மிகப் பெரிய தம்மஸேதி மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகப் பெரிய தம்மஸேதி மணி
Great Bell of Dhammazedi
ဓမ္မစေတီခေါင်းလောင်းကြီး
இடம்யாங்கூர் ஆறு
வகைகோயில் மணி
கட்டுமானப் பொருள்வெண்கலம்
297,103 கிலோகிராம்கள் (655,000 lb)
திறக்கப்பட்ட நாள்5 பெப்ரவரி 1484
அர்ப்பணிப்புசவேடகன் அடுக்குத் தூபி

மிகப் பெரிய தம்மஸேதி  மணி ( Great Bell of Dhammazedi (Burmese: ဓမ္မစေတီခေါင်းလောင်းကြီး [dəma̰zèdì kʰáʊɴláʊɴ dʑí]) என்பது ஒரு வெண்கல மணி ஆகும். இது மிகப் பெரிய வார்ப்பு மணியாக கருதப்படுகிறது. 1484 பெப்ரவரி 5 அன்று இந்த மணியை மியான்மரின் டாகோன் நகரத்தில் உள்ள சவோடகன் தூபிக்கு அன்பளிப்பாக வழங்க பர்மாவின் ஹந்தவாடி ராஜ்யத்தின் அரசரான ஹந்தவாடி உத்தரவிட்டார்.[1]

விளக்கம்[தொகு]

கி.பி. 1484இல் இந்த மணியை நிர்மாணிப்பதற்கான தேதி குறிக்கப்பட்டது. சோதிடர் ஒருவர், இப்போது காலம் சரியில்லை. இந்த மணியிலிருந்து ஓசை வராது என்றார். அந்த ஆண்டிலேயே தம்மஸேதி மணி அங்கே நிர்மாணம் செய்யப்பட்டது. மணியை அடித்தார்கள். ஆனால், அதிலிருந்து வந்த ஒலி இனிமையாக இல்லை.[1]

அக்காலத்திய குறிப்புகளின்படி இந்த மணியானது சுமார் 294 டன் அளவில் செம்பு, வெள்ளி, தங்கம், தகரம் போன்ற உலோகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்த மணியானது 12 முழ உயரம், 8 முழ அகலத்துடன் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டிருந்தது.[2]

கி.பி. 1583இல் சவேடகான் ஸ்தூபியைக் காண காஸ்பரோ பால்பி என்ற வெனிசைச் சேர்ந்த வணிகர் ஒருவர் வந்தார். அவர் தனது பயணக்குறிப்பில், தம்மஸேதி மணியைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் அங்கே மிகப்பெரிய அறை ஒன்றில் பிரம்மாண்டமான மணியைக் கண்டேன். அந்த மணியில் ஒன்றை ஒன்று ஒட்டினாற்போல பெரிய எழுத்துகள் மேலிருந்து கீழ் நோக்கிப் பொறிக்கப்பட்டிருந்தன. அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சவேடகன் தூபியிலிருந்து திருட்டு[தொகு]

16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய பயணிகள் மற்றும் வணிகர்கள் பர்மாவுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். ஃபிலிப் டி பிரிட்டோ இ நிகோட் என்ற போர்த்துக்கீசிய தளபதி. கி.பி. 1590களில் மியான்மரின் சில பகுதிகள் மீது படையெடுத்தார்.  அந்த நேரத்தில், சிரியாமானது (இப்போது தன்லினைன் என அறியப்படுகிறது) பர்மாவின் டூவாங்கூ இராச்சியத்தில் மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது.

கி.பி 1599இல் போருத்கிய தளபதி ஃபிலிப் டி பிரிட்டோ இ நிகோட் மியான்மரின் சில பகுதிகளை வென்றார். பர்மிய மன்னர்கள் சிலரைத் தோற்கடித்தார். மியான்மரில் போர்த்துக்கீசிய ராஜ்யம் அமைந்ததாக அறிவித்தார். போர்த்துகீசிய இந்தியாவின் வைஸ்ராயான ஏரிஸ் டி சல்டானாவின் கீழ் போர்த்துகேய இந்தியா ஆட்சி பர்மியப் பிரதேசத்தில் நிறுவப்பட்டது.

கி.பி. 1608-ல் ஃபிலிப் டி பிரிட்டோ சவேடகன் அடுக்குத் தூபியில் இருந்து தம்மஸேதி மணியைக் கழற்றினர். அதை உருக்கி பீரங்கி போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கில் அதை சிங்கட்டாரா மலைக்குன்றிலிருந்து, உருட்டிக் கீழே கொண்டுவந்தனர். பின்னர் யானைகள் கட்டி இழுக்கும் மரத்தாலான வாகனம் ஒன்றில் மணி ஏற்றி, பாகோ நதியை நோக்கி அதை இழுத்துச் சென்றனர். பாகோ நதியில் ஃபிலிப் டி பிரிட்டோவின் பெரிய படகு காத்திருந்தது. அதனுடன் மிகப்பெரிய மிதக்கும் மரக்கலன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில் மணியை ஏற்றினார்கள். படகு கிளம்பியது.[2] பாகோ நதியும், யாங்கோன் நதியும் சங்கமித்து ஓடும் நீர்ப்பரப்பில் படகு தடுமாறியது. அதிக எடையைத் தாங்க இயலாது மரக்கலன் சரிந்தது. அதனுடன் படகும் கவிழ்ந்தது. இதனால் ஆற்றின் நீருக்குள் மணி மூழ்கிப் போனது.[2]

அடுத்த சில ஆண்டுகளிலேயே பர்மிய அரசரான அனாவுக்பெட்லுன்  தலையெடுத்தார். ஃபிலிப் டி பிரிட்டோவைப் போரில் வீழ்த்தி அவர்களை கழுவேற்றினார்.[3]

தற்போதைய நிலை[தொகு]

அவராலும், அவருக்குப்பின் வந்தவர்களாலும் மணியை ஆற்றுக்குள்ளிலிருந்து மீட்க இயலவில்லை. மணி மூழ்கி நானூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தற்போதுவரை யாராலும் அதை மீட்டெடுக்க முடியவில்லை. அது எங்கே விழுந்து காணாமல் போனது என்ற இடத்தைக்கூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Blagovest Russian Church Bells. "The World's Three Largest Bells". Blagovest Russian Church Bells. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010. {{cite web}}: External link in |publisher= (help)
  2. 2.0 2.1 2.2 "Myanmar's Largest Bell Underwater". Yangon, Myanmar: Myanmar's NET. 2007. Archived from the original on 13 April 2010. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010. {{cite web}}: External link in |publisher= (help)
  3. Donald Frederick Lach; Edwin J. Van Kley (1998). Asia in the Making of Europe, Volume III: A Century of Advance. Book 3: Southeast Asia. Chicago, Illinois: The University of Chicago Press. பக். 1126–1130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-46768-9 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20110629120304/http://www.press.uchicago.edu/presssite/metadata.epl?mode=synopsis&bookkey=42006. பார்த்த நாள்: 22 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகப்_பெரிய_தம்மஸேதி_மணி&oldid=3224693" இலிருந்து மீள்விக்கப்பட்டது