முடிவுறுத் தமனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படத்தில் தசை 2க்கான குருதி வழங்கும் தமனி 2 இன் கிளைகளில் இருந்து பெறப்படுகின்றது. தசை 2க்கு குருதியை வழங்கும் கிளை அடைபடும் போது அதனுடன் பின்னப்பட்டுள்ள தமனி 1இன் கிளையினூடாகக் குருதி தமனி 2 இன் கிளைக்கு வந்தடைகின்றது, எனவே ஈற்றில் தசை 2க்கான குருதி விநியோகம் ஓரளவு கிடைக்கின்றது. இது தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி ஆகும்.

முடிவுறுத் தமனி (End Artery) என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி இழையத்துக்கு (திசுவுக்கு) மட்டுமே ஆக்சிசனை எடுத்துச் செல்லும் குருதியை வழங்கும் ஒரேயொரு தமனியைக் குறிக்கும் சொல்லாகும். இத்தமனியில் அடைப்பு ஏற்பட்டால் தமனி வழியாகக் குருதி வழங்கப்படும் பகுதி பாதிப்படையும். பொதுவாக குருதிச்சுற்றோட்டத்தில் ஒரு தமனியில் அடைப்பு ஏற்படும் போது, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தேவையான குருதியை வேறொரு தமனி மூலம் வழங்கப்பெறுகின்றது. இப்படி நிகழ்வதற்கு முக்கியக் காரணம் வெவ்வேறு தமனிகளிடையே உள்ள தமனிப்பின்னல் (Anastomosis) ஆகும்.

உடலின் மிகமுக்கியமான உறுப்புகளுக்கு இந்தத் தமனிப்பின்னல் இன்றியமையாதது ஆகும். மூளை, இதயம் போன்றவற்றிற்கு அவற்றின் முதன்மையான தமனியில் அடைப்பு ஏற்பட்டு, குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது வேறொரு தமனி குருதி வழங்குதலை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றது. இவ் இயக்கத்துக்குத் தமனிகளில் உள்ள அழுத்த வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் அழுத்தம் காரணமாக நாளடைவில் புதிதாகத் திறந்து விடப்பட்ட கிளைத் தமனியின் பருமன் கூடி விரிவடையும். [1]


முடிவுறுத் தமனி என்பது இரண்டு வகைகளைக் கொண்டு உள்ளது.

  1. உடற்கூற்றியல் (மெய்யான) முடிவுறுத் தமனி,
  2. தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி
  • உடற்கூற்றியல் (மெய்யான) முடிவுறுத் தமனி : இது தமனிப்பின்னல் அற்றது, எனவே இத்தமனி அடைபட்டால் குருதி வழங்கல் முற்றிலுமாகத் தடைப்பட்டு விடும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு விழித்திரைக்கு குருதி வழங்கும் விழித்திரை நாடி ஆகும்.
  • தொழிற்பாட்டு முடிவுறுத் தமனி: இது வேறொரு தமனியுடன் தமனிப்பின்னல் உடையது, ஆனாலும் தேவையான அளவு குருதி வழங்கல் தர இயலாதது. மூளை, கல்லீரல், இதயம், மண்ணீரல் போன்றவற்றிற்குரிய தமனிகளின் இறுதிக் கிளைகள் இவற்றுள் அடங்கும்.[2]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிவுறுத்_தமனி&oldid=3580567" இருந்து மீள்விக்கப்பட்டது