மா. இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா. இராமமூர்த்தி
2000-களில் இராமமூர்த்தி
2000-களில் இராமமூர்த்தி
பிறப்பு18 ஏப்ரல் 1948 (1948-04-18) (அகவை 75)
அதிகாரப்பட்டி, பிரிக்கப்படாத
சேலம் மாவட்டம்,
சென்னை மாகாணம்,
இந்திய மேலாட்சி
(தற்போது
தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
தொழில்கவிஞர்
மொழிதமிழ்
குடியுரிமைஇந்தியர்
கல்விஇளங்கலை பொருளியல்
கல்வி நிலையம்சர் தியாகராயா கல்லூரி, சென்னை
காலம்1970- தற்போது வரை
வகைமரபுக்கவிதை
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த மரபுக் கவிதை விருது
தமிழ்ச்செம்மல் விருது
துணைவர்
  • அமிர்தம் (தி. 1978)
பிள்ளைகள்அரவிந்த்குமார்
இந்துமதி
இளமதி
அரசகுமார்
பெற்றோர்மாரியம்மாள் (தாய்)
ந.மாணிக்கம் (தந்தை)

மா.இராமமூர்த்தி (பிறப்பு 18 ஏப்ரல் 1948) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அபராசிதவர்ம பல்லவன் (2010) என்ற வாழ்க்கைக் காப்பியம் உட்பட நான்கு நூல்களை இயற்றிய இவர், தமிழ்நாட்டு அரசின் சிறந்த மரபுக் கவிதை விருது, தமிழ்ச்செம்மல் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். பல கவியரங்க நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கவிதை வாசித்துள்ளார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

தற்போதைய தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகாரப்பட்டி என்ற சிற்றூரில் 18 ஏப்ரல் 1948 அன்று மாரியம்மாள் -ந.மாணிக்கம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இராமமூர்த்தி.

கல்வி[தொகு]

1953-54 காலகட்டத்தில் அதிகாரப்பட்டி வட்டாரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றார் இராமமூர்த்தி. பின்னர் அப் பள்ளி 1963-இல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பெற்ற பின் அங்கேயே பதினோராம் வகுப்பு வரை (1966-67) பயின்றார். இக்காலகட்டத்தில் ஏட்டுக் கல்வி மேலேயே தன் கவனம் இருந்ததாகப் பின்னாளில் நினைவுகூர்ந்தார்.[1]

1967-68 இல் கிருட்டிணகிரி அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் சேர்ந்து புகுமுகக் கல்வியை நிறைவுசெய்த இராமமூர்த்தி, பின் சென்னை சர் தியாகராயா கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பொருளியல் (1970-73) பயின்றார்.[1]

பணி[தொகு]

13 சூலை 1976 அன்று தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் (ஆவின்) விரிவாக்க அலுவலராகப் பணியைத் தொடங்கிய இராமமூர்த்தி, 30 ஏப்ரல் 2006 அன்று ஓய்வு பெற்றார்.[1]

இலக்கியப் பணி[தொகு]

பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில், அரசியல் மேடைகளில் பாடப்பெற்ற பாடல்களால் ஆவல் கொண்ட இராமமூர்த்தி, திரைப்படப் பாடல் மெட்டில் தானும் ஒரு பாடலை எழுதி மற்றொருவரிடம் அளித்துப் பாடுவித்தார். இதுவே அவரின் இலக்கிய ஆவலுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.[1]

சர் தியாகராயா கல்லூரியில் 1970-71 ஆண்டுமலரில் காணும் கதிரவன் என்னும் தலைப்பில் இவரது முதல் கவிதை வெளிவந்து முதற்பரிசு பெற்றது. இது மரபுக்கவிதை ஆகும். தன் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த இலக்கணநூலைக் கற்று யாப்பிலக்கணத்திலும் அதன்வழியே மரபுக்கவிதையிலும் பேராவல் கொண்டார். சென்னை அனைத்துக்கல்லூரி மாணவர் விடுதியில் இருந்தபோது கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்கேற்றார். 17 மார்ச் 1973 அன்று சென்னை வானொலி நிலையத்தின் இளைய பாரதம் நிகழ்ச்சியில் கவிதை வாசித்தார்.[1] இதன்பின் தன் அரசுப்பணிக் காலத்தில் இவர் கவிதை எதையும் எழுதவில்லை.

2003-ஆம் ஆண்டு பாவலர் மணிவேலனாரைச் சந்தித்த இராமமூர்த்தியின் கவிதை உணர்வு மீண்டும் புத்துணர்வு பெற்றது. அன்னாரின் வரலாற்றை பாவலர் மணிவேலனார் வாழ்க்கைக் காப்பியம் என்ற தலைப்பில் இயற்றினார். அந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கவிஞர் சுரதா, "வாழும் காலத்தில் வாழும் கவிஞருக்கு எழுதப்பட்ட முதல் காப்பியம்" எனப் பாரட்டினார். சிலம்பொலி செல்லப்பன் தன் அணிந்துரையில் இராமமூர்த்தியின் கவிதை ஆற்றல் பண்டைய இலக்கிய நடையை ஒத்திருப்பதாகப் புகழ்ந்தார்.

28 திசம்பர் 2004 அன்று ஜெயா தொலைக்காட்சியில் கவிதை வாசித்துள்ளார்.

