முசாபர்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசாபர்நகர் என்பது இந்திய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் முசாபர்நகர் நகர்ப்புற பெருநகர பிராந்தியத்தின் கீழ் உள்ள ஒரு நகரமாகும். உத்தரப்பிரதேச நகராட்சி வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்.சி.ஆர்) ஒரு பகுதியாகும். மேலும் முசாபர்நகர் மாவட்டத்தின் தலைமையகமும் ஆகும். இந்த நகரம் தேசிய ரயில் வலையமைப்புடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மிகவும் வளமான மேல் கங்கா-யமுனா தோவாப் பிராந்தியத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த நகரம் புது தில்லி மற்றும் சகரன்பூருக்கு மிக அருகில் உள்ளது. இது உத்தரபிரதேசத்தின் மிகவும் வளர்ந்த மற்றும் வளமான நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் டெல்லி மும்பை தொழில்துறை நடைபாதை (டி.எம்.ஐ.சி) மற்றும் அமிர்தசரஸ் டெல்லி கொல்கத்தா தொழில்துறை தாழ்வாரம் (ஏ.டி.கே.சி) ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இந்நகரம் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் முக்கிய வணிக, தொழில்துறை மற்றும் கல்வி மையமாகும். 2019 ஆம் ஆண்டு சூலை நிலவரப்படி செல்வி. செல்வ குமாரி முசாபர்நகர் மாவட்ட நீதவான் ஆவார்.[1]

வரலாறு[தொகு]

ஷாஜகானின் ஆட்சியின் போது முகலாய தளபதி சையித் முசாபர் கானின் மகனால் 1633 ஆம் ஆண்டில் சர்வத் என்ற பண்டைய நகரத்தின் அருகே இந்த நகரம் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது ​புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் மறைந்த ஸ்ரீ கேசவ் குப்தா முசாபர்நகர் தொகுதியில் இருந்து முதல் எம்.எல்.ஏ ஆனார். அதைத் தொடர்ந்து முதன்முறையாக முசாபர்நகர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இந்தியக் தேசிய கொடி ஏற்றப்பட்டது.[2]

1901 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியின் போது ஆக்ரா மற்றும் ஓத் ஐக்கிய மாகாணங்களில் மீரட் பிரிவின் மாவட்டமாக இருந்தது.[3]

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான 2013 ஆம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர்.[4]

புவியியல்[தொகு]

இந்தோ-கங்கை சமவெளியின் தோவாப் பகுதியில் முசாபர்நகர் கடல் மட்டத்திலிருந்து 272 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.[5] இது தேசிய தலைநகரான டெல்லியில் இருந்து வடகிழக்கில் 125 கிலோமீற்றர் தொலைவிலும், சண்டிகரில் இருந்து தென்கிழக்கில் 200 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேலும் பிஜ்னோர், மீரட் மற்றும் ஹஸ்தினாபூருக்கு அருகில் உள்ளது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி முசாபர் நகர் நகராட்சியின் மக்கட் தொகை 392,451 ஆகவும்,[6] நகர்ப்புற ஒருங்கிணைப்பு 494,792 மக்கட் தொகையைக் கொண்டிருந்தது.[7] 12.2% வீதமானோர் மக்கள் ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.  மக்களின் சராசரி கல்வியறிவு 80.99% ஆகும். ஆண் கல்வியறிவு 85.82% வீதமும், பெண் கல்வியறிவு 75.65% வீதமும் உள்ளது.[7]

இந்த நகரத்தில் 55.79% வீதம் இந்துக்களும், 41.39% வீதம் முஸ்லிம்களும், 1.5% வீதம் சீக்கியர்களும் , 0.5% வீதம் கிறிஸ்தவர்களும் மற்றும் 2% வீதம் சமணர்களும் உள்ளனர்.[8]

பொருளாதாரம்[தொகு]

சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி மாவட்டத்தில் முக்கியமான தொழில்களாகும். சுற்றியுள்ள விவசாய நடவடிக்கைகளின் விளைவாக, நகரம் வெல்லம் வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது.[9]

முசாபர்நகர் ஒரு தொழிற்துறை நகரமாகும். சர்க்கரை , எஃகு மற்றும் காகிதம் ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன. முசாபர்நகரில் 8 சர்க்கரை ஆலைகள் உள்ளன. பிராந்திய மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இண்டிகஸ் அனலிட்டிக்ஸ் படி முசாபர்நகர் உத்தரபிரதேசத்தில் மிக உயர்ந்த விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், உ.பி.யின் மிகப்பெரிய களஞ்சியத்தையும் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபர்நகர்&oldid=3484496" இருந்து மீள்விக்கப்பட்டது