உள்ளடக்கத்துக்குச் செல்

மிர்பூர் காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீர்பூர் காஸ் என்பது பாகித்தான் நாட்டின் மிர்பூர் காஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள மீர்பூர் காஸ் பிரிவின் பிரதேச தலைமையகமாகும். முன்பு சுதேச அரசின் தலைநகராக இருந்தது. மிர்பூர் காஸ் சிந்து மாகாணத்தின் 4 வது பெரிய நகரமாகவும், பாகிஸ்தானின் 33 வது பெரிய நகரமாகவும் உள்ளது. பாகிஸ்தானின் 2017 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மிர்பூர் காஸில் 233,916 மக்கள் வசிக்கின்றனர்ர. மிர்பூர் காஸ் மாம்பழ சாகுபடிக்கு புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மாம்பழங்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பாரம்பரிய மாம்பழ திருவிழா நடைப்பெறுகின்றது.[1] இந்நகரத்தில் பிரசித்தி பெற்ற இடங்கள் காமா அரங்கம், மொகஞ்சாதோரோ (பழைய வரலாற்று இடம்) கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் என்பனவாகும்.

புவியியல்

[தொகு]

மிர்பூர் காஸ் சிந்துவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ஹைதராபாத்திற்கு கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஹைதராபாத்திற்கு நான்கு வழி கார்கிவே நெடுஞ்சாலை மற்றும் ரயில் மூலமாக வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் என்120 நெடுஞ்சாலை மூலம் உமர்கோட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. கராச்சி மீர்பூர் காஸிலிருந்து தென்மேற்கே 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிர்பூர் காஸ் இந்திய எல்லை நகரிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

மீர்பூர் காஸில் உள்ள மக்கள் சிந்தி மொழியைப் பேசுகிறார்கள். பெரும்பாலான மக்கள் உருது மொழியையும் பேசுகிறார்கள். 67% வீதத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்களும் மற்றும் 33% வீதமான இந்துக்கள் இங்கு வாழ்கின்றனர். [2]18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல முஸ்லீம் குடும்பங்கள் கிழக்கு பஞ்சாபிலிருந்து இப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன. இங்கு குடியேறிய மிகப்பெரிய முஸ்லீம் சமூகம் அரெய்ன் சமூகமாகும். கிழக்கு பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஃபெரோஸ்பூர், அம்பாலா, பாட்டியாலா மற்றும் ஜலந்தர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரேனியர்கள் இங்கு நிரந்தரமாக குடியேறினர். மீர்பூர் காஸுக்கு அருகில் குருத்வாரா பெஹ்லி பட்ஷாஹி என்ற சீக்கிய கோயில் அமைந்துள்ளது. சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் என்பவர் இங்கு வந்துள்ளதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[3]

பொருளாதாரம்

[தொகு]

மிர்புர்காஸில் ஒரு சிறிய தொழிற்துறை பகுதி இருந்தாலும், எந்தவொரு தொழிற்துறையும் பெரியளவில் இங்கு செயற்படவில்லை. நகரத்தில் நான்கு சர்க்கரை ஆலைகள், சில பருத்தி விதை நீக்கும் ஆலைகள், மற்றும் சமையல் எண்ணெய் ஆலைகள் என்பன அமைந்துள்ளன.[4]

மாவட்டத்தின் மிகவும் வளமான நிலம் கோதுமை, வெங்காயம், கரும்பு, பருத்தி, மிளகாய் மற்றும் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது.[5] 1900 ஆண்டுகளில் ஜாம்ராவ் கால்வாய் கட்டப்பட்ட பின்னர் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் புத்துயிர் பெற்றது. பின்னர், கரும்பு சாகுபடி, முக்கியமாக தானியங்கள், பருத்தி பொருட்கள், துணிகள், மற்றும் சர்க்கரை என்பன உற்பத்தி செய்யப்பட்டன. வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், மிர்புர்காஸ் நகரத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் சிறந்த பருத்தி உற்பத்தியாளராக திகழ்ந்தனர். மேலும் நகரத்தின் வருமானத்தின் பெரும்பகுதி பருத்தி விவசாயத்தைச் சார்ந்திருந்தது.

இருப்பினும் தற்சமயம் இந்நகரமானது மாம்பழ உற்பத்தியில் நன்கு அறியப்படுகிறது. நகரத்தில் 252 வகையான மாம்பழங்கள் விளைவதாக கருதப்படுகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமான வகை சிந்துரி அம்ப், (சிந்துவின் மாம்பழம்) என்பதாகும். உலக புகழ்பெற்ற விளைபொருட்களைக் காண்பிக்கும் வருடாந்திர அறுவடை விழாவில் இந்நகரத்தினால் மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மீர்பூர் காஸ் விவசாயத்திற்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஏற்ற வளமான நிலமாகும்.[4]லெட் வா போன்ற நீர்ப்பாசன கால்வாய்கள் வழியாக சிந்துவுடன் இணைக்கப்பட்டுள்ளதால், மிர்பூர் காஸ் பல ஆண்டுகளாக விவசாய நன்மைகளைப் பெற்றுள்ளது. வாழைப்பழங்கள் இப்பகுதியில் பரவலாக பயிரிடப்படுகின்றன. மேலும் இங்கு அதிகளவிலான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Mango festival continues in Mirpurkhas". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
  2. "Pakistani Hindus are a resilient minority too". Times of India Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
  3. "Historical Gurdwaras in Pakistan". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. 4.0 4.1 4.2 DRAFT DISTRICT DEVELOPMENT PROFILE/PLANFOR DISTRICT MIRPURKHAS. SINDH REGIONAL PLAN ORGANISATION. 1998.
  5. "SOME IMPORTANT MEDICINAL PLANTS ASSOCIATED WITH THE VEGETATION IN DISTRICT MIRPURKHAS, SINDH". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்_காஸ்&oldid=2867082" இலிருந்து மீள்விக்கப்பட்டது