மிடி
| பன்னாட்டுத் தரநிலை | |
|---|---|
| உருவாக்கியவர் | மிடி உற்பத்தியாளர்கள் சங்கம் |
| அறிமுகம் | பெப்ரவரி 1, 1983 |
| தொழிற்துறை | இசைத் தொழில்நுட்பம் |
| இணைப்பான் வகை | 5‑pin DIN (நவீன மாற்றுகள்: அகிலத் தொடர் பாட்டை, புளூடூத், ஈதர்நெட்) |
| இணக்கமான வன்பொருள் | Serial transmission at 31,250 baud |
| Physical range | 15 மீட்டர் (50 அடி) வரை |
| இணையதளம் | https://www.midi.org |
மிடி (MIDI - Musical Instrument Digital Interface, இசைக்கருவி எண்ணிம இடைமுகம்) என்பது இசைக்கருவிகள், கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகள் தங்களுக்குள் ஒலித் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு உலகளாவிய இசை தொழில்நுட்பத்தரநிலை / நெறிமுறை ஆகும்.[1] இது இசை ஒலிகளை நேரடியாகப் பதிவு செய்யாமல் அந்த ஒலியை உருவாக்குவதற்கான குறிப்புகளை மட்டுமே தரவுகளாகச் சேமிக்கிறது. மிடி முறையில் விசைப்பலகை இசைக்கருவி, தாளக் கருவி, காற்றிசைக் கருவி போன்ற பல வகை கருவிகளை இணைக்கலாம். ஒரு கருவியில் வாசிக்கப்படும் தகவல் மின்சார கம்பி வழியாக மற்ற கருவிகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த தகவலைப் பெற்ற கருவி தன் உள்ளமைப்பின் படி ஒலியை உருவாக்குகிறது. இதனால் ஒரே இசைத் தகவலைப் பயன்படுத்தி பல்வேறு ஒலிப்பாங்குகளில் இசையை உருவாக்க முடிகிறது.
பல கணினி அமைப்புகள் மிடி இணைப்பை ஆதரிக்கத் தொடங்கின. இசை உருவாக்கும் மென்பொருட்கள் மிடி தகவலைப் பயன்படுத்தி துல்லியமான இசை அமைப்புகளை உருவாக்கும் திறன் பெற்றன. மிடி தொழில்நுட்பம் மேடை நிகழ்ச்சிகள், ஒலி அமைப்புகள், ஒளி கட்டுப்பாடு போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. காலத்திற்கேற்ப மிடி தரநிலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான இரண்டாம் பதிப்பு (MIDI 2.0) அதிக துல்லியத்தையும் இருவழி தகவல் பரிமாற்றத்தையும் வழங்குகிறது. மிடி உருவாக்கப்படும் காலத்திற்கு முன் பல நிறுவனங்கள் தயாரித்த இசை கருவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட முடியாத நிலை இருந்தது. மிடி அறிமுகமான பிறகு ஒரே தரநிலையைப் பின்பற்றும் முறையில் பல இசைக்கருவிகள் இணைந்து செயல்பட முடிந்தது.

ஒரு இசைக்கலைஞர் மின்னணு விசைப்பலகையில் ஒரு கட்டையை அழுத்தும்போது எந்தக் குறிப்பு ஒலிக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் மற்றும் எவ்வளவு அழுத்தத்துடன் ஒலிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்தத் தொழில்நுட்பம் மூலம் கடத்தப்படுகின்றன. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நினைவக இடத்திலேயே நீண்ட நேர இசைத் தரவுகளைச் சேமிக்க முடிகிறது.
இந்தத் தொழில் நுட்பம் 1980'களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. பல நாடுகளின் இசை தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இதை உருவாக்கின. பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் இசைக்கருவிகள் தடையின்றி ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டது. ஒரு கணினியில் உருவாக்கப்பட்ட இசைக்கோப்பை மற்றுமொரு மின்னணு இசைக்கருவியில் ஒலிக்கச் செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ இது வழிவகுக்கிறது. இசையமைப்பாளர்கள் மற்றும் ஒலியமைப்பாளர்கள் தங்கள் பணிகளை எளிமையாகவும் துல்லியமாகவும் செய்வதற்கு இத்தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கிறது.
