உள்ளடக்கத்துக்குச் செல்

முகிழ் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகிழ் மீன் (protostar) என்பது மூலக்கூறு மேகம் என்ற நட்சத்திரம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய நட்சத்திரம் ஆகும். விண்மீன் படிமலர்ச்சியின் முதல் நிகழ்வே முகிழ் மீன் ஆகும்.[1] ஒரு சூரிய நிறை கொண்ட முகிழ் மீன் உருவாக 1,000,000 ஆண்டுகள் ஆகும். விண்மீன் படிமலர்ச்சி துவங்கும் போது மூலக்கூறு மேகம், தனது ஈர்ப்பு விசையால் சிதைகிறது. பின் உள் நோக்கி அழுத்தும் வாயுவால் முகிழ் மீன் வெடித்து, கண்ணுக்குப் புலனாகும் முன்-தலைவரிசை நட்சத்திரமாகிறது. பின்னர் மேலும் சுருங்கி தலைவரிசை நட்சத்திரமாகிறது.

வரலாறு

[தொகு]

1966 ஆம் ஆண்டு சுசிரோ அயாசி முகிழ் மீனின் வடிவமைப்பை முதன் முதலில் பரிந்துரைத்தார்.[2] ஆரம்ப காலங்களில் அதன் வடிவம் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி, ஒரே நிறை கொண்ட நட்சத்திரத்தை விட முகிழ் மீன் பெரிய அளவில் இருந்தது.[3][4][5]

முகிழ் மீனின் படிப்படியான வளர்ச்சி

[தொகு]
கார்மா-7 (CARMA-7) என்ற முகிழ் மீன். அதன் தாரைகள், பூவியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படுகிறது.[6]

அதிக அழுத்தமுள்ள உள்மையப் பகுதியைக் கொண்ட மூலக்கூறு மேகத்திலிருந்து நட்சத்திரங்கள் உருவாகின்றன.[7] ஒவ்வொரு அழுத்தமுள்ள உள்மையப் பகுதியில் உருவாகும் ஈர்ப்பு விசை மூலக்கூறு மேகத்தைச் சுருக்குகிறது, அதே நேரத்தில் வளிம அழுத்தம் மற்றும் காந்த அழுத்தம் மூலக்கூறு மேகத்தை விரிவடையச் செய்கிறது. ஆரம்பத்தில் இவற்றிடையே ஒரு சமநிலை உருவாகிறது. சுற்றியுள்ள மேகங்களைச் சிறுகச்சிறுகச்சேர்த்து, பெரிய நிறையை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஏற்படும் அதீத அழுத்தத்தால் சிதைவடைகிறது.[8] வண்ணப்பட்டை அளவாய்வியல் சார்ந்த உய்த்துணர்வின் மூலம் பார்க்கும் போது மூலக்கூறு மேகங்கள் உள் நோக்கி சுருங்குவதைக் காட்டுகிறது. வெளி நோக்கி சிதைவடையும் மூலக்கூறு மேகங்கள் இது வரை கண்டறியப்படவில்லை.[9]

மையப்பகுதியிலுள்ள வாயு சிதைவடைந்து குறைந்த நிறையுள்ள முகிழ் மீனை உருவாக்குகிறது. அதன் பின் முன்-கோளக வட்டு (protoplanetary disk) உருவாக்கப்பட்டு அதை சுற்றி வருகிறது. சிதைவடைதல் தொடரும் போது, அதிகமாகும் வாயு அடர்த்தியால், வளைவுந்தம் அழிவின்மை விதிப்படி, கோளக வட்டுகள், நட்சத்திரங்களை விட அதிக தாக்கத்தைப் பெறுகின்றன. அதனால் முகிழ்மீனைச் சுற்ற ஆரம்பிக்கின்றன.

எச் பி சி 1 (HBC 1) என்ற முன்-தலைவரிசையைச் சேர்ந்த இளைய நட்சத்திரம்.[10]

முகிழ் மீனின் வெளிப்புறத்தில், உள் மையப்பகுதியில் விழுந்து வெளிவரும் அதிர்ச்சியுற்ற வாயுக்கள் காணப்படுகிறது. அதன் ஒளிக்கோளம் முன்-தலைவரிசை நட்சத்திரம் அல்லது தலைவரிசை நட்சத்திரம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. முகிழ் மீனின் உள் மைய வெப்பநிலை, நட்சத்திரங்களின் வெப்பநிலையை விட மிகக் குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம், அதன் மையப்பகுதியிலுள்ள நீரியம் அணுக்கரு இணைவைத் தொடங்கவில்லை. கருத்தியல் கொள்கைப்படி, ஐதரசன் அயனியான தியூட்டிரியம் அணுக்கரு இணைவுக்குட்பட்டு, ஈலியம்-3 மாற்றமடைகிறது. அணுக்கரு இணைவால் ஏற்படும் வெப்பம், முகிழ் மீனை விரிவடையச் செய்கிறது. இவ் வெப்பத்தின் அளவே, முன்-தலைவரிசை நட்சத்திரத்தின் உருவளவை நிர்ணயிக்கிறது.[11]

பொதுவாக நட்சத்திரங்களின் ஆற்றல், அதன் மையப்குதியில் நடைபெறும் அணுக்கரு இணைவால் பெறப்படுகிறது. ஆனால் முகிழ் மீனின் ஆற்றல், அதன் மேற்பரப்பு மற்றும் சுற்றியுள்ள வட்டுகளில் ஏற்படும் அதிர்ச்சிகள் உண்டாக்கும் கதிர்வீசலால் உண்டாகிறது. இந்தக் கதிர்வீசல் மீனிடைத்தூசுப் பகுதியை மையப்பகுதியை நோக்கி நகரச் செய்கிறது. இத் தூசு, தன் மீது விழும் அனைத்து ஒளியணுக்களையும் உறிஞ்சிக் கொண்டு, அதிக அலை நீளம் கொண்ட அலைகளை வெளிவிடுகிறது. முகிழ் மீன்கள் ஒளி அலை நீளங்களை கண்டறியும் கருவிகள் மூலம் கண்டறியப்படுவதில்லை. அதனால் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படத்தில் வைக்கப்படுவதில்லை.

