மா. சு. சம்பந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. சு. சம்பந்தன் (பிறப்பு: மே 25, 1923) தமிழக எழுத்தாளர் ஆவார். தமிழக முதல்வர்கள் மூவரிடம் விருதும் பரிசும் பெற்ற பெருமைக்குரியவர். சிறந்த இதழியலாளராகவும், பேச்சாளராகவும், தனித்தமிழ்ப் பற்றாளராகவும், பெரியாரியச் சிந்தனையாளராகவும், பதிப்பியல் முன்னோடியாகவும் விளங்கியவர்.[1] 1966 ஆம் ஆண்டு, 'அச்சுக்கலை' என்ற நூலுக்கு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார். 1982 ஆம் ஆண்டு, 'அச்சும் பதிப்பும்' என்ற நூலுக்கு, எம்.ஜி.ஆர். தமிழக அரசின் பரிசை வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசின் பரிசை, 'தமிழ் இதழியல் வரலாறு' என்ற நூலுக்கு, 1986 ஆம் ஆண்டு பெற்றார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

சம்பந்தன் ஆந்திராவின் நகரி அருகில் மாரம்பேடு எனும் ஊரில், சுப்பிரமணியன் என்பாருக்கு மகனாக 25 மே 1923 இல் பிறந்தார். மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே, மா. சு. சம்பந்தன் என்பதாகும். சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். இவருக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். மூத்த மகனின் பெயர் இளங்கோவன் ஆவார். அவரது வீடு சென்னை நகர் பகுதிகளில் ஒன்றான, பிராட்வே - மண்ணடி பகுதியில், லிங்கி செட்டித் தெருவில் இருந்தது.

பணி[தொகு]

சென்னைக் கன்னிமாரா நூலகத்தில், இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தார். அறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, மாநகராட்சி உறுப்பினராக ஆனார். அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின், 'செனட்' உறுப்பினராக பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில், அதிகம் பயன்படுத்திய தமிழ் அல்லாச் சொற்களான ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்றவற்றை, முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று மாற்றிப் பயன்படுத்த, நடைமுறைகளை கொண்டு வந்தார். தமிழ் பற்றாளரான இவர், தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டு களப்பணி ஆற்றியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

 • சிறந்த பேச்சாளர்கள் - 1947
 • சென்னை மாநகர் - 1949
 • திருச்சி விசுவநாதம் - 1949
 • அச்சுக்கலை - 1959 [2]
 • அச்சும் பதிப்பும் - 1980[3]
 • எழுத்தும் அச்சும் - 1981
 • தமிழ் இதழியல் வரலாறு - 1989
 • தமிழ் இதழியல் சுவடுகள் - 1990 [4]
 • தமிழ் இதழியல் களஞ்சியம் - 1990
 • தொடர்பன் கட்டுரைகள் - 1998

மேற்கோள்கள்[தொகு]

 1. தினமணி நாளேடு
 2. 'அச்சுக்கலை' நூலுக்கு, 1966 ஆண்டு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார்.
 3. http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2
 4. https://www.commonfolks.in/books/m-s-sambandhan
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._சு._சம்பந்தன்&oldid=2955116" இருந்து மீள்விக்கப்பட்டது