இசைத் துறையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் தனி ஒருவரே பல இசைக்கருவிகளின் ஒலிகளை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான இசைத்தொகுப்பை உருவாக்க முடியும். மேடை நிகழ்ச்சிகளின் போது ஒளியமைப்பு மற்றும் பிற மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இது மென்பொருள் சார்ந்த வடிவங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இசை கல்வி, மேடை நிகழ்ச்சி, இசை பதிவுத்துறை மற்றும் நவீன இசை உருவாக்கத்தில் இதன் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
மிடி 2.0
[தொகு]மிடி 2.0 ஒரு புதிய இசை தொழில்நுட்ப புரட்சி: அறிமுகம்: ஜனவரி 17, 2020 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 'NAMM' கண்காட்சியில் மிடி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. யமஹா, மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் இணைந்து இதை உருவாக்கின. இது பழைய மிடி 1.0 கருவிகளுடன் வேலை செய்யும் அதே வேளையில், இரண்டு பக்கமும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் (Bidirectional) வசதியைக் கொண்டது.
முக்கிய சிறப்பம்சங்கள்: நீண்ட கால ஆராய்ச்சி: இதற்கான பணிகள் 2005-லேயே தொடங்கிவிட்டன. பல சோதனைகளுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வந்துள்ளது.
வேகமான தொடர்பு: இது ஈதர்நெட் (Ethernet) மற்றும் வயர்லெஸ் (Wireless) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மிக வேகமாகச் செயல்படும்.
மேம்படுத்தப்பட்ட தரம்: இதில் ஒலிக் கட்டுப்பாடுகள் மற்றும் துல்லியம் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக, 32,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தி (கண்ட்ரோலர்களைப்) பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது.
பழைய கருவிகளுடன் இணைப்பு: பழைய மிடி 1.0 கருவிகளைப் பயன்படுத்துபவர்களும் சில மாற்றங்கள் மூலம் இந்த புதிய வசதிகளைப் பெற முடியும்.
ஒலியால் கட்டுப்படுத்தப்படும் ஒளி
[தொகு]நிழற்படத் தரவுகள் (Light MIDI Data) என்பது ஒரு மின்னணுத் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பம் ஆகும். இது ஒலியை உருவாக்காமல் வெறும் கட்டளைகளை மட்டுமே கடத்துகிறது. ஒளியமைப்பில் இத்தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.
தகவல் பரிமாற்றம் நிழற்படக் கருவியில் இருந்து ஒரு சமிக்ஞை அனுப்பப்படும்போது அதில் எந்த வகையான விளக்கு எரிய வேண்டும் மற்றும் அதன் நிறம் என்னவாக இருக்க வேண்டும் போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும். இக்கட்டளைகள் ஒரு மையக் கட்டுப்பாட்டுப் பெட்டிக்குச் செல்லும். அங்குள்ள மென்பொருள் இத்தரவுகளை மின்விளக்குகள் புரிந்துகொள்ளும் மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது.
கால அளவு மற்றும் வேகம்: இசைக்கருவிகளோடு விளக்குகளை ஒருங்கிணைக்க அதன் கால அளவு மிக முக்கியமானது. இசையின் ஒவ்வொரு தாளத்திற்கும் ஏற்ப விளக்குகள் மின்னவோ அல்லது நிறம் மாறவோ இத்தரவுகள் துல்லியமான நேரக் கணக்கீட்டை வழங்குகின்றன. ஒரு வினாடியின் மிகச்சிறிய பகுதியில் இக்கட்டளைகள் நிறைவேறுவதால் இசையும் ஒளியும் ஒரே நேரத்தில் இணைந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
அழுத்தத்தின் அளவு இசைக்கருவியின் விசையை எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக அழுத்துகிறோமோ அதற்கு ஏற்ப ஒளியின் பிரகாசத்தை மாற்றியமைக்க முடியும். மெதுவான அழுத்தத்திற்கு மங்கலான ஒளியையும் வேகமான அழுத்தத்திற்கு மிக அதிகப் பிரகாசமான ஒளியையும் உருவாக்குமாறு இதைக் கட்டமைக்க முடியும்.
பயன்படும் இடங்கள்
[தொகு]இசை மேடைகள்: பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகளில் பாடகரின் குரல் அல்லது இசைக்கருவிகளின் வேகத்திற்கு ஏற்பப் பின்னணியில் உள்ள ஆயிரக்கணக்கான விளக்குகள் தானாகவே இயங்குவதற்கு இத்தொழில்நுட்பம் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இது மனிதக் குறுக்கீடு இன்றித் துல்லியமாக ஒளியமைப்பை மாற்ற உதவுகிறது.
திரைப்பட அரங்குகள், நாடகங்கள் அல்லது திரைப்படப் படப்பிடிப்புகளில் குறிப்பிட்ட காட்சிக்குத் தேவையான ஒளியை முன்கூட்டியே திட்டமிட்டு இயக்க இது பயன்படுகிறது. உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒளியின் அடர்த்தியைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ இத்தரவுகள் உதவுகின்றன.