முகிழ் மீன்களின் கதிர்வீசலில், அகச்சிவப்புக் கதிர் மற்றும் மில்லி மீட்டர் அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. மூலக்கூறு மேகங்களில் அதிக அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. இவை பொதுவாக, வகை 0 அல்லது வகை 1 முகிழ் மீன்களாக வகைப்படுத்தப்படுகின்றன.[12][13]

இளைய நட்சத்திரங்களின் வகைகள்

[தொகு]
வகை வெளிவிடும் அலைகள் உருவாகும் காலம் (ஆண்டுகள்)
0 மில்லி மீட்டர் 104
I தொலை-அகச்சிவப்பு 105
II அருகு-அகச்சிவப்பு 106
III கண்ணுக்குப் புலனாகும் கதிர் 107[14]

படத்தொகுப்பு

[தொகு]
முகிழ் மீன் V1647 ஒரியானிசு (Orionis மற்றும் எக்சு கதிர்களை வெளிவிடும் காணொலி (2004).
முகிழ் மீன் வெடிப்பு - எச்.ஒ.பி.சு- 383 (HOPS 383) (2015).
ஒவியரின் கற்பனையில் பாக் குளோபுலின் (Bok globule) உள்ளேயுள்ள ஒரு முகிழ் மீன்.
அதிக முகிழ் மீன்களைக் கொண்ட ஆர்.சி.டபில்யூ 38 (RCW 38) உடுக்கூட்டங்கள் (Stellar cluster).

மேலும் பார்க்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Protostars
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stahler, S. W.; Palla, F. (2004). The Formation of Stars. Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-40559-3. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  2. Hayashi, C. (1966). "The Evolution of Protostars". Annual Review of Astronomy and Astrophysics 4: 171. doi:10.1146/annurev.aa.04.090166.001131. Bibcode: 1966ARA&A...4..171H. 
  3. Larson, R. B. (1969). "Numerical Calculations of the Dynamics of a Collapsing Protostar". Monthly Notices of the Royal Astronomical Society 145: 271. doi:10.1093/mnras/145.3.271. Bibcode: 1969MNRAS.145..271L. https://archive.org/details/sim_monthly-notices-of-the-royal-astronomical-society_1969_145_3/page/271. 
  4. Winkler, K.-H. A.; Newman, M. J. (1980). "Formation of Solar-Type Stars in Spherical Symmetry: I. The Key Role of the Accretion Shock". Astrophysical Journal 236: 201. doi:10.1086/157734. Bibcode: 1980ApJ...236..201W. 
  5. Stahler, S. W., Shu, F. H., and Taam, R. E. (1980). "The Evolution of Protostars: I. Global Formulation and Results". Astrophysical Journal 241: 637. doi:10.1086/158377. Bibcode: 1980ApJ...241..637S. 
  6. "Infant Star's First Steps". பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  7. Myers, P. C.; Benson, P. J. (1983). "Dense Cores in Dark Clouds: II. NH3 Observations and Star Formation". Astrophysical Journal 266: 309. doi:10.1086/160780. Bibcode: 1983ApJ...266..309M. 
  8. Shu, F. H. (1977). "Self-Similar Collapse of Isothermal Spheres and Star Formation". Astrophysical Journal 214: 488. doi:10.1086/155274. Bibcode: 1977ApJ...214..488S. 
  9. Evans, N. J., Lee, J.-E., Rawlings, J. M. C., and Choi, M. (2005). "B335 - A Laboratory for Astrochemistry in a Collapsing Cloud". Astrophysical Journal 626: 919. doi:10.1086/430295. Bibcode: 2005ApJ...626..919E. 
  10. "A diamond in the dust". பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  11. Stahler, S. W. (1988). "Deuterium and the Stellar Birthline". Astrophysical Journal 332: 804. doi:10.1086/166694. Bibcode: 1988ApJ...332..804S. 
  12. Adams, F. C., Lada, C. J., and Shu, F. H. (1987). "The Spectral Evolution of Young Stellar Objects". Astrophysical Journal 312: 788. doi:10.1086/164924. Bibcode: 1987ApJ...312..788A. 
  13. Andre, P, Ward-Thompson, D. and Barsony, M. (1993). "Submillimeter Continuum Observations of rho Ophiuchi A: The Candidate Protostar VLA 1623 and Prestellar Clumps". Astrophysical Journal 406: 122. doi:10.1086/172425. Bibcode: 1993ApJ...406..122A. 
  14. "IMPRS" (PDF). www.solar-system-school.de.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிழ்_மீன்&oldid=3716654" இலிருந்து மீள்விக்கப்பட்டது