முண்மூலிகைக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்காந்தேசியே
Odontonema cuspidatum என்பதன் பூக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
Acanthaceae

Juss.[1]
மாதிரிப் பேரினம்
அகான்தசு
L.
துணைக்குடும்பங்கள்

Acanthoideae
Avicennia

வேறு பெயர்கள்

Avicenniaceae Miq., nom. cons. Justiciaceae Raf.
Mendonciaceae பிரிமெக்.
Meyeniaceae Sreem.
Nelsoniaceae Sreem.
Thunbergiaceae Lilja[1]

அக்காந்தேசியே (Acanthaceae) என்பது தாவரவியல் வகைப்பாட்டின் படி, பூக்கும் தாவரங்கள் அடங்கிய குடும்பங்களில் ஒன்றாகும். 'அகான்தாசு' (கிரேக்கம்:ἄκανθος) என்ற கிரேக்கச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர் வைக்கப்பட்டது. இக்கிரேக்கச்சொல்லானது, முள், பூ என்பனவற்றைக் குறிக்கிறது. பின்னொட்டாக வரும் -ஏசியே (-aceae) என்ற சொல்லானது, '(எனும்) இயல்புடையத் தாவரங்கள்' (plants of the nature of)[2] என்ற பொருளைக் குறிக்கிறது. இக்குடும்பத்தைத் தமிழில் முண்மூலிகைக் குடும்பம் என்றோ, முள்ளிலைச் செடிகள் என்றோ அழைக்கலாம். இக்குடும்பத்தில் ஏறத்தாழ 250 பேரினங்களும், 4000 சிற்றினங்களும் [3] அடங்கியுள்ளன. இப்பூக்குடும்பத்தில் மேலும் சில மூலிகைகள் இனங்காணப்படாமல் உள்ளன. 1986 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில், 81 புதிய இனங்கள், 'சசுட்டிசியா' (Justicia) என்ற ஒரு பேரினத்தில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன.[4] முக்கியம் வாய்ந்த, முதல் 12 பூக்கும் தாவரக் குடும்பங்களில் இதுவும் ஒன்றாகும். அவற்றில் பெரும்பாலானவை, வெப்ப மண்டல மூலிகைகள் ஆகும்.[5][6]

வாழிடம்[தொகு]

பெரும்பாலானவை வெப்பமண்டலத்தில் வளரும் மூலிகைகள் என்பது குறிப்பிடத்தகுந்த இயல்பாகும். குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்கா, பிரேசில், நடு அமெரிக்கா ஆகிய நில எல்லைகளில் வளர்ந்தோங்கியுள்ளன. அடர்ந்த காடுகள், திறந்தவெளி நிலங்கள், புதர்கள், ஈரமான விளைநிலங்கள், பள்ளத்தாக்குகள், கடற்கரை நிலப்பகுதிகள், சதுப்புநிலங்கள் என அனைத்து வகையான வாழிடங்களிலும், இவைகள் ஓங்கி வளர்கின்றன. ஆடாதோடைக் குடும்பம் என்றும் சிலர் கூறுவர்.இது மிகப்பெரிய குடும்பம்.

இந்திய வளம்[தொகு]

 • இந்தியாவில் பல சாதரணச்செடிகள், இக்குடும்பத்தின் உறுப்பினர்களே ஆகும். இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலைச் செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள்.
 • தன்பெர்சியா(Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி. டபாசுகாய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் (barleria) முதலியன இக்குடும்பத்தில் அடங்கும்.
 • காட்டுக்கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை, நீலமணி போன்ற பூக்களுள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலக்கழிகளிலும், சதுப்பு நிலங்களிலும், காடு போல் வளர்ந்திருக்கும் இதன் இலை முட்கள் உள்ளன. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும், வயல்களிலும், வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது.
 • நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (Strobilanthus) என்னும் காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து, ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூ பூக்கும் இயல்புடையவை ஆகும்..
 • ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி முதலியன சாதரண பொது மக்களிடம் பெயர் பெற்றவையாகும்.

வளரியல்பு[தொகு]

