான் பெரிதும் செலவிடப்பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.

சாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகருக்குத் திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோத்துங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கலகத்தில் ஈடுபட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.

படைத் தளபதிகள்:

1) கருணாகரப் பல்லவன்

கருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப்படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப்படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.

2) உடையான் ஆதித்தன்:

உடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பெயரினைப் பெற்றான்.

3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்

4) அழகிய மணவாள நம்பி

5) ராஜ ராஜ மதுராந்தகன்.

இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுபட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப்பட்டனர்.

சேர யுத்தம் :

காந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாராக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கலகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடத்தாமல் சேரர்களை எதிர்நோக்கிச் சென்றான். பாண்டியர்களைவிட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.

கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமையில் போரினால் ஈடுபட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோத்துங்கனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.

படைத் தளபதிகள்:

கருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.

1) கரனை விழுப்பரையர்

2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி

இலங்கைப் போர் :

வீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்கச் செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்பப்படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.

சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கலகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.

சாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.

படைத் தளபதிகள்:

1) இளவரசன் ராஜேந்திரன்

2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்

3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்

முதலாம் கலிங்கத்துப் போர்

குலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பினவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை தூண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தனே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும்.

படைத் தளபதிகள்:

குலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுபட்டு துணை நின்றனர்.

இரண்டாம் கலிங்கத்துப் போர்

இந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப்படுகின்றது. கலிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.

இப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப்படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றி பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருபக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது.

படைத் தளபதிகள்: 1) கருணாகரப் பல்லவன்

2) அரையன் காளிங்கராயர்

3) அரையன் ராஜ நாராயணன்

வெளிநாட்டு வணிகத் தொடர்புகள்

இலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமல், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.

சீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (Burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.

அமைச்சரவை

வாசுதேவ பட்டர்

குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.

படைத் தலைவர்கள்:

1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்

மேற்கோள்

[தொகு]
  1. Cōmale,Pāri Nilaiyam (ed.). Ten Ārkkāṭu māvaṭṭam. South Arcot (India). p. 132. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  2. Cōmu Nūlakam (ed.). Tiruccir̲r̲ampalam kōyil. Hindu temples. p. 207. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  3. Themozhi (ed.). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். p. 37. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  4. Ka Kōvintan̲ (ed.). கலிங்கம் கண்ட காவலர். Vaḷḷuvar Panṇại,. p. 64. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)CS1 maint: extra punctuation (link)
  5. Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India)̲ (ed.). Madras Government Oriental Series, Issue 157. Dravidian literature. p. 991. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  6. "Journal of the Andhra Historical Research Society". Andhra Historical Research Society 25: vii. 1958. https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC.