மா. இராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலக்கியக் குரிசில் முனைவர் மா. இராமையா (பிறப்பு 1930, ஜொகூர் மாநிலம், தங்காக் நகர்) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிறுகதை மன்னர் எனச் சிறப்புப் பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். தனது கதை மாந்தர்களுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச்சூட்டி, படிப்போர் கவனத்தைக் கவர்ந்தவர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

மலேசியாவின் ஜொகூர் மாநிலம், தங்காக் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமையாவின் பெற்றோர் சி. மாணிக்கம், பாக்கியம் ஆகியோர் ஆவர். அஞ்சல் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1957 இல் சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொண்டவர். மனைவி சுந்தரமேரி. ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

எழுத்துலக வாழ்க்கை[தொகு]

1946 இல் காதல் பரிசு எனும் சிறுகதையைத் தமிழ் நேசன் இதழில் எழுதி இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். இவரது படைப்புகள், மலேசிய இதழ்களிலும், தமிழகத்தில் சங்கொலி, கல்கி, மஞ்சரி, அமுதசுரபி, தாய், டில்லி தமிழர் சங்கமலர் போன்றவற்றிலும் வெளியாகியுள்ளன. இவர் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 100 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

வெளி வந்த நூல்கள்[தொகு]

 • மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு - (1978, வரலாற்றுத்தொகுப்பு)
 • மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் - 1996, வரலாற்றுத் தொகுப்பு)
 • இரத்ததானம் (சிறுகதைத்தொகுதி, மாயதேவன்-இராமையா கூட்டு)
 • நீர்ச்சுழல் - (புதினம், மாயதேவன்-இராமையா கூட்டு)
 • மூங்கிற் பாலம் - (புதினம்)
 • எதிர் வீடு - (புதினம், தமிழகம், ராணி முத்து வெளியீடு)
 • பரிவும் பாசமும் - (சிறுகதைத் தொகுதி, பொன்னி வெளியீடு)
 • கவி மஞ்சரம் - (கவிதைத் தொகுப்பு)
 • அழகின் ஆராதனை - (புதினம்)
 • சங்கொலி சிறுகதைகள் - (சிறுகதைத் தொகுதி)
 • சுவடுகள் - (புதினம்)
 • சங்கமம் - (புதினம்)

பரிசும் பாராட்டும்[தொகு]

 • வைரத் தோடு (1951, தமிழ் முரசு' நடத்திய சிறுகதைப்போட்டியில் - முதல் பரிசு.)
 • சீதை (1956, சிங்கை பிரதிநிதித்துவ சபை தமிழர் திருநாளை முன்னிட்டு அகில மலாயா ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு.)
 • துன்பத்தின் எல்லை (1963, மலைநாடு வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு.)
 • ஊம் (1963, பினாங்கு புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப்போட்டியில் - முதல் பரிசு)
 • கன்னித் தமிழென்றன் கண் என்ற ஈற்றடியை வைத்து நேரிசைக் கலிவெண்பா, (1965, தைப்பிங் தமிழர் திருநாள் விழாக்குழு நடத்திய கவிதைப்போட்டியில் - முதல் பரிசு)
 • முத்தழகு (1975, தமிழ் நேசன் நடத்திய குறுநாவல் போட்டியில் - இரண்டாம் பரிசு)
 • மன ஊனங்கள் (1979, தமிழ் நேசன் நடத்திய குறுநாவல் போட்டியில் - இரண்டாம் பரிசு)
 • மனக் கதவு (1990, மயில்' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு)
 • படிப்புக்கு ஏற்ற வேலை (1992, தமிழ் ஓசை நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியில் - மூன்றாம் பரிசு)
 • அழகின் ஆராதனை (1992 சிலாங்கூர் மாநிலத்தில், கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய புதினம் போட்டியில் பரிசு பெற்றது.)
 • சங்கொலி சிறுகதைகள் (1993, தமிழகம் லில்லி தேவ சிகாமணி நினைவு இலக்கியப் பரிசுகள் திட்டம் - சிறுகதைப் பிரிவில் - சிறப்புப் பரிசு)
 • வெற்றியிலும் ஒரு தோல்வி (1994, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு
 • ஆறு மாதங்கள் (1975, தமிழ் நேசன் பவுண் பரிசு திட்டத்தின் கீழ் நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றது
 • பறி 1976, கீழ் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை ஆய்வில் தங்கம் வென்றது.)
 • மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1995ஆம் ஆண்டுவரை நடத்திய பத்து சிறுகதைப் போட்டிகளில் இருமுறை இரண்டாம் பரிசுகளும், இருமுறை மூன்றாம் பரிசுகளும், இருமுறை ஆறுதல் பரிசுகளும் பெற்றுள்ளார்.
 • பத்துமலைத் தமிழர் திருநாள் விழாக் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

ஆய்வரங்கம்[தொகு]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் திரு. இராமையாவின் படைப்புக்கள் மீது நடத்திய ஆய்வரங்கத்தில் (1967) வாசிக்கப்பட்ட கட்டுரைகளை மா.இராமையாவின் இலக்கியப்பணி எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு இலக்கியப்பணிக்கு முத்திரையாக விளங்குகிறது.

விருதுகள்[தொகு]

 • 'பொன்னி' திங்களிதழ், 1967-ஆம் ஆண்டு வழங்கிய விருது சிறுகதை மன்னன்.
 • சென்னை கவிஞர் பாசறை, 1978-ஆம் ஆண்டு பொன்னாடை அணிவித்து, மலர்முடி சூட்டி, மலர் செங்கோல் அளித்து வழங்கிய விருது இலக்கிய குரிசில்.
 • மேன்மை தாங்கிய ஜொகூர் மாநில சுல்தான் 1979-ஆம் ஆண்டு, தனது பிறந்த தினத்தில், பி.ஐ.எஸ் எனும் விருதினை வழங்கி கௌரவித்தார்.
 • 1992 இல் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்திய சோலை இருசன் மணி விழாவில் எழிற்கவி ஏந்தல் விருது வழங்கப்பட்டது.
 • 1993 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பொற்கிழி அளித்து கௌரவித்தது.
 • 1994 இல் மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம் 'கவிமஞ்சரம்' பா தொகுதிக்காகப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தது.
 • 1994 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது 6-ஆவது பேராளர் மாநாட்டில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டியது.
 • 1994 இல் அமெரிக்கா உலகப் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்காக முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
 • 1995 இல் கோலாலம்பூர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாக்குழு பொன்னாடை போர்த்தி, பண முடிப்பு வழங்கிச் சிறப்பு செய்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._இராமையா&oldid=1224804" இருந்து மீள்விக்கப்பட்டது