ஒலிப்பதிவுக்கூடங்கள்: இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை உருவாக்கும்போதே அதற்குப் பொருத்தமான ஒளியமைப்பைச் சோதித்துப் பார்க்க நிழற்படத் தரவுகளைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு பாடலின் ஒட்டுமொத்தத் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
கலைக்கூடங்கள், கண்காட்சிகள் மற்றும் அருங்காட்சியகங்களில் அல்லது நவீனக் கலைக் கண்காட்சிகளில் பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது அங்குள்ள விளக்குகள் ஒளிர்வதற்கும் இக்கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது.
இசை கல்வியில் மிடி
[தொகு]இசைக் கல்வியில் மிடி (MIDI-Musical Instrument Digital Interface) என்பது ஒரு வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது கற்றல் முறையை எளிதாக்கும் ஒரு விரிவான கருவியாகும். முதலாவதாக, இது மாணவர்களின் வாசிப்பை உடனுக்குடன் கணினித் திரையில் இசைக்குறிப்புகளாக (Notation) மாற்றுவதால், காகிதத்தில் குறிப்புகளை எழுதும் சிரமம் குறைகிறது. இரண்டாவதாக, இது ஒரு மெய்நிகர் ஆசிரியராக (Virtual Teacher) செயல்பட்டு, மாணவர்கள் வாசிக்கும்போது ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் கண்டறிந்து திருத்த உதவுகிறது. மூன்றாவதாக, தனி ஒரு மாணவரே பல்வேறு இசைக் கருவிகளின் ஒலிகளை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான பாடலை உருவாக்கும் இசையமைப்பு (Composition) ஆற்றலை வழங்குகிறது. நான்காவதாக, கடினமான இசைக்கோவைகளை அதன் தரம் குறையாமல் மிக மெதுவான வேகத்தில் (Tempo Control) வைத்துப் பயிற்சி செய்ய இது அனுமதிக்கிறது.
ஐந்தாவதாக, மல்டி-ட்ராக் ரெக்கார்டிங் (Multi-track) வசதி மூலம், ஒரு மாணவர் தனது சொந்த வாசிப்பின் மேலேயே மற்றுமொரு கருவியின் இசையைச் சேர்த்து ஒரு குழுவாக இசைக்கும் அனுபவத்தைப் பெற முடியும். ஆறாவதாக, இது மாணவர்களின் கேட்கும் திறனை (Ear Training) மேம்படுத்த உதவுகிறது; அதாவது வெவ்வேறு ஸ்வரங்களின் நுணுக்கங்களை ஒலிக்கச் செய்து அவற்றைப் பிரித்தறியும் பயிற்சியை வழங்குகிறது. ஏழாவதாக, விலை உயர்ந்த மற்றும் பெரிய இசைக்கருவிகளை வாங்க வேண்டிய அவசியமின்றி, ஒரு சிறிய கீபோர்டு மூலம் ஆயிரக்கணக்கான உலகளாவிய இசைக் கருவிகளின் (Virtual Instruments) ஒலிகளை அணுகும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது.
இறுதியாக, இது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்; சிறப்பு கல்வியில் (Special Education) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் மற்றும் பயிற்சியில் மிடி மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒலி மட்டும் அல்லாமல் எந்த சாவி / கட்டையை (Key in musical keyboard) அழுத்தப்பட்டது, எவ்வளவு நேரம் அழுத்தப்பட்டது, எவ்வளவு வலிமையுடன் அழுத்தப்பட்டது போன்ற விவரங்களையும் பதிவு செய்கிறது.
கை இயக்கத்தில் சிரமம் உள்ள மாணவர்களுக்கு மிடி இணைக்கப்பட்ட இசைக்கருவிகள் மென்மையான தொடுதலிலும் செயல்படும் வகையில் அமைக்கலாம். இதனால் அவர்கள் குறைந்த முயற்சியிலேயே இசை வாசிக்க முடியும். கண் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மிடி மூலம் ஒலி அடிப்படையிலான ஒளி வழிகாட்டல் வழங்கலாம். சரியான சாவி அழுத்தப்படும்போது குறிப்பிட்ட ஒலி அல்லது ஒளி / சைகை கிடைப்பதால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் பயிற்சி செய்ய முடிகிறது.
கற்றலில் கவனம் சிதறல் அல்லது நினைவாற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மிடி மெதுவான வேகம் மற்றும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. ஒரே பாடலை பல முறை ஒரே முறையில் பயிற்சி செய்ய முடிவதால் கற்றல் எளிதாகிறது. மேலும் மிடி பயன்பாடு மாணவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்து ஆசிரியர்கள் அவர்களின் முன்னேற்றத்தை தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மிடி (ஒலி தொழில்நுட்ப தரநிலை) from midi.org". Retrieved 2019-08-01.