மின்னணு ஆளுகை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்னணு ஆளுகை (Electronic governance or e-governance) என்பது அரசு சேவைகள், தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு பரிவர்த்தனைகள், அரசாங்கத்திற்கு இடையில் தனித்து நிற்கும் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடு ஆகும். அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையே (G2C), அரசாங்கத்திற்கும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே (G2B), இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கிடையே, அல்லது மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே (G2G) மற்றும் அரசாங்கத்த்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே (G2E) நடைபெறும் நடவடிக்கைகள் மின்னனு ஆளுகையின் மூலம் நடைபெறுவதாகும்.[1] இதனால் அரசு சேவைகள் குறித்த நேரத்தில் கிடைப்பதுடன், நேர விரயம் தவிர்க்கப்பட்டு, காகிதப் பயன்பாடு குறைவதுடன் வெளிப்டைத் தன்மையும் கூடுகிறது.

குறிப்பாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கடவுச் சீட்டு, பிறப்புச் சான்றிதழ், சொத்தின் மீதான வில்லக சான்றிதழ், விளைநிலம் மற்றும் மனைக்கான பட்டா & சிட்டா சான்றிதழ்கள், வருமான வரி, சரக்கு & சேவை வரி, ஊதியம், ஓய்வூதியம், வருகால வைப்பு நிதி எடுத்தல் போன்றவைகள் அரசு, குடிமக்களுக்கு மின்னணு ஆளுகை மூலம் வழங்குவதால், நேர விரயம் தவிர்ப்பதுடன், காகிதப் பயன்பாடு இல்லாது போகிறது. மேலும் இந்திய அரசுத் தலைவர்கள், மாநில அரசுத் தலைவர்களுடனும், மாநில அரசின் முதலமைச்சர் மற்றும் தலைமை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் & காவல்துறை அதிகாரிகளுடனும் காணொலி கூட்டம் நடத்துவதன் மூலம் உடனடியாக செய்திகள் பரிமாறிக் கொள்ளவும், அரசின் கொள்கை முடிவுகள் விரைவாக நடைமுறைப்படுத்த முடிகிறது.

கணினி & திறன்பேசி கையாளத்தெரியாத பொதுமக்களின் மின்னணு ஆளுகை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுலகங்களில் இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த இ-சேவை மையங்களில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மின்னணு ஆளுகை வழங்குகிறது [2]

மின்னணு ஆளுகையின் நன்மைகள்[தொகு]

  • வேகம்: தொழில்நுட்பம், தகவல் தொடர்புகளை விரைவாக அனுப்பப் பயன்படுகிறது. இணையம் மற்றும் திறன்பேசிகள் அரசின் தரவுகளை எளிதாகவும், வேகமாகவும் உரியவர்களுக்கு அனுப்ப முடிகிறது.
  • செலவினங்கள் மிச்சப்படுதல்: காகிதப் பயன்பாடு, அஞ்சல் செலவு மின்னணு ஆளுகையின் மூலம் பெருந்தொகை மிச்சமாகிறது.
  • வெளிப்படைத்தன்னமை: மின்னணு ஆளுகை பயன்பாட்டின் மூலம் அனைத்து அரசின் நடவடிக்கைகளும் வெளிப்ப்டைத்தன்மையாக்குகிறது. அனைத்து அரசாங்க தகவல்களையும் இணையத்தில் பதிவேற்ற முடிகிறது. குடிமக்கள் எந்த தகவலை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், இணையம் அல்லது திறன்பேசி மூலம் அணுக முடிகிறது.
  • நம்பகத்தன்மை:அரசாங்கத்தின் செயல்பாடுகள் மின்னணு ஆளுகையின் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்தவுடன், அரசின் சில குறைபாடான செயல்களுக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பலாம். எனவே மின்னணு ஆளுகையின் மூலம் அரசு அல்லது பொதுமக்களின் நடவடிக்கைகள் நம்பகத்தன்மையாக அமைகிறது.

மின்னணு ஆளுகையின் குறைபாடுகள்[தொகு]

  • நேரடித் தொடர்பில்லாமை: மின்-ஆளுமையின் முக்கிய தீமை, ஒருவருக்கொருவர் நேரடித் தொடர்பு கொள்ளாதது ஆகும். ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது என்பது பலரும் முக்கியமானதாகக் கருதும் தகவல்தொடர்புக்கான ஒரு அம்சமாகும். இது மின்னணு ஆளுகையில் இல்லாதிருப்பதாகும்.
  • உயர் கட்டமைப்புச் செலவு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள்: தொழில்நுட்பம் அதன் தீமைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, மின்னணு கட்டமைப்பு செலவு மிக அதிகமாக உள்ளது மற்றும் இயந்திரங்களை தவறாமல் பராமரிக்க வேண்டும். பெரும்பாலும், கணினிகள் மற்றும் இணையம் கூட பழுதுபட்டு, அரசாங்க வேலை மற்றும் சேவைகளில் தடங்கல் ஏற்படலாம்.
  • கல்வியறிவு: இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் கல்வியறிவற்றவர்களாக இருப்பதால், கணினிகள் மற்றும் திறன்பேசிகளை இயக்க இயலாது உள்ளது. இதனால் அவர்கள் மின்னணு ஆளுகையை அணுகுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் மிகவும் கடினமாக உள்ளது.
  • கணினி குற்றம் (சைபர் கிரைம்) / தனிப்பட்ட தகவல்களின் கசிவு: அரசால் சேமிக்கப்படும் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் அபாயம் எப்போதும் உள்ளது. சைபர் கிரைம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினை, தரவு மீறல் என்பது மக்களை ஆளும் அரசாங்கத்தின் திறனைப் பற்றிய நம்பிக்கையை இழக்கச் செய்யும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. E-governance in India
  2. About e-GOVERNANCE DIVISION

வெளி இணைப்புகள்[தொகு]