மின்தூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மின்தூண்டி
Electronic component inductors.jpg
தாழ் பெறுமானமுடைய மின்தூண்டிகளின் தொகுதி
வகை செயலறு கருவி
செயல் கோட்பாடு மின்காந்தத் தூண்டல்
முதல் தயாரிப்பு மைக்கல் பரடே (1831)
இலத்திரனியல் குறியீடு
Inductor.svg
அச்சு முனை மின்தூண்டிகள் (100 µH)

மின்தூண்டி என்பது ஒரு செயலறு நிலை இருமுனை மின் சாதனமாகும். மின்னோட்டம் இதனூடாகப் பாயும்போது இது மின்சக்தியை காந்தப்புல வடிவில் சேமித்து வைக்கும்.[1] கம்பி போன்ற மின்கடத்தி ஒன்றை சுருளாகச் சுற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படும்.

மின்தூண்டியொன்றினூடான மின்னோட்டம் நேரத்தோடு மாறுகையில், மின்தூண்டியில் உருவாகும் மாறும் காந்தப்புலமானது பரடேயின் தூண்டல் விதிப்படி ஒரு மின்னழுத்தத்தைத் தோற்றுவிக்கும். லென்சின் விதிப்படி தூண்டிய மின்னியக்கவிசையானது அதனை உருவாக்கும் மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக இருக்கும். இதன் விளைவாக, மின்தூண்டியானது தன்னூடு செல்லும் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும்.

மின்தூண்டியானது அதன் மின்தூண்டல் அளவினால் வகைகுறிக்கப்படும். இது மின்தூண்டியால் உருவாக்கப்படும் மின்னழுத்தத்துக்கும் அதனூடு பாயும் மின்னோட்டத்தின் மாறல் வீதத்துக்குமிடையிலான விகிதத்தினால் தரப்படும். பன்னாட்டு அளவீட்டு முறைமையின்படி மின்தூண்டலின் அலகு என்றி (H) ஆகும். வழமையாக மின்தூண்டிகளின் அளவுகள் 1 µH (10−6H) யிலிருந்து 1 H வரை மாறுபடும். பல மின்தூண்டிகள் இரும்பு அல்லது பெரைட்டு போன்றவற்றாலான காந்த அகணியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் மின்தூண்டியின் காந்தப்புல அளவு அதிகரித்து மின்தூண்ட அளவும் அதிகரிக்கும். தடையி மற்றும் கொள்ளளவி ஆகியவற்றைப் போல் மின்தூண்டியும் மின்னணுச் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படும் செயலறுநிலை நேரியல் மின்சுற்று மூலமாகும். மின்தூண்டிகள் பெரும்பாலும் ஆடலோட்ட மின்னணு உபகரணங்களிலும், குறிப்பாக வானொலி உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்சுற்றுக்களில் ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து நேரோட்ட மின்னோட்டத்தை மட்டும் உள்வாங்க அனுமதிக்கும். இவை மின் வடிகட்டிகளில் வெவ்வேறு மீடிறன் கொண்ட சமிக்கைகளைப் பிரித்தெடுக்கும் தேவைக்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாங்கிகளில் இசைவாக்கல் சுற்றுக்களில் மின்தூண்டிகளும் கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

கணித விவரிப்பு[தொகு]

மாறும் மின்னோட்டத்தின் விளைவாக உருவாகும் காந்தப் புலத்தை காந்த பாயம் கொண்டு அளவிடலாம். மாறும் காந்த பாயம், மொத்த சுருள்களின் எண்ணிக்கை, மின்னழுத்தம் ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு எடுத்துரைக்கின்றது.

மின்னழுத்தம் = சுருள் எண்ணிக்கை X மாறும் காந்த பாய விகிதம்

நுட்பியல் சொற்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alexander, Charles; Sadiku, Matthew. Fundamentals of Electric Circuits (3 ed.). McGraw-Hill. p. 211. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்தூண்டி&oldid=2315595" இருந்து மீள்விக்கப்பட்டது