மிருசுவில் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிருசுவில் படுகொலைகள்
இடம்மிருசுவில், யாழ்ப்பாணம், இலங்கை
நாள்திசம்பர் 20, 2000
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழ்ப் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
கத்திக்குத்து
ஆயுதம்கத்தி
இறப்பு(கள்)8
தாக்கியோர்இலங்கை இராணுவம்

மிருசுவில் படுகொலைகள்[1] யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மிருசுவில் கிராமத்தில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள் குழந்தைகள் உட்பட எட்டு தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்[1][2][3][4].

நிகழ்வு[தொகு]

தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களினால் 2000 திசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்[1][3].

மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன[3]. அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது சர்ச்சைக்குரிய பெண்ணின் சடலம் பற்றியும் சாவகச்சேரி நீதிமன்றில் சாட்சிகள் வாக்கு மூலமளித்திருந்தனர். எனினும் நீதிபதி முன்னிலையில் தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்த போதும் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

மாவட்ட வைத்திய அதிகாரி மரு. சி. கதிரவேற்பிள்ளையின் சாட்சியப்படி, கொலை செய்யப்பட்டவர்களின் கழுத்து வெட்டப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர்[1][3]. கொல்லப்பட்டவர்கள் அனைவரு 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்[5]. இதனை அடுத்து நடந்த விசாரணைகளை அடுத்து ஐந்து இராணுவத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதக் கைது, சித்திரவதை, படுகொலை, மற்றும் புதைகுழிகளில் புதைத்தமை உட்படப் 17 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன[6].

தாக்கங்கள்[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அன்றைய அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில், பெண் ஒருவரின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் பல உடல்கள் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டிருந்தார். மிருசுவில் பகுதியில் புதைகுழிகளைத் தேட உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்[3].

மனித உரிமைக் குழுக்கள் பல இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை அடுத்து 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2002, மே 20]] இல் விசாரனைக்கு எடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை 2002 நவம்பர் 27 இல் சட்டமா அதிபர் நியமித்தார்[4].

தொடர் விசாரணை[தொகு]

ஜூரிகள் எவரும் இல்லாமல் இவ்வழக்கை விசாரிப்பதற்கு அரசு தீர்மானித்தது[7][8].

இவ்வழக்கு பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் 2011, ஏப்ரல் 28 இல் சென்று பார்வையிட்டது. கொலைகள் நடைபெற்ற இடம், கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருந்த இடம், அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை இந்த நீதிபதிகள் மூன்று பேரும் பார்வையிட்டு அதற்கான விபரக் குறிப்புக்களைப் பதிவு செய்தனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகளுமே மிருசுவில் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நடத்திய அப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், சந்தேக நபர்கள் மீதான அடையாள அணிவகுப்பை நடத்திய அப்போதைய பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோர் நீதிபதிகள் குழுவினருக்கு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை அடையாளம் காட்டினர். நீதிபதிகள் குழுவினருடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் மிருசுவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்[9].

தீர்ப்பு[தொகு]

எட்டு தமிழர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, இலங்கைப் படைத்துறையைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்பவருக்கு கொழும்பு நீதிமன்றம் 2015 சூன் 25 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.[10] இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரை போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "Mirusuvil massacre case". பிபிசி.com. 2007-05-09. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/03/050306_mirusuvil.shtml. 
 2. "Child soldiers:Understanding the context" (PDF). BMJ.com (2007-05-06). மூல முகவரியிலிருந்து 2007-10-10 அன்று பரணிடப்பட்டது.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Mirusuvil mass graves". British Refugee Council: Sri Lanka Monitor. 2007-05-09. http://brcslproject.gn.apc.org/slmonitor/december2000/miru.html. 
 4. 4.0 4.1 "Activities of Center for Human Rights Development". chrdsrilanka.org (2007-05-09).
 5. "Massacre victims died of stab wounds - Medical Officer". Tamilnet. திசம்பர் 27, 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5683. 
 6. "New panel to probe Mirusuvil massacre". பிபிசி.com (2007-05-09).
 7. "No jury in Mirusuvil case". Tamilnet. 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7212. 
 8. "Main witness in the Mirusuvil massacre case testifies". Dailymirror.lk. 2007-05-10. http://www.dailymirror.lk/2003/02/15/News/1.html. 
 9. "மிருசுவில் வழக்கு: நேரடி ஆய்வு". பிபிசி. 28 ஏப்ரல் 2011. http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110428_mirusuvilcase.shtml. 
 10. "8 தமிழர்களை கொன்றராணுவ வீரனுக்கு மரண தண்டனை". மாலைமலர் (25 சூன் 2015). பார்த்த நாள் 25 சூன் 2015.
 11. "எட்டுபேரை கொன்ற இலங்கை இராணுவ சிப்பாய்க்கு மரணதண்டனை". பிபிசி (24 சூன் 2015). பார்த்த நாள் 25 சூன் 2015.
 12. "யாழ். மிருசுவில் 8 பேர் படுகொலை இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை". தினகரன் (26 சூன் 2015). பார்த்த நாள் 26 சூன் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]