மில்கா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மில்கா சிங்
Milkha Singh.jpg
2012 இல், சண்டிகர் குழிப்பந்தாட்ட மைதானத்தில் மில்கா சிங்.
பிறப்பு8 அக்டோபர் 1935 (1935-10-08) (அகவை 85)
லாயல்பூர், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்பறக்கும் சீக்கியர்
பணிதடகள விளையாட்டாளர்
அறியப்படுவதுபத்மஸ்ரீ
சமயம்சீக்கியம்
வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான தட கள விளையாட்டுக்கள்
 இந்தியா
பிரித்தானியப் பேரரசு - காமன்வெல்த் விளையாட்டுக்கள்
தங்கம் 1958 காமன்வெல்த் விளையாட்டுக்கள், கார்டிஃப் 440 கெஜம்
ஆசிய விளையாட்டுகள்
தங்கம் 1958 ஆசிய விளையாட்டுகள், டோக்கியோ 200 மீட்டர்
தங்கம் 1958 ஆசிய விளையாட்டுகள், டோக்கியோ 400 மீட்டர்
வெள்ளி 1962 ஆசிய விளையாட்டுகள், ஜகார்த்தா 400 மீட்டர்

மில்கா சிங் (Milkha Singh : அக்டோபர் 8, 1935) இந்திய தடகள விளையாட்டு வீரர். 1958 ஆம் ஆண்டு கார்டிப்பி்ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங். ஒலிம்பிக் தடகளத்தில் 1960 ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 1964 இல் டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் மில்கா சிங்.[1] மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். இத்தாலியின் தலைநகர் ரோமில் 1960ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். 400 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற இவர் நான்காவதாக (45.6 வினாடி)வந்தார். குறைந்த நேரம் ( 0.1 வினாடி) வித்தியாசம் என்பதால் வெண்கலப்பதக்கம் யாருக்கு என்ற அறிவிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.‘போட்டோ பினிஷ்’ மூலம் வெற்றியாளர் நிர்ணயிக்கப்பட்டதில் தென் ஆப்ரிக்காவின் மால்கம் ஸ்பென்ஸ் 3வது இடத்தை பிடித்தார். நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை மில்க்கா சிங் பறிகொடுத்தார்,[2]. இவரது குடும்பத்தினரும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களே. மனைவி நிர்மல்கவுர், சர்வதேச கைப்பந்தாட்ட வீராங்கனை. மகன் ஜீவ் மில்கா சிங், மிகச்சிறந்த கோல்ப் வீரராகத் திகழ்கிறார்.

வாழ்க்கை[தொகு]

இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கிமீ நடந்து சென்று கல்வி பயின்றார். 15 வயதில், இந்தியப் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள். கூடப் பிறந்த மூன்று பேரையும் கலவரத்தில் இழந்தபோது செய்வதறியாமல் தவித்தார். 'ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' என்று இறக்கும் தறுவாயில் தந்தை சொன்னதைக் கேட்டு பதைபதைத்துப் போனார் மில்கா சிங். அந்தச் சமயம், கலவரக்காரர்கள், கண்ணில் படும் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், அங்கிருந்து டெல்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தயமொன்றில் ஜெயித்தபோதுதான் தன் திறமையை அறிந்தார் மில்கா.

சாதனைகள்[தொகு]

1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட மில்கா சிங், 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார். அதன்பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார் மில்கா சிங். ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம். காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான். 1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் வெர்ஸஸ் மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங். பரிசளிப்பு விழாவில், 'நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்' என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான் அவருக்கு 'ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)' என்கிற பட்டமளிக்கப்பட்டது. 'பாகிஸ்தானில் ஓடும்போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது' என்கிறார் மில்கா சிங்.

திரைப்படம்[தொகு]

மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, 'ரேஸ் ஆஃப் மை லைஃப்' என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல ஹிந்தி தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கிடம், படத்துக்கான அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால், மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் வீரருமான ஜீவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு, 'ரங் தே பசந்தி' படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங்.

விருதுகள், பதக்கங்கள்[தொகு]

  • 1958 - ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 200 மீ. மற்றும் 400 மீ. க்கான தங்கப்பதக்கம்.
  • 1962 - ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 400 மீ. க்கான தங்கப்பதக்கம்.
  • 1959 - இந்தியாவின் பத்மஸ்ரீ விருது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Olympics". sports-reference. பார்த்த நாள் 15 May 2012.
  2. "ROMA 1960 400m Finals".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்கா_சிங்&oldid=3045430" இருந்து மீள்விக்கப்பட்டது