இராமமூர்த்தியின் இரண்டாம் படைப்பான பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ், 2009-இல் வெளிவந்தது. ஏனைய பிள்ளைத்தமிழ் நூல்கள் போலன்றி 'காப்பு' பருவத்தில் இறைவணக்கத்துக்கு மாற்றாக இயற்கை வணக்கத்தை இயற்றினார். இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கவிஞர் கா. வேழவேந்தன், இப் படைப்பின் முதல் நான்கு வரிகளான

ஒளியின் அணுக்கள் கூட்டத்தால்

உதித்த மொழியுள் முதல்மொழியே

ஒண்தீந்தமிழின் உணர்ந்தோர்கள்

உரைக்கும் தாயே தாள்பணிந்தேன்.

என்பன முத்தாய்ப்பாக உள்ளதாகப் பாராட்டினார் (இராமமூர்த்தி தன் கவிதை வாசிப்புகளை இவ்வரிகளுடனே தொடங்குவார்). இப் படைப்பின் மற்றொரு அணிந்துரையை ஏர்வாடி இராதாகிருஷ்ணன் எழுதினார்.

மணிவேலனார் அளித்த ஊக்கத்தால் 2010-இல் அபராசிதவர்ம பல்லவன் என்ற வரலாற்றுக் காப்பியத்தை (430 எண்சீர் விருத்தப் பாடல்கள் கொண்டது) இயற்றி வெளியிட்டார். பல்லவப் பேரரசின் இறுதி மன்னன் அபராசித வர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இக் காப்பியத்துக்கு 13 ஏப்ரல் 2012 அன்று தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் 'மரபுக் கவிதை' எனும் வகைப்பாட்டில் விருதும் .30,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.[1]

நான்காம் படைப்பாக மணம் மாறா மரபுக் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் இராமமூர்த்தி. இத் தொகுப்பில் இவரின் தொடக்கக் கவிதைகள் முதற்கொண்டு இடம்பெற்றுள்ளன.

2021 மே நிலவரப்படி இன்னும் இரு நூல்களை அச்சிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

பாவலர் மணிவேலனார் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்.

தன் சொல் பயன்பாடு இலக்கியத்தன்மை கொண்டது எனினும் அனைவரும் மொழிப்புரை இன்றிப் புரிந்துகொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், புதுக்கவிதை எழுதுவோரும் மரபுக்கவிதை எழுதும் நிலை வரவேண்டும் என்பதைத் தன் ஆவலாகக் குறிப்பிட்டார்.[1]

கவிதைகள் வெளிவந்த இதழ்கள்[தொகு]

  • ஔவையார் இதழ்
  • பொதுநூலகச் செய்தி மடல்
  • மீனாட்சி மருத்துவ மலர்
  • தெளிதமிழ்
  • மீண்டும் கவிக் கொண்டல்
  • அறிவின் வழி
  • குயில்

படைப்புகள்[தொகு]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2003-2006 (?) பாவலர் மணிவேலனார் வாழ்க்கைக் காப்பியம் செய்யுள்
2009 பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ் செய்யுள்

(பிள்ளைத்தமிழ்)

கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் - 636 905[2]

2010 அபராசிதவர்ம பல்லவன் வரலாற்றுக் காப்பியம்
2011-2021(?) மணம் மாறா மரபுக் கவிதைகள்
அச்சில் தலைப்பு தெரியவில்லை
அச்சில் தலைப்பு தெரியவில்லை

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது முகமை குறிப்பு
2012 சிறந்த மரபுக் கவிதை தமிழ் வளர்ச்சித் துறை,

(தமிழ்நாட்டு அரசு)[3]

அபராசிதவர்ம பல்லவன் காப்பியத்துக்காக

(13 ஏப்ரல் 2012 அன்று வழங்கப்பட்டது)

2019 தமிழ்ச்செம்மல் விருது 4 நவம்பர் 2020

அன்று வழங்கப்பட்டது[4]

புகழ்[தொகு]

இவரது பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ் நூலை சேலம் அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த இளையராஜா என்ற மாணவர் ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பாடத்திட்டத்தில் அபராசிதவர்ம பல்லவன் காப்பியம் இடம்பெற்றுள்ளது.[1]

குடும்பம்[தொகு]

15 மார்ச் 1978 அன்று தன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணத்தில் அமிர்தம் என்பாரை மணந்தார் இராமமூர்த்தி. இவர்களின் மூத்த மகன் அரவிந்த்குமார், கலைமகள் என்பாரை மணந்து ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியராகப் பணிபுரிகிறார்.

இராமமூர்த்தியின் மூத்த மகள் இந்துமதி சேலத்திலும் இளைய மகள் இளமதி பாலக்கோட்டிலும் வாழ்கின்றனர்.

இராமமூர்த்தியின் இளைய மகன் அரசகுமார் தருமபுரியில் சொந்தத் தொழில் செய்கிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 தமிழ்ச் செம்மல் விருது 2019 ஆம் ஆண்டிற்கான விருது பெற்ற கவிஞர் மா.இராமமூர்த்தி /தடைகளை உடை/ தருமபுரி, பார்க்கப்பட்ட நாள் 2022-11-24
  2. Says, ஒரு அரிசோனன் (2015-03-27). "பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
  3. "தமிழ்ச்செம்மல் விருது – தமிழ் வளர்ச்சித் துறை" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
  4. "தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த முதல்வர் பழனிசாமி! | EPS – நியூஸ்7 தமிழ் – Trichy Telegram – Trichy City News for you!" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._இராமமூர்த்தி&oldid=3697802" இலிருந்து மீள்விக்கப்பட்டது