மின்மீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்மலங்கு

சில வகை மீன்களை தொட்டால் அவை மின் அதிர்ச்சியைக் கொடுக்கும். இவை மின்மீன்கள் (Electric Fish) எனப்படும்.

இயல்பு[தொகு]

இம்மீன்கள் பகை உயிர்களினின்றும் மின் அதிர்ச்சி மூலம் தம்மைக் காத்துக் கொள்கின்றன. தமக்கு இரையாகக்கூடிய உயிரினங்களைப் பிடிக்கவும் இவை மின் அதிர்ச்சியைப் பயன்படுத்துகின்றன. இவ்வதிர்ச்சியினால் அவற்றை நினைவிழக்கச் செய்தோ, கொன்றோ தின்பதுண்டு.

வகைகள்[தொகு]

மின்சாரத்தை உண்டாக்கும் ஆற்றலுடைய இத்தகைய மீன்களில் சுமார் 50 வகைகள் உள்ளன. மின்மீன்களில முதன்மையானவை மின்மலங்கு (Electric Eel), மின்திருக்கை (Torpedo or Ray Fish), மின்கெளிறு (Cat Fish) முதலிய வகைகளாகும்.

மின்மலங்கு[தொகு]

மின்மலங்கு (Electric Eel) தென் அமெரிக்காவில் அமேசான், அரினாக்கோ ஆகிய ஆறுகளிலும், பிரேசில், கயானா ஆகிய பகுதிகளில் சதுப்புக் குட்டைகளிலும் வாழ்கிறது. இது சுமார் இரண்டு மீட்டர் நீளமிருக்கும். உடலின் நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு வால். வால் நெடுகிலும் பக்கத் தசைகள் மின்னுறுப்புகளாக மாறி இருக்கின்றன. மின்மீன்களில் மிகக்கடும் அதிர்ச்சியைத் தரக்கூடியது மின்மலங்குதான். இதன் மின்திறன் ஒரு குதிரையைக்கூடக் கலங்கச் செய்துவிடும். மனிதனுக்கும் பலத்த அதிர்ச்சி ஏற்படும்.

மின்திருக்கை[தொகு]

மின்திருக்கை (Torpedo or Ray Fish) அட்லாண்டிக் பெருங்கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், நடுத்தரைக் கடலிலும் காணப்படுகிறது. இது ஒன்றரை மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் உள்ளது. உடல் தட்டையாக இருக்கும். வட்டமான உடம்பின் இரு பக்கங்களிலும் மின்னுறுப்புகள் உள்ளன. தசை இழையங்கள் இவ்வாறு மாறியுள்ளன. மேல்தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் தேனடைகள் போல் மின்னுறுப்புகள் காணப்படும். மின்திருக்கை தன் இரையைப் பற்ற இந்த மிந்திறனைப் பயன்படுத்துகிறது.

மின்கெளிறு[தொகு]

மின்கெளிறு (Cat Fish) ஆப்பிரிக்காவில் நைல் ஆற்றிலும், அங்குள்ள மற்ற ஆறுகளிலும் ஏரிகளிலும் காணப்படுகிறது. இது சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ளது. இதைப் பூனை மீன் என்றும் சொல்வார்கள். அரேபியர் இதை உணவாகக் கொள்கிறார்கள். தோலுக்கு அடியில் ஓர் உறை போன்று உடல் நெடுகிலும் மின்சார உறுப்புகள் உள்ளன.

விண்மீன்நோக்கி[தொகு]

விண்மீன்நோக்கி (Star Gazer) என்னும் மீனின் மின்னுறுப்புகள் தலையில் உள்ளன. இந்த மீன் சுமார் 30 சென்டி மீட்டர் நீளமுள்ளது. இது மணலில் புதைந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
  • Alves-Gomes, J (2001). "The evolution of electroreception and bioelectrogenesis in teleost fish: a phylogenietic perspective". Journal of Fish Biology. 58 (6): 1489–1511. doi:10.1111/j.1095-8649.2001.tb02307.x.
  • Albert, J. S.; Crampton, W. G. R. Electroreception and electrogenesis. pp. 431–472. In: Evans, David H.; Claiborne, James B., eds. (2006). The Physiology of Fishes (3rd ed.). CRC Press. ISBN 978-0-8493-2022-4.
  • Nelson, Mark. "What IS an electric fish?". Retrieved 10 August 2014.
  • Kramer, Bernd (2008). "Electric Organ Discharge". In Marc D. Binder, Nobutaka Hirokawa, Uwe Windhorst (eds.). Encyclopedia of Neuroscience. Berlin, Heidelberg: Springer. pp. 1050–1056. ISBN 978-3-540-23735-8. Retrieved 2012-03-25.
  • Von der Emde, G. (1999). "Active electrolocation of objects in weakly electric fish". Journal of experimental biology, 202 (10): 1205–1215. Full text
  • Choi, Charles. "Electric Fish Advertise Their Bodies". Retrieved 10 August 2014.
  • Bullock, Theodore Holmes; Heiligenberg, Walter, eds. (1986). Electroreception. Wiley.
  • Heiligenberg, Walter (1991) Neural Nets in Electric Fish Cambridge: MIT Press. ISBN 978-0-262-08203-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மீன்கள்&oldid=3877984" இலிருந்து மீள்விக்கப்பட்டது