 • இக்குடும்பத்தைச் சேர்ந்தவை பெரும்பாலும் சிறுசெடிகளும், குறுஞ்செடிகளுமே ஆகும். சிலகொடிகளும், அருமையான சில மரங்களும் இதில் அடங்கியுள்ளன.
 • இலைகள் எதிரொழுங்கும், முழுவடிவுமுள்ளவை இலையடிச் செதில் இல்லை.
 • பூவிதழ்கள் இணைந்து, ஒரே குழல் போல காணப்படுகின்றன.(sympetalous corollas)
 • பூங்கொத்து பெரும்பாலும் வளரா நுனிக்கதிர். பூக்காம்பிலைகளும், பூக்காம்புச் சிற்றிலைகளும் பலவற்றில் பெரியவையாயும், நிறமுள்ளவையாயும் இருக்கும். இச்சிற்றிலைகள் சில நேரங்களில் பூவை மூடிக்கொண்டிருக்கும். அப்போது இவை புல்லிவட்டம் போல் அமைந்து பூவைக் காக்க உதவும்.
 • பூபெரும்பாலும் இருபால் தன்மையைக் கொண்டதாக உள்ளது. வட்டத்துக்கு 4-5 உறுப்புகள் உடையது; ஒருதளச் சமமானது. அல்லிவட்டம் இணைந்தது. கேசரம் 4 அல்லது 2; பல இனங்களில்1-3 போலிக்கேசரங்கள்(Staminodes) உண்டு.
 • மகரந்தப்பை அறைகள் சமம் அல்லது ஒன்று சிறிதும், ஒன்று பெரிதுமாகவும், ஒன்று மேலும் ஒன்று கீழுமாகவும் இருக்கலாம். மகரந்தத் தூள் பலவிதச் சித்திர அமைப்பைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக இந்தத்தூளின் தோற்றம், ஒரு சாதிக்குள் ஒரேமாதிரியாக இருப்பதால் சாதிகளைப் பரித்தறிய இது அடையாளமாகப் பயன்படுகிறது.
 • சூலகத்தின் அடியில் நன்றாக வளர்ந்த ஆதான மண்டலம் (Disc) உண்டு. அதில் பூந்தேன் சுரக்கும். சூலகம் இரண்டு சூல் இலைகளைக் கொண்டதாக உள்ளது. இரண்டறைகளுள்ளது. அச்சுச் சூலொட்டுமுறை. சூல்கள் 2-பல.
 • கனி: அறைவெடிகனி. விதைகள் பெரும்பாலும் கடினமானவையாகவும், சப்பையாகவும் இருக்கும். கனிகள் வெடிக்கும்போது ஒலி உண்டாகலாம். பெரும்பாலான விதைகளில் கொக்கி (retinacula) போன்ற அமைப்புள்ளது.
 • பூவின் அமைப்பு, பூச்சிகள் வருவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தேனீக்கள் வருகின்றன. கேசரம் சற்று முன்னமேயே முதிர்கின்றது. சூல்முடி, கேசரத்துக்கு அப்பால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், பூச்சிகள் நுழையும் போதே, அதன் உடல் பட்டு, அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
 • இக்குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோன்ற வளைந்த பாகம் ஒன்று வளரும். அது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும் போது, இது வில் போல நிமிர்ந்து, விதையைத் தூரத்தில் எறியும்.

தாவர வேதிப்பண்புகள்[தொகு]

இக்குடும்பத் தாவரங்களில் பல தாவர வேதிப்பொருட்கள் (glycosides, flavonoids, benzonoids, phenols|phenolic compounds, naphthoquinone, triterpenoids)இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன. .[7]

சிறப்புச் சிற்றினங்கள்[தொகு]

 • GRIN பரணிடப்பட்டது 2009-08-14 at the வந்தவழி இயந்திரம் என்ற இணைய அமெரிக்க ஆவணக்காப்பகம், 246 பேரினங்கள், உலக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அறிவிக்கிறது. பிற அடைப்புக்குறிக்கு முன்னுள்ள சிறிய எழுத்துள்ள பெயர்கள், முறைய அப்பேரினங்களை கண்டறிந்தவர்கள் ஆவர்.

ஊடகங்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 1. 1.0 1.1 "Family: Acanthaceae Juss., nom. cons.". Germplasm Resources Information Network (United States Department of Agriculture). 2003-01-17. http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/family.pl?6. பார்த்த நாள்: 2011-07-29. 
 2. Gove, Philip Babcock, ed. Webster's Third International Dictionary of the English Language Unabridged. Springfield: G. & C. Merriam Co., 1976.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.rsabg.org/acanthaceae/index.php?option=com_content&view=article&id=60&Itemid=62. 
 4. "Index Kewensis". http://ipni.org/ik_blurb.html. 
 5. "Ethnobotany". http://www.rsabg.org/acanthaceae/index.php?option=com_content&view=article&id=65&Itemid=72. 
 6. "The Malayali people of Dharmapuri, India". http://www.rsabg.org/acanthaceae/index.php?option=com_content&view=article&id=67&Itemid=76. 
 7. Awan, A.J., Aslam, M.S (2014). "FAMILY ACANTHACEAE AND GENUS APHELANDRA: ETHNOPHARMACOLOGICAL AND PHYTOCHEMICAL REVIEW.". International Journal of Pharmacy and Pharmaceutical Science 6 (10): 44–55. 
 8. "Acanthaceae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). http://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=34350. பார்த்த நாள்: 2011-07-29. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

 